பாட்டி ஒருவருக்கு தபால்வழி வாக்குச்சீட்டை பதிவுசெய்ய உதவி பாட்டி ஒருவருக்கு தபால்வழி வாக்குச்சீட்டை பதிவுசெய்ய உதவி  

தமிழகத்தில் அறவழிப்பட்ட அரசியல் காப்போம், ஆயர்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிப்போம் - தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவையின் தேர்தல் நிலைப்பாடு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வருகிற ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆயர்களின் நிலைப்பாடு குறித்த மேய்ப்புப்பணி அறிக்கை ஒன்றை, தமிழக ஆயர் பேரவையின் தலைவர், மதுரை பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் கையெழுத்திட்டு, மார்ச் 24, இப்புதனன்று வெளியிட்டுள்ளார்.

தமிழகம் சந்திக்கவிருக்கின்ற தேர்தல், தமிழுக்கும், தமிழகத்திற்கும், இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கும், அரசியல் சாசனம் வகுக்கும் சனநாயகம், சமத்துவம், சமயச்சார்பின்மை என்னும் மதிப்பீடுகளுக்கும் மிகப் பெரிய சவால்களைச் சந்திக்கும் ஒன்று எனக் கூறும் ஆயரின் அறிக்கை, இத்தேர்தலில், மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிப்போம் என்று கூறியுள்ளது.

இந்திய நடுவண் அரசின் அண்மைக்கால கொள்கைகள், திட்டங்கள் ஆகிய அனைத்தும் குடிமக்களை அதிகாரப்படுத்துவதாய் இல்லை என்றும், சனநாயக விதிகள் மீறப்படும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் கொடுங்கோல் சட்டங்களால், மானுட உரிமைகள் மோசமாக மீறப்படுகின்றன என்றும், அவ்வறிக்கை கூறியுள்ளது.

தமிழகத்தை தற்போது ஆளும் அரசு, நடுவண் அரசின் எந்தக் கொள்கையையும் கேள்விக்குள்ளாக்குவதில்லை, மற்றும், அதற்கு வெளிப்படையாக ஆதரவும் அளித்துவருவது, வருத்தம் தருகிறது என்றும், அவ்வறிக்கை கூறியுள்ளது.

அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது, மதவாத சக்திகளின் வெற்றியாகவே அமையும் என நம்புகிறோம் என்றும், தமிழக மக்களைக் காத்துவரும் சமுதாய நல்லிணக்கம், தமிழரின் வேலைவாய்ப்பு, மொழிவழிப்பட்ட அடையாளமெல்லாம் சிதைந்துவிடுமோ என்றும் அஞ்சுகிறோம் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

சனநாயகம், சமுதாய நீதி, சமத்துவம், உடன்பிறந்த உணர்வு, சமுதாய நல்லிணக்கம், போன்ற இயேசுவின், மற்றும், இந்திய அரசியல் சாசனத்தின் மதிப்பீடுகளை உயிர்பெறச்செய்வதற்கும், தமிழ்மொழி, மரபுகள், தமிழர்தம் வளர்ச்சி மற்றும், சிறுபான்மையினர் நலன் காக்கப்படுவதற்கும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்யும் நோக்குடன் இத்தேர்தலில் கவனத்தோடு கடமையாற்றவேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம் என, தமிழக ஆயர் பேரவையின் அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது. (Ind.Sec/Tamil)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 March 2021, 15:26