அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. 

அருள்பணி சுவாமிக்கு 4வது முறையாக பிணையல் மறுப்பு

நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதற்காக நம்பிக்கையோடு தொடர்ந்து செபிப்போம் -இயேசு சபையினரின் இந்தியத் தலைவர், அருள்பணி ஜெரோம் டி’சூசா

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மும்பை டலோஜா சிறையில் 150 நாள்களாக அடைக்கப்பட்டுள்ள 84 வயது நிரம்பிய இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை, பிணையலில் விடுவிக்கவேண்டும் என்ற மனுவை, நான்காம் முறையாகத் தள்ளி வைத்துள்ளது, சிறப்பு நீதிமன்றம் ஒன்று.

அருள்பணி  ஸ்டான் சுவாமி அவர்கள், பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது, மற்றும், அவரது முதிர்ந்த வயதைக் காரணம் காட்டி, அவருக்குப் பிணையல் வழங்கப்படவேண்டும் என்று, அவரது வழக்கறிஞர்கள் சமர்ப்பித்திருந்த மனுவை ஏற்க முடியாது என்று, NIA எனப்படும், இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின், சிறப்பு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி D.E. Kothlikar அவர்கள் அறிவித்துள்ளார்.

அருள்பணி  ஸ்டான் சுவாமி அவர்களுக்கு பிணையல் மறுக்கப்பட்டுள்ள செய்தி, இந்திய கத்தோலிக்க சமுதாயத்தை மிகவும் வேதனையடையச் செய்துள்ளவேளை, இது குறித்து இயேசு சபையினரின் இந்திய தலைவர் அருள்பணி ஜெரோம் ஸ்தனிஸ்லாஸ் டி’சூசா அவர்களும், தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்து, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதற்காக நம்பிக்கையோடு தொடர்ந்து செபிப்போம் என்றும், இந்த வழக்கு, நீதியான முறையில் விசாரிக்கப்பட்டபின், அருள்பணி  ஸ்டான் சுவாமி அவர்கள், விடுதலை செய்யப்படுவார் என்றும், அருள்பணி ஜெரோம் டி’சூசா அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், அருள்பணி  ஸ்டான் சுவாமி அவர்களுக்கு பிணையல் வழங்கப்படவேண்டும் என்பதற்காக, தெற்கு ஆசிய இயேசு சபை அமைப்பும், இணையம்வழி சிறப்பு செபங்களையும் நடத்தி வருகிறது.

அருள்பணி ஸ்டான் சுவாமி என்று அவர்களைப் பிணையலில் விடுதலை செய்யவேண்டும் என்று சமர்ப்பிக்கப்பட்ட மனுவை முதலில், பிப்ரவரி 16, பின்னர், மார்ச் 02, பின்னர், மார்ச் 16, பின்னர் மார்ச் 22 என ஒவ்வொரு முறையும் விசாரணை தேதிகளை தள்ளிவைத்து வருகிறது, சிறப்பு நீதிமன்றம்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காக உழைத்துவந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தேசத் துரோக நடவடிக்கையில் ஈடுபட்டார் என அநீதியாய்க் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2021, 16:01