விவிலிய சுருள்களின் பகுதிகள் விவிலிய சுருள்களின் பகுதிகள் 

1900 ஆண்டு கால பழமையுடைய விவிலிய சுருள்கள் கண்டுபிடிப்பு

விவிலியச் சுருள், அரிதான நாணயங்கள், 6000 ஆண்டு பழமையுடைய எலும்புக்கூடு, 10,500 ஆண்டு பழமையான கூடை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

1900 ஆண்டு கால பழமையுடைய விவிலிய சுருள்களின் பகுதிகள், இஸ்ரேல் நாட்டில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், கடந்த அறுபது ஆண்டுகளில் கிட்டியுள்ள மிக அரிதான புதையல் இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

IAA எனும் இஸ்ரேல் தொல்பொருள் துறை, 2017ம் ஆண்டில் பாலைவனக் குகைகளில் துவக்கிய அகழ்வாராய்ச்சியின் பயனாக, விவிலியத்தின், பழைய ஏற்பாட்டின் ஏறக்குறைய 80 வெவ்வேறு எழுத்துப் பிரதிகள் கிட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஏற்பாட்டின் செக்கரியா, மற்றும் நாகூம் நூல்களோடு தொடர்புடைய இந்த எழுத்துப் பிரதிகள், கிரேக்கத்தில் எழுதப்பட்டுள்ளதாகவும், கடவுளின் பெயர் மட்டும் எபிரேய மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கி.பி. 132 முதல் 136 வரையுள்ள காலக்கட்டத்தில் உரோமைய ஆட்சியாளர்களுக்கு எதிராக புரட்சி செய்து, பின்னர் பாலைவனக் குகைகளில் ஒளிந்து வாழ்ந்த Simon Bar Kokhba அவர்களது தலைமையின் கீழ் இயங்கிவந்த புரட்சியாளர்கள் இந்த விவிலியச் சுருள்களை வைத்திருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

யூத பாலைவனங்களில் அகழ்வாராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வுகளின்போது, விவிலிய சுருள்களுடன், அதே காலத்தைச் சேர்ந்த மிக அரிதான நாணயங்கள், 6000 ஆண்டு பழமையுடைய ஒரு குழந்தையின் எலும்புக்கூடு, 10,500 ஆண்டுகளுக்கு முன்னர் பின்னப்பட்ட ஒரு பெரிய கூடை ஆகியவைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2021, 14:59