ஆர்த்தடாக்ஸ் சபை தலைவர்களுடன் கர்தினால் கர்ட் கோக் ஆர்த்தடாக்ஸ் சபை தலைவர்களுடன் கர்தினால் கர்ட் கோக்  

கிறிஸ்தவர்களுக்கு பொதுவான உயிர்ப்புப் பெருவிழா நாள்

நீசேயா பொதுச்சங்கத்தின் 1700ம் ஆண்டு நிறைவு இடம்பெறும் 2025ம் ஆண்டில், உயிர்ப்புப் பெருவிழாவுக்கு பொதுவான தேதி அறிவிக்கப்படுவது பொருத்தமாக இருக்கும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கரும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும், இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவை, ஒரே தேதியில் சிறப்பிப்பது குறித்து, ஓர் ஒப்பந்தம் ஏற்படுவதற்கு, இவ்விரு சபைகளும் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்ற பரிந்துரை ஒன்றிற்கு, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோக் அவர்கள் ஆதரவளித்துள்ளார்.

இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடுவதற்கு, கிறிஸ்தவர்கள் அனைவருக்கும், பொதுவான ஒரு தேதியைக் குறிப்பது, கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிக்கு ஊக்கமூட்டும் அடையாளமாக இருக்கும் என்று, கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தையின் பிரதிநிதி ஒருவர், உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்திடம் (WCC), பரிந்துரைத்துள்ளார்.  

இந்த பரிந்துரையை முன்வைத்துள்ள, துருக்கி நாட்டின் Telmessos, ஆர்த்தடாக்ஸ் பேராயர் Job Getcha அவர்கள், நீசேயாவில் நடைபெற்ற முதல் கிறிஸ்தவ பொதுச்சங்கத்தின் 1700ம் ஆண்டு நிறைவு இடம்பெறும் 2025ம் ஆண்டில், இந்த பொதுத் தேதி அறிவிக்கப்படுவது பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த பரிந்துரை குறித்து சுவிட்சர்லாந்து நாட்டு Kath செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த கர்தினால் கோக் அவர்கள், நாள்காட்டியில், உயிர்ப்புப் பெருவிழா தேதியைக் குறிப்பதில் இந்த மாற்றம் நடைபெறுவதற்கு, நீசேயா பொதுச்சங்கத்தின் ஆண்டு நிறைவு நல்லதொரு வாய்ப்பு என்று தெரிவித்தார்.

325ம் ஆண்டில், நீசேயாவில் நடைபெற்ற முதல் கிறிஸ்தவ பொதுச்சங்கத்தில், வசந்த காலம் தொடங்குவதையடுத்துள்ள பௌணர்மிக்குப்பின் வரும், முதல் ஞாயிறன்று உயிர்ப்புப் பெருவிழா சிறப்பிக்கப்படவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இன்று ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றி, உயிர்ப்புப் பெருவிழா தேதியைக் குறிக்கின்றனர். ஆயினும், 1582ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கிரகோரியன் நாள்காட்டியை, உலகின் பெருமளவான கிறிஸ்தவர்கள் பின்பற்றி, உயிர்ப்புப் பெருவிழா தேதியைக் குறிக்கின்றனர். (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2021, 15:40