புனித யோசேப்பு புனித யோசேப்பு  

நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ள குடும்பங்களுக்கு அழைப்பு

பிலிப்பீன்ஸ் நாட்டு தந்தையர், புனித யோசேப்பின் வாழ்வை, தங்கள் வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் அமைக்குமாறு, அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஐந்நூறு ஆண்டுகளுக்குமுன் இஸ்பானிய மறைப்பணியாளர்களிடமிருந்து பெற்ற கிறிஸ்தவ நம்பிக்கையை மற்றவரோடு பகிர்ந்துகொள்ளுமாறு, பிலிப்பீன்ஸ் நாட்டு ஆயர்கள் குழு ஒன்று, அந்நாட்டு குடும்பங்களுக்கு, மார்ச் 17, இப்புதனன்று, அழைப்பு விடுத்துள்ளது.

பிலிப்பீன்சின் ஆறு மறைமாவட்டங்களைச் சேர்ந்த “Bicol ஆயர்கள்” என்ற குழு வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி அறிக்கையில், போர்த்துக்கீசிய நாடுகாண் பயணி Ferdinand Magellan அவர்களால், பிலிப்பீன்சுக்கு வழிநடத்தப்பட்ட இஸ்பானிய மறைப்பணியாளர்கள், புனித யோசேப்பு பக்தியையும் விட்டுச் சென்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

உலகளாவியத் திருஅவையின் பாதுகாவலராகிய புனித யோசேப்பை சிறப்பாக நினைத்து, அவரிடம் மன்றாடிவரும் இவ்வாண்டில், நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை உணரவும், அதே ஆசீர்வாதங்களை மற்றவருக்கு வழங்கவும், அப்புனிதரிடம் வரம் கேட்போம் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.

பிலிப்பீன்ஸ் நாட்டு தந்தையர், தங்கள் குடும்பங்களுக்கு வழிகாட்டுவதிலும், அவற்றைப் பாதுகாப்பதிலும், புனித யோசேப்பு போன்று, அன்புத் தந்தையராக வாழுமாறு வலியுறுத்திக் கூறியுள்ள ஆயர்கள், புனித யோசேப்பு, பிரச்சனைகளுக்கு மத்தியிலும், திருக்குடும்பத்திற்காக, கடவுள் அமைத்திருந்த திட்டத்தை நிறைவேற்றினார் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிலிப்பீன்ஸ் மக்கள், தாங்கள் பெற்றுள்ள, கத்தோலிக்க நம்பிக்கை எனும் கொடையை தங்களுக்காக மட்டுமல்ல, அதனை மற்றவரோடு பகிர்ந்துகொள்வதற்காகவும் பெற்றுள்ளனர் என்றும், ஆயர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு மத்தியிலும், கத்தோலிக்கர் தங்கள் நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளுமாறு பிலிப்பீன்ஸ் ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். (UCAN)

புனித யோசேப்பு உலகளாவியத் திருஅவையின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பிக்கப்பட்டுவரும் புனித யோசேப்பு யூபிலி ஆண்டு, வருகிற டிசம்பர் 8ம் தேதியன்று நிறைவடையும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 March 2021, 12:45