தலைமைச் சங்கத்தின் முன் விசாரணைக்கு உள்ளான பேதுருவும், யோவானும் - தி.ப. 4 தலைமைச் சங்கத்தின் முன் விசாரணைக்கு உள்ளான பேதுருவும், யோவானும் - தி.ப. 4 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 2 – கடவுள் தேர்ந்துகொண்ட அரசர் 1

இவ்வுலகின் கருத்தியல்கள், மத நிறுவனங்களில் புகுந்துவிட்டால், அப்போது, மத நிறுவனங்களிலும் உலகக் கொள்கைகளுக்கும், இறைவனின் கொள்கைகளுக்கும் இடையே மோதல்கள் நிகழ வாய்ப்புண்டு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: திருப்பாடல் 2 – கடவுள் தேர்ந்துகொண்ட அரசர் 1

இன்று நாம் 2வது திருப்பாடலில் நம் விவிலியத் தேடலைத் துவக்குகிறோம். "நற்பேறு பெற்றவர் யார்?" என்ற கேள்வியுடன் முதல் திருப்பாடலைத் துவக்கிய ஆசிரியர், "வேற்றினத்தார் சீறி எழுவதேன்?" என்ற கேள்வியுடன் 2வது திருப்பாடலை ஆரம்பிக்கிறார். "நற்பேறு பெற்றவர் யார்?" என்ற கேள்வியின் விடையாக, நல்லாரின் குணங்களையும், அவருக்கும், பொல்லாருக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும், இருவருக்கும் வரும் இறுதி முடிவையும் முதல் திருப்பாடலில் விளக்கிக்கூறினார், ஆசிரியர். இரண்டாவது திருப்பாடலில், உலகின் அரசர்களுக்கும், கடவுள் தேர்ந்து கொண்ட அரசருக்கும் இடையே உருவாகும் மோதல்களை வெளிச்சமிட்டுக் காட்ட முயன்றுள்ளார்.

2வது திருப்பாடலை தாவீது எழுதினார் என்பது, மரபுவழித் தகவல். இதை இன்னும் உறுதி செய்யும்வண்ணம், திருத்தூதர் பணிகள் நூல், 4ம் பிரிவில், ஒரு குறிப்பு காணப்படுகிறது. துவக்க கால கிறிஸ்தவர்கள், 2வது திருப்பாடலின் ஆரம்ப வரிகளை, தங்கள் இறைவேண்டலில் பயன்படுத்தியுள்ளனர். அந்த இறைவேண்டலில், இத்திருப்பாடலின் வரிகள், ‘தாவீது வாயிலாக தூய ஆவி மூலம்’ (தி.ப. 4:25) கூறப்பட்ட வரிகள் என்ற குறிப்பைக் காண்கிறோம். இந்த இறைவேண்டலில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களையும், இந்த இறைவேண்டல் எந்தச் சூழலில் சொல்லப்பட்டது என்பதையும், கொஞ்சம் ஆழமாகச் சிந்திப்பது, 2வது திருப்பாடலின் கருப்பொருளைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

கால் ஊனமுற்ற ஒருவரை, பேதுருவும், யோவானும் குணமாக்கினர் என்பதை, திருத்தூதர் பணிகள் நூல் 3ம் பிரிவில் வாசிக்கிறோம் (காண்க திருத்தூதர் பணிகள் 3:1-10). அதைத்தொடர்ந்து, அவ்விரு திருத்தூதர்களும், மக்களிடையே நல்லதொரு தாக்கத்தை உருவாக்கிக்கொண்டிருந்த வேளையில், கைது செய்யப்பட்டனர் (காண். தி.ப. 4:1-3). அடுத்தநாள், யூதமதத் தலைவர்கள், மூப்பர்கள், மறைநூல் அறிஞர்கள் முன்னிலையில் விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 'அப்பொழுது பேதுரு, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு' (தி.ப. 4:8) துணிவுடன் பேசினார்.

பேதுருவும் யோவானும் கல்வியறிவற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டனர். நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை. (தி.ப. 4:13-14). இருப்பினும், தலைமைச் சங்கத்தார் தங்களுக்குள் கலந்துபேசி, பின்னர், அவர்களிடம், “இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது” என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர். அதற்கு, பேதுருவும் யோவானும் மறுமொழியாக, “உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்றனர். அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும், தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர். (தி.ப. 4:18-21)

பேதுருவும், யோவானும் விடுதலை அடைந்து திரும்பி வந்ததைக்கண்ட துவக்க கால கிறிஸ்தவக் குழுமம் எழுப்பிய இறைவேண்டலில், 2ம் திருப்பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதோ அப்பகுதி:

திருத்தூதர் பணிகள் 4:23-26

விடுதலை பெற்ற அவர்கள், தங்களைச் சேர்ந்தவர்களிடம் வந்து, தலைமைக் குருக்களும் மூப்பர்களும் தங்களுக்குக் கூறிய யாவற்றையும் அறிவித்தார்கள். இவற்றைக் கேட்ட யாவரும் ஒரே மனத்துடன் தங்கள் குரலைக் கடவுள்பால் எழுப்பி, பின்வருமாறு மன்றாடினர்; “‘ஆண்டவரே, விண்ணுலகையும் மண்ணுலகையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே’. எங்கள் தந்தையும் உம் ஊழியருமாகிய தாவீது வாயிலாக தூய ஆவி மூலம் ‘வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்?பூவுலகின் அரசர்களும் தலைவர்களும் ஆண்டவருக்கும் அவர்தம் மெசியாவுக்கும் எதிராக அணிவகுத்து நின்றனர்’ என்று உரைத்தீர்” என்று, இந்த இறைவேண்டலின் ஆரம்பப்பகுதி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இயேசுவின் சீடர்களும், துவக்ககால கிறிஸ்தவர்களும் மேற்கொண்ட இறைவேண்டலில், தங்களுக்கும், இவ்வுலக சக்திகளுக்கும் இடையே நிகழ்ந்துவரும் மோதலைப்பற்றி கூற, 2ம் திருப்பாடலின் ஆரம்ப வரிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அத்துடன், அந்த வரிகளைச் சொன்னது, தாவீது என்றும், அவர் தூய ஆவியாரால் தூண்டப்பட்டு இந்த வரிகளைச் சொன்னதாகவும் இந்த இறைவேண்டலில் நாம் காண்கிறோம். தொடர்ந்து, அந்த இறைவேண்டலில், இவ்வுலகத் தலைவர்களுக்கும், இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்ததை, குறிப்பிட்டு வேண்டுகின்றனர்:

திருத்தூதர் பணிகள் 4:27-31

"அதன்படியே, (அதாவது, 2ம் திருப்பாடலில் கூறப்பட்டுள்ள சொற்களின்படியே), இந்நகரில் உம்மால் அருள்பொழிவு பெற்ற உமது தூய ஊழியராகிய இயேசுவுக்கு எதிராக ஏரோதும் பொந்தியு பிலாத்தும் பிற இனத்தவரோடும் இஸ்ரயேல் மக்களோடும் ஒன்றுதிரண்டனர். உமது கைவன்மையும் உமது திட்டமும் குறித்து அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தனர். இப்போதுகூட ஆண்டவரே, அவர்கள் அச்சுறுத்துவதைப் பாரும். உம் அடியார் முழுத் துணிவுடன் உமது வார்த்தைகளை எடுத்துக்கூற அருள் தாரும். உமது தூய ஊழியர் இயேசுவின் பெயரால் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும்; அடையாளங்களும் அருஞ் செயல்களும் நடைபெறச் செய்யும்.” இவ்வாறு மன்றாடியவுடன் அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர்.

பேதுருவும், யோவானும், மக்களின் மூப்பர்கள், தலைமைக்குருக்கள், மற்றும், மறைநூல் அறிஞர்கள் கூடியிருந்த சங்கத்திற்கு முன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வை நினைவுகூரும் வேளையில், இதே மதத் தலைவர்களுக்கு முன்னும், இவ்வுலகத் தலைவர்களான பிலாத்து, ஏரோது ஆகியோருக்கு முன்னும், இயேசு விசாரணைக்கு உள்ளானதையும் நினைவுகூருகிறோம். வழக்கு என்ற பெயரில் இயேசுவுக்கு நிகழ்ந்த அந்த அநீதியான நாடகத்தின் ஒரு பகுதியை, நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு விவரித்துள்ளார்:

லூக்கா 22:66-71

பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடிவந்தார்கள்; இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். அவர்கள், “நீ மெசியா தானா? எங்களிடம் சொல்” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்; நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள். இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்” என்றார். அதற்கு அவர்கள் அனைவரும், “அப்படியானால் நீ இறைமகனா?” என்று கேட்டனர். அவரோ, “நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள்” என்று அவர்களுக்குச் சொன்னார். அதற்கு அவர்கள், “இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் வாயிலிருந்து நாமே கேட்டோமே” என்றார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்பட்டுள்ள நிகழ்வையும், விசாரணை என்ற பெயரில், இயேசு சந்தித்த அநீதியையும் இன்றைய விவிலியத்தேடலில் சிந்திக்க காரணம் உள்ளது. உலகத்தலைவர்களுக்கும், கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டத் தலைவர்களுக்கும் இடையே மட்டும் மோதல்கள் நிகழ்வதில்லை, மாறாக, இவ்வுலகின் கருத்தியல்கள், மத நிறுவனங்களில் புகுந்துவிட்டால், அப்போது, மத நிறுவனங்களிலும் உலகக் கொள்கைகளுக்கும், இறைவனின் கொள்கைகளுக்கும் இடையே மோதல்கள் நிகழ வாய்ப்புண்டு என்பதை, இவ்விரு நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த மோதல்களே, 2ம் திருப்பாடலின் மையக்கருத்தாகவும் அமைந்துள்ளன. இதோ, இத்திருப்பாடலின் அறிமுக வரிகள்:

திருப்பாடல் 2:1-2

வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்?  ஆண்டவருக்கும் அவர்தம் அருள் பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப் பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்; ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்.

இத்திருப்பாடலின் முதல் இரு இறைவாக்கியங்களில், 'சீறி எழுதல், சூழ்ச்சி செய்தல், எதிராக அணிவகுத்தல், சதி செய்தல்' ஆகிய செயல்பாடுகளைப் பற்றி கேட்கும்போது, நன்மைக்கும், தீமைக்கும் இடையே, இவ்வுலகில் நிலவும் மோதல்களை எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது.

பிரெஸ்பிட்டேரியன் சபையின் ஊழியராகப் பணியாற்றும் Douglas Douma என்பவர், 2ம் திருப்பாடலை மையப்படுத்தி வழங்கியுள்ள தியானச் சிந்தனைகளை, நம்மைச் சூழ்ந்திருக்கும் உலகம், (The World About Us), நமக்கு மேலிருக்கும் கடவுள் (The God Above Us), நமக்கு முன்னிருக்கும் பாதை (The Path Before Us) என்ற மூன்று பகுதிகளில் வழங்கியுள்ளார். நம்மைச் சூழ்ந்திருக்கும் உலகம் என்ற முதல் பகுதியில், இந்த உலகம் கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார், டக்ளஸ். அவர் வழங்கியுள்ள சிந்தனைகளின் உதவியுடன், நாம் வாழும் இன்றைய உலகைக் குறித்து, நம் சிந்தனைகளை, அடுத்தத் தேடலில் தொடர்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 March 2021, 15:09