மாலை வேளையில், நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள் - மாற்கு 1:32 மாலை வேளையில், நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள் - மாற்கு 1:32 

பொதுக்காலம் 5ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

ஒருவர் குணம் அடைவது, அவரது ஆழ்மனதில் எழும் நம்பிக்கையில் ஆரம்பமாகிறது என்ற அடிப்படை உண்மையை, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்குச் சொல்லித்தருகின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 5ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

அந்த ஊர் பள்ளியில், ஓர் இளம் பெண், புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். அந்த வார இறுதியில், பள்ளியின் நிர்வாகி அவரை அழைத்து, கூடுதலாக ஒரு பணியை கொடுத்தார். ஞாயிற்றுக்கிழமைகளில், அவர், அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று, அங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு சிறுவனுக்கு கணக்குப் பாடம் சொல்லித் தரவேண்டும் என்பதே அந்தப் பணி. புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் என்பதால், நிர்வாகி சொன்னதற்கு மறுப்பு சொல்லமுடியாமல், அந்தப் பெண் அடுத்த நாள் மருத்துவ மனைக்குச் சென்றார். படுக்கையில் கிடந்த அந்தச் சிறுவனைப் பார்த்ததும், அவருக்குப் பெரும் அதிர்ச்சி.

ஒரு தீ விபத்தால் உடலெங்கும் வெந்துபோய் படுத்துக்கிடந்தான் அச்சிறுவன். இவனுக்குக் கணக்குப் பாடம் சொல்லித்தர வேண்டுமா என்று, அந்த இளம் பெண்ணின் மனம் தடுமாறியது. இருந்தாலும், இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே என்பதால், அவனுக்கு அரைமணி நேரம் கணக்குப் பாடம் சொல்லித் தந்தார். தீக்காயங்களுடன் கிடந்த அவனை நிமிர்ந்து பார்க்கவும் தைரியம் இல்லாமல், ஏதோ சமாளித்து, அவனுக்குப் பாடம் சொல்லித்தந்தார், அந்த இளம்பெண். வேதனையில் முனகிக் கொண்டிருந்த அச்சிறுவன், அவ்வப்போது தலையை ஆட்டினான். மீண்டும் அடுத்த ஞாயிறு வருவதாகச் சொல்லி புறப்பட்டார், இளம்பெண். உடலெல்லாம் எரிந்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு, கணக்குப் பாடம் சொல்லித்தந்தது, அவருக்கே வேதனையாக இருந்தது. அடுத்த ஞாயிறு, பள்ளி நிர்வாகியிடம், ஏதாவது சாக்குபோக்கு சொல்லி தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணியபடியே, வீட்டுக்குத் திரும்பினார்.

இருந்தாலும், அடுத்த ஞாயிறு வந்தபோது, அந்த இளம்பெண் அச்சிறுவனைப் பார்க்க எண்ணினார். அவனுக்குப் பாடம் சொல்லித் தரவில்லையென்றாலும், அவனைப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது அவருக்கு. அவர் அங்கு சென்றபோது, மருத்துவமனை வாசலிலேயே அச்சிறுவனுடைய அம்மா அந்த இளம்பெண்ணைச் சந்தித்தார். "நீங்கள்தான் என் மகனுக்கு போன வாரம் கணக்கு சொல்லித் தந்தீர்களா?" என்று கேட்டார். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு சிறுவனுக்கு கணக்கு சொல்லித்தந்தது எவ்வளவு பைத்தியக்காரத்தனமான செயல் என்பதை அந்தத் தாய் தன்னிடம் சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்து, அந்த இளம்பெண் பயந்தார். "கணக்குப் பாடம் சொல்லித் தரவேண்டும் என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததால்தான் நான் அப்படிச் செய்தேன்..." என்று தயங்கி, தயங்கி அந்த இளம் பெண் சமாதானம் சொல்ல ஆரம்பித்தார்.

அந்தத் தாயோ, இளம்பெண்ணின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டார். அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. "நீங்கள் எவ்வளவு பெரிய உதவி செய்துள்ளீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது" என்று அந்தத் தாய் சொன்னதும், இளம்பெண்ணுக்கு ஒரே ஆச்சரியம். அந்தத் தாய் தொடர்ந்தார்: "சென்ற ஞாயிறு நீங்கள் வருவதற்கு முன், என் மகன், தான் உயிர் பிழைக்கமாட்டோம் என்று, அவனே தீர்மானித்துவிட்டான். எனவே, உண்ண மறுத்தான், மருந்து சாப்பிட மறுத்தான். ஆனால், நீங்கள் கணக்குப்பாடம் சொல்லித்தந்த நாளிலிருந்து என் மகனிடம் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 'எனக்கு கணக்குப் பாடம் சொல்லித் தர ஓர் ஆசிரியரை என் பள்ளி அனுப்பியுள்ளது என்றால், நான் கட்டாயம் மீண்டும் பள்ளிக்குத் திரும்புவேன் என்று என் பள்ளியில் உள்ளவர்கள் நம்புகிறார்கள் என்றுதானே அர்த்தம்!' என்று என் மகன் சொல்ல ஆரம்பித்துவிட்டான். நீங்கள் வந்து சென்ற நாளிலிருந்து, தான் பிழைத்துக்கொள்வோம் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை, என் மகனுக்குப் பிறந்துவிட்டது. இந்த ஒரு வாரத்தில் அவனிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டு, ‘டாக்டர்’களே ஆச்சரியப்படுகின்றனர். எல்லாம் நீங்கள் செய்த அற்புதம்" என்று, அந்தத் தாய் கண்ணீரோடு சொல்லச் சொல்ல, அந்த இளம்பெண்ணின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

ஒருவர் குணம் அடைவது, அவரது ஆழ்மனதில் எழும் நம்பிக்கையில் ஆரம்பமாகிறது என்ற அடிப்படை உண்மை, இக்கதையில் வெளிச்சமாகிறது. இதையே இன்றைய ஞாயிறு வாசகங்களும் நமக்குச் சொல்லித்தருகின்றன.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக, உலகெங்கும், மக்களை, தன் அரக்கப்பிடிக்குள் பிணைத்து வைத்திருக்கும் கோவிட்-19 என்ற பெருந்தொற்று, நோயில் வீழ்வது, நோயிலிருந்து மீள்வது, ஆகியவைப்பற்றி, பல உண்மைகளை நமக்குப் புரியவைத்திருக்கும். தடுப்பூசிகள் ஒருபுறம், இந்த நோயின் கிளை நோய்கள் மறுபுறம் என்று, நோய்க்கும், மருந்துக்கும் இடையே, போர் ஒன்று நிகழ்ந்துவருகிறது. இத்தகைய ஒரு சூழலில், நோய்களைக் குறித்த நம் கண்ணோட்டத்தையும், அவற்றை நாம் எதிர்கொள்ளும் வழிகளையும் புரிந்துகொள்ள, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்கு உதவியாக உள்ளன.

நமது நோய்கள் குணமாவதற்குக் காரணங்கள் என்னென்ன? மருந்து, மாத்திரை, மருத்துவ சிகிச்சை இவற்றால் மட்டும் ஒருவர் குணமாகமுடியாது. நலமடைவோம் என்ற நம்பிக்கை, ஒருவர் மனதில் உதிப்பதுதான், அவருக்குத் தேவையான, மிக அவசியமான, முதல் படி. அந்த நம்பிக்கையை, மருத்துவர் தரவேண்டும் என்று, பொதுவாக நாம் எதிர்பார்க்கிறோம். நோயுற்றவரோ, அல்லது, அவரது குடும்பத்தினரோ, மருத்துவர்களிடம், "உங்களை, கடவுள்போல நம்பியிருக்கிறோம்" என்று சொல்வதையும், அந்த மருத்துவர்களில் ஒரு சிலர், "நான் மருந்தும், மாத்திரையும் தான் தரமுடியும், கடவுள்தான் குணம் தரமுடியும்" என்று சொல்வதையும் நாம் கேட்டிருக்கிறோம், அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம். மருத்துவர்கள் மீதும், மருந்துகள் மீதும் நம்பிக்கை இருப்பது அவசியம்தான். ஆனால், அவற்றை விட, நம்மீதும், நம்மைக் காக்கும் கடவுள் மீதும் நம்பிக்கை கொள்வது மிகவும் அவசியம். சில வேளைகளில், இந்த நம்பிக்கை எதிர்பாராத வழிகளில் வந்து சேர்வதையும் நாம் அறிவோம். தீக்காயங்களுடன் போராடி, மனம் வெறுத்து, மரண வாயிலை நெருங்கிவிட்ட அச்சிறுவனுக்கு, கணக்குப்பாடம் சொல்லித் தரவந்த ஆசிரியர், அவரையும் அறியாமல், அச்சிறுவனுக்கு நம்பிக்கை பாடங்களைச் சொல்லித்தரவில்லையா? நம்பிக்கைப் பாடங்களை நாம் கற்றுக்கொள்ள இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.

குணம் பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாதபோது, நலமடைவது கடினமாகிப் போகிறது. முடிவில், இயலாமலும் போகலாம். நம்பிக்கையற்ற நிலையில் இருக்கும் ஒருவருக்குள் உருவாகும் மன அழுத்தங்களை இன்றைய முதல் வாசகம் நமக்குக் காட்டுகிறது. யோபு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வாசகம், துன்பங்களால் நொறுங்கிப்போன ஒருவரது உள்ளத்திலிருந்து எழும் அவலக் குரலாய் ஒலிக்கிறது.

யோபு 7: 1,3-4

மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே?... இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன்.

இப்போது  நாம் கேட்ட இந்த வரிகளை நம்மில் பலர், பலநேரங்களில், பலவிதங்களில் சொல்லியிருக்கிறோம். துன்பங்கள் நம்மைச் சூழும்போது, நம்மிடமிருந்து முதலில் விடைபெறுவன, உணவும், உறக்கமும். துன்பம், ஒரு சூறாவளிபோல நம்மைத் தாக்கும்போது, வேரோடு பிடுங்கப்பட்ட மரத்தைப்போல... சுழல்காற்றில் சிக்கிய ஒரு சருகைப் போல... புயலில் சிக்கியப் படகைப் போல... என்றெல்லாம் நாம் நம்மையே உருவகப்படுத்திக் கொள்கிறோம். துன்பங்களால் நிலைகுலைந்து அலைபாயும் வாழ்வை யோபும் ஓர் உருவகத்தால் கூறியுள்ளார். என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன (யோபு 7:6) என்று கூறியுள்ளார்.

உருவகங்களில் நாம் பேசிக் கொண்டிருப்பதால், மற்றுமோர் உருவகத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்கலாம். துன்பம், புதைமணலைப் போன்றது. புதைமணலில் சிக்கியவர்கள், புதைமணலிலேயே தங்கள் கவனம் முழுவதையும் செலுத்தி, அங்கேயே தங்கி, போராடிக் கொண்டிருந்தால், அந்தப் புதைமணலுக்குள் இன்னும் ஆழமாகப் புதைந்துபோகும் ஆபத்து உண்டு. புதைமணலில் இருந்து நாம் கரையேற வேண்டுமெனில், உறுதியான ஓர் இடத்தில் நிற்கும் மற்றொருவரின் உதவி நமக்குத் தேவை. அவர், நமது கரம் பற்றி, நம்மை மேலே இழுத்தால், நாம் அங்கிருந்து வெளியேற முடியும்.

புதைமணலில் சிக்கியிருந்த யோபு அங்கேயே தங்கிவிடவில்லை. இறைவன் மீது அவர் கொண்ட நம்பிக்கை அவரை, புதைமணலிலிருந்து விடுவித்து, உறுதியான பாறையின் மீது நிறுத்தியது என்பதை நாம் அறிவோம். யோபைப் போல, இறைவன் மீது அசையாத நம்பிக்கை கொள்ள, இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கிறது. உடல் நோயாலும், மன நோயாலும் பாதிக்கப்பட்ட பலருக்கு, இயேசு குணமளிக்கும் நிகழ்ச்சியை, மாற்கு நற்செய்தியில் நாம் கேட்கிறோம்.

இன்றைய நற்செய்தியில், இரு பகுதிகள், நம் கவனத்தை ஈர்க்கின்றன. குணமளிக்கும் இந்தப் புதுமைகளை இயேசு ஒய்வுநாளில் செய்தார் என்பது ஒரு பகுதி. ஒய்வுநாளன்று எந்த வேலையும் செய்யக்கூடாது என்பது யூதர்களின் முக்கியமான ஒரு சட்டம். இயேசு அதை மீறினார். அவரைப் பொருத்தவரை, குணமளிப்பது என்பது, வேலையே அல்ல; அது, உண்பது உறங்குவது போன்ற ஒரு தினசரி கடமை என்று இயேசு எண்ணியதால், தன் கடமையை, தயங்காது செய்தார். மேலும், ஒரு மனிதரைக் குணமாக்க, எந்தச் சட்டத்தையும் மீறலாம் என்பதையும் இயேசு தெளிவுபடுத்தினார்.

அடுத்து, இன்றைய நற்செய்தியின் இறுதிப் பகுதி நம்மை சிந்திக்க அழைக்கிறது. சீமோனின் மாமியார் குணமான செய்தி அந்த ஊரில் காட்டுத் தீயைப்போல் பரவியதால், ஊர் முழுவதும் திரண்டு வந்திருந்தது. அவர்களுக்குக் குணமளிப்பதை தன் கடமையாகக் கருதி இயேசு பணியாற்றினார். அன்றைய கடமைகளை நிறைவு செய்த இயேசு, மக்கள் கூட்டம் தந்த புகழில் மயங்கிப் போகாமல் இருக்க, இறைவனை நாடிச் சென்றார். அடுத்தநாள் அவரைத் தேடிச்சென்ற சீடர்கள், “எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” (மாற்கு 1:37) என்று கூறி, அவரை மீண்டும் ஊருக்குள் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், இயேசுவோ, 'நற்செய்தியைப் பறைசாற்றவே தான் வந்திருப்பதாக’க் கூறி, தன் பணிகளைத் தொடர, வேறு இடங்களுக்குப் புறப்பட்டார்.

எவ்வித புகழையும் தேடாமல், இயேசு அமைதியாக தன் குணமாக்கும் பணியைத் தொடர்ந்தார். பலனை, புகழை எதிர்பாராமல் பணிகள் செய்பவர்களைப்பற்றி சிந்திக்கும்போது, கதையொன்று நினைவுக்கு வருகிறது:

மற்றவர்களுக்கு நன்மைகள் செய்வதையே தன் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த ஒரு மகானுக்கு முன் இறைவன் தோன்றினார். அந்த மகானின் அற்புத வாழ்வுக்குப் பரிசாக, அவருக்கு பிடித்த ஒரு வரத்தை கேட்கச் சொன்னார் இறைவன். தனக்கு எதுவும் வேண்டாம் என்று, அந்த மகான் மறுத்தார். இருந்தாலும், இறைவன் விடுவதாகத் தெரியவில்லை. இறுதியாக, அந்த மகான், "இறைவா, என் நிழலைத் தொடும் அனைவரும் குணம் பெறும்படி வரம் தாரும்" என்று கேட்டார். இறைவன் அந்த வரத்தை மகிழ்வோடு தருவதாகச் சொன்னார். உடனே மகான் ஒரு நிபந்தனையைச் சொன்னார்... "எப்போதெல்லாம் என் நிழல் எனக்குப் பின்னே விழுகிறதோ, அந்த நிழலுக்கு மட்டுமே இந்தச் சக்தியை நீர் தரவேண்டும்" என்று அந்த மகான் வேண்டிக்கொண்டார்.

புகழை விரும்பாமல், பணிகளைத் தொடர்ந்த இயேசுவையும், அவரைப் பின்பற்றிய பல உன்னத உள்ளங்களையும் சிந்திக்கும் இவ்வேளையில், இந்த பெருந்தொற்று காலத்தில், தங்கள் உடல்நலம், புகழ், பணம் என்ற சுயநலத் தேவைகளை மறந்து, மக்களைக் காப்பதற்குப் பணியாற்றிய மருத்துவப் பணியாளர்களை இறைவன் திருமுன் நினைவுகூர்ந்து நன்றி கூறுவோம். இவர்களில் பல நூறு பேர், இந்த நோயினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இறைவன் நிறைபேறு வரங்களை வழங்குமாறு வேண்டிக்கொள்வோம்.

நாம் இன்று இறைவனிடம் மூன்று வரங்களுக்காக மன்றாடுவோம்:

முதலாவது, குணம் பெறவேண்டும் என்ற நிலையில் நாம் இருந்தால், அல்லது நமது நெருங்கிய உறவுகள் இருந்தால், நாம் குணம் பெறுவோம், அவர்கள் குணம் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நமக்குள் விதைக்கப்பட வேண்டும் என்று மன்றாடுவோம்.

இரண்டாவது, தீயில் வெந்துகிடந்த அச்சிறுவன் குணமாவதற்கு உதவிகள் செய்கிறோம் என்பதே தெரியாமல் உதவிசெய்த அந்த இளம்பெண்ணைப் போல, தனக்குப் பின்விழும் நிழலால் மக்கள் குணமாகவேண்டும் என்று வேண்டிக்கொண்ட அந்த மகானைப்போல, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், பிறருக்கு நன்மைகள் செய்யும் மனநிலையை இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று செபிப்போம்.

மூன்றாவதாக, நலமளிக்கும் பணிகளுக்கு இடையூறாக வரும் நிபந்தனைகள், சட்டங்கள் போன்றவற்றை புறம்தள்ளி, நமது பணிகளைத் தொடரும் உறுதி, நமக்குள் உருவாகவேண்டும் என்றும் மன்றாடுவோம்.

இறுதியாக ஓர் எண்ணம்... இன்னும் நான்கு நாள்களில், பிப்ரவரி 11ம் தேதி, வியாழனன்று, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளைச் சிறப்பிக்கவிருக்கிறோம். ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி 11ம் தேதியை, நோயாளரின் உலக நாளாக சிறப்பிக்கும் பழக்கத்தை, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார். இவ்வாண்டு நாம் சிறப்பிக்கும் 29வது நோயாளர் உலக நாளுக்கு முந்தைய ஞாயிறன்று நோயைக் குறித்து சிந்திக்க நாம் வாய்ப்பு பெற்றதை ஓர் அருள்மிகுந்த தருணமாகக் கருதலாம். இவ்வுலகை, கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து காத்தருள, நோயுற்றோரின் நம்பிக்கையாக விளங்கும், லூர்து நகர் அன்னை மரியாவின் பரிந்துரையோடு, இறைவனை மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2021, 14:23