பாகிஸ்தானில், 'மனித உடன்பிறந்த நிலையின் உலக நாள்' பாகிஸ்தானில், 'மனித உடன்பிறந்த நிலையின் உலக நாள்' 

பாகிஸ்தானில், 'மனித உடன்பிறந்த நிலையின் உலக நாள்'

நம்மிடையியே நிலவும் வேறுபாடுகளை அகற்ற, சமயங்களுக்கிடையே மனம் திறந்த உரையாடல் தேவை என்பது, உலக நாடுகள் அனைத்திற்கும், குறிப்பாக பாகிஸ்தானுக்கும் மிக அவசியமான உண்மை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள்' உண்மையில் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நாள் என்றும், இந்த நாளின் மையக்கருத்து, பாகிஸ்தானில், நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு, அமைதி, அனைவரையும் உள்ளடக்குதல் போன்ற உயர்ந்த பண்புகளை வளர்க்கும் என்று தான் நம்புவதாகவும் இஸ்லாமாபாத்-இராவல்பிண்டி பேராயர் ஜோசப் அர்ஷத் அவர்கள் கூறினார்.

பிப்ரவரி 4, இவ்வியாழனன்று 'மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள்' முதல் முறையாக சிறப்பிக்கப்பட்ட வேளையில், பீதேஸ் செய்திக்கு அறிக்கையொன்றை அனுப்பியிருந்த பேராயர் அர்ஷத் அவர்கள், இந்த உலக நாள் உருவாக காரணமாக இருந்த திருத்தந்தைக்கும், அல்-அசார் உயர் குருவுக்கும் தன் நன்றியைக் கூறினார்.

2019ம் ஆண்டு அபு தாபியில் 'உலகளாவிய உடன்பிறந்த நிலை' என்ற அறிக்கை வெளியானது, அதே ஆண்டு, ஆகஸ்ட் 20ம் தேதி, மனித உடன்பிறந்த நிலையின் உயர்மட்ட குழு உருவாக்கப்பட்டது, 2020ம் ஆண்டு, அக்டோபர் 4ம் தேதி, "Fratelli Tutti" என்ற திருமடல் வெளியானது, மற்றும் 2020ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி, ஐ.நா. நிறுவனத்தின் பொது அவை, 'மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள்' ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4ம் தேதி சிறப்பிக்கப்படும் என்று அறிவித்தது என்ற பல வரலாற்று நிகழ்வுகளை, பேராயர் அர்ஷத் அவர்கள் தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் இவ்வுலகம் சிதைந்துள்ள இவ்வேளையில், மனித உடன்பிறந்த நிலையின் அவசியத்தை உணரும் வண்ணம் இந்த முதல் உலக நாள் சிறப்பிக்கப்படுவது பொருத்தமானது என்று பேராயர் அர்ஷத் அவர்கள் கூறியுள்ளார்.

நம்மிடையியே நிலவும் வேறுபாடுகளை அகற்ற, சமயங்களுக்கிடையே மனம் திறந்த உரையாடல் தேவை என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அல் அசார் உயர் குரு அகமத் அல்-தய்யெப் அவர்களும் வலியுறுத்தி வருவது, உலக நாடுகள் அனைத்திற்கும், குறிப்பாக பாகிஸ்தானுக்கும் மிக அவசியமான உண்மை என்பதை, பேராயர் அர்ஷத் அவர்கள் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2021, 16:01