மியான்மார் கோவில் ஒன்றின் முன்னால் மியான்மார் கோவில் ஒன்றின் முன்னால் 

பிப்ரவரி 7 - மியான்மாரில் அமைதிக்காக இறைவேண்டல் நாள்

மியான்மாரின் ஆட்சிக்கவிழ்ப்பு, மக்கள் தலைவர்களின் கைது ஆகியவை குறித்து, தலத்திருஅவையும், ஐ.நா. பாதுகாப்பு அவையும் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

இராணுவத்தால் ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றுள்ள மியான்மார் நாட்டின் அமைதிக்காக,  அந்நாட்டின் அனைத்துக் கத்தோலிக்கரும் சிறப்பு இறைவேண்டல், உண்ணா நோன்பு, மற்றும், திருநற்கருணை ஆராதனை வழிபாடுகளில் ஈடுபடவேண்டும் என, தலத்திருஅவை விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது.

இம்மாதம் முதல் தேதி அதிகாலையில், ஆட்சியைக் கவிழ்த்து, அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இராணுவத்தின் செயல் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள மியான்மார் ஆயர்கள், பிப்ரவரி 7, இஞ்ஞாயிற்றுக்கிழமையை, நாட்டின் அமைதிக்காக சிறப்பு இறைவேண்டல், மற்றும், உண்ணாநோன்பின் நாளாகக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இராணுவ ஆட்சி குறித்த காரணங்களைக் கேட்டும், மக்களாட்சித் தலைவர்களுடனும், பொதுமக்களுடனும் ஒருமைப்பாட்டை தெரிவித்தும், ஏற்கனவே நீண்ட மடல் ஒன்றை வெளியிட்டுள்ள மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்களின் வழிகாட்டுதலில், இந்த நாளை இறைவேண்டல், மற்றும், உண்ணா நோன்பின் நாளாக கடைப்பிடிக்க அழைப்பு விடுப்பதாக, ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

மியான்மார் நாட்டின் அனைத்து ஆயர்கள் சார்பாக, அந்நாட்டு ஆயர் பேரவை பொதுச் செயலர், ஆயர் John Saw Yaw Han அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், இஞ்ஞாயிற்றுக்கிழமையன்று, நாட்டின் அனைத்து அருள்பணியாளர்களும், நாட்டின் அமைதிக்காக திருப்பலியை ஒப்புக்கொடுக்குமாறும் அழைப்பு விடப்பட்டுள்ளது.

மியான்மாரில் இராணுவம் ஆட்சியைக் கவிழ்த்துள்ளதைத் தொடர்ந்து, NLD என்ற ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், சமுதாய நடவடிக்கையாளர்கள், புத்த மத துறவிகள் என, ஏறக்குறைய 130 பேர் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

ஆட்சிக்கவிழ்ப்பு, மக்கள் தலைவர்களின் கைது ஆகியவை குறித்து, ஏற்கனவே, தலத்திருஅவையும், ஐ.நா. பாதுகாப்பு அவையும் தங்கள் ஆழ்ந்த கவலையையும் அக்கறையையும் வெளியிட்டுள்ளன. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2021, 15:57