இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமிக்கு ஆதரவு வழங்கும் அடையாளங்கள் இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமிக்கு ஆதரவு வழங்கும் அடையாளங்கள் 

குற்றம் நிரூபிக்கபடவில்லை, ஆனால், 4 மாதங்களுக்கு மேல் சிறை

அவசர கால நிலைகளின்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பயன்படுத்த உருவாக்கப்பட்ட சட்டத்தை, அமைதி வழி நடவடிக்கையாளர்கள் மீது ஏவும் அரசு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

NIA எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினால் கைதுசெய்யப்பட்டு, கடந்த அக்டோபர் 9ம் தேதி முதல், மும்பையில் சிறைவைக்கப்பட்டிருக்கும் இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்களின் விடுதலை விண்ணப்பம், மார்ச் 2, வருகிற செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.

இந்தியாவின் தலித் மற்றும் பழங்குடி மக்களின் உரிமைக்காக இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தின் 200ம் ஆண்டு நிறைவு, 2018ம் ஆண்டு மகராஷ்டிராவின் Bhima Koregaon எனுமிடத்தில் கொண்டாடப்பட்டபோது வெடித்த வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் என, ஏறக்குறைய 16 பேர் கைது செயயப்பட்ட நிலையில், ஒருவர் மட்டுமே, தற்போது, நலக் காரணங்களுக்காக, 6 மாதங்கள் வெளியேயிருந்து சிகிச்சைப் பெற பிணையலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Bhima Koregaon வன்முறையைத் தூண்டியதாக பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு, 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறைவைக்கப்பட்டிருந்த கவிஞர், மற்றும் மனித உரிமை நடவடிக்கையாளர் Varavara Rao என்பவர், கடந்த ஜூலை மாதம், கோவிட்-19 பெருந்தொற்றால் தாக்கப்பட்டிருந்தபோதும், அவருக்கு பிணையல் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது, மும்பையிலேயே தங்கி சிகிச்சைப்பெற வேண்டும் என, 6 மாதங்களுக்கு மட்டும் தற்காலிக விடுதலை வழங்கப்பட்டுள்ளார்.

மும்பை அருகிலுள்ள Taloja சிறையில் வைக்கப்பட்டிருக்கும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், பார்க்கின்சன்ஸ் நோய், செவித்திறன் குறைவு, உண்பதில் சிரமம், தண்டுவட நரம்புப் பிரச்சனை என பல்வேறு நலப் பிரச்சனைகளால் துன்புற்றுவருவதைக் காரணம் காட்டி, சிறையிலிருந்து விடுவிக்கப்பட இதுவரை சமர்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் தேசிய புலனாய்வு அமைப்பால் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது, வேறு முறையில் நீதிமன்றத்தை அணுக உள்ளதாக, அவரது வழக்குரைஞர்கள் அறிவித்துள்ளனர்.

2018ம் ஆண்டு, Bhima Koregaonல் இடம்பெற்ற வன்முறைகளில் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், நேரடியாக ஈடுபட்டார் என்றோ, அதில் ஈடுபட்டோரை தூண்டினார் என்றோ, தேசிய புலனாய்வு துறை, இதுவரை, ஆதாரங்களுடன் நிரூபிக்க தவறியுள்ள நிலையில், அருள்பணி ஸ்டான் சுவாமி விடுவிக்கப்படவேண்டும் என, வழக்குரைஞர்கள், வரும் செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் வாதாட உள்ளனர்.

இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி மீது சுமத்தப்பட்டுள்ள பொய்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து, கவலையை வெளியிட்ட, மும்பை புனித சேவியர் கல்லூரியின் சமுதாய ஆர்வலரும் இயேசு சபை அருள்பணியாளருமான Frazer Mascarenhas அவர்கள், அவசர கால நிலைகளின்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட UAPA சட்டத்தை, தற்போதைய அரசு, தனி மனிதர்களுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக, மனித உரிமை நடவடிக்கையாளர்கள், சமூகத்தொடர்பாளர்கள், பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஏன், மாணவர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

ஜனநாயக வழியில் மேற்கொள்ளப்படும் எதிர்ப்புகளை சகித்துக்கொள்ள முடியாத ஓர் அரசு, இச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், இத்தகையச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என, மக்கள், அரசை விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் என்றார், இயேசு சபை அருள்பணி Mascarenhas. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 February 2021, 15:29