கேரள வெள்ளப்பெருக்கின்போது மதங்களின் சேவை கேரள வெள்ளப்பெருக்கின்போது மதங்களின் சேவை  

அரசியல்வாதிகளின், திசை திருப்பும் பிரச்சாரம் குறித்து எச்சரிக்கை

கிறிஸ்தவ-இஸ்லாம் மோதலை உருவாக்க, அரசியல் கட்சியொன்று முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளனர் கேரள ஆயர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கேரள மாநிலத்தில், தேர்தல் நெருங்கிவரும் வேளையில், மத அடிப்படையில் மக்களை பிரித்தாள முயலும் அரசியல்வாதிகளின் முயற்சிகள் குறித்து கவனமுடன் செயல்படுமாறு, அம்மாநில ஆயர்கள், அழைப்பு விடுத்துள்ளனர்.

துருக்கியின் 1500 ஆண்டுகால தொன்மையுடைய Hagia Sophia கிறிஸ்தவப் பெருங்கோவிலை இஸ்லாமிய மசூதியாக மாற்றியுள்ள செயலை நியாயப்படுத்திப் பேசிய இந்திய அரசியல்வாதி ஒருவரின் கூற்று குறித்து கருத்துக்களை வெளியிட்ட ஆயர் Joseph Pamplany அவர்கள், அரசியல்வாதிகளின் தவறான, மற்றும், திசை திருப்பக்கூடிய பிரச்சாரங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நெருங்கிவரும் தேர்தலை மனதில் கொண்டு, கிறிஸ்தவ-இஸ்லாம் மோதலை உருவாக்க, அரசியல் கட்சியொன்று முயல்வதாக, கேரள ஆயர் பேரவையின் சமூகத்தொடர்புத் துறையின் தலைவர், ஆயர் Pamplany அவர்கள் குற்றஞ்சாட்டினார்.

எக்காலத்திலும் தனிப்பட்ட ஒரு கட்சிக்கு ஆதரவளிக்காத கத்தோலிக்க ஆயர்கள், மக்களின் முன்னேற்றத்திட்டங்களுடனும், மதச்சார்பற்ற கொள்கைகளுடனும், ஜனநாயக மதிப்பீடுகளுடனும் செயல்படும் கடசிகள் பக்கம் நிற்க விரும்புவதாக கூறினார், தெல்லிச்சேரியின் துணை ஆயர் Pamplany.

கேரள அரசின் ஐந்தாண்டு ஆட்சி, இவ்வாண்டு, ஜூன் மாதம் முதல் தேதி முடிவுக்கு வருவதையொட்டி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் மாநிலத் தேர்தலில், குறைந்த அளவு, 30 தொகுதிகளைப் பிடிக்க, இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சி. திட்டமிட்டுள்ளதாக, அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடந்த முறை நடைபெற்ற கேரள சட்டமன்ற தேர்தலில், இக்கட்சி ஒரே ஒரு இடத்தை மட்டுமே பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

3 கோடியே 30 இலட்சம் மக்கள் தொகையுடன் 140 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ள கேரளாவில், ஏறக்குறைய 54 விழுக்காடு இந்துக்களும், 26 விழுக்காடு இஸ்லாமியர்களும், 18 விழுக்காடு கிறிஸ்தவர்களும் உள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 February 2021, 13:16