ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிரான போராட்டத்தில் துறவியர்  ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிரான போராட்டத்தில் துறவியர்  

ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிரான போராட்டத்தில் துறவியர்

இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்த்து, யாங்கூன் நகரின் தெருக்களில், கத்தோலிக்க அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் உட்பட, நூற்றுக்கணக்கான கத்தோலிக்கர், செபமாலை, மற்றும், ஏனைய செபங்களைச் சொல்லிக்கொண்டு, பேரணி ஒன்றை நடத்தினர்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக, பொதுமக்கள் நடத்திவரும் போராட்டங்களுக்கு, இத்தாலி உட்பட, பல நாடுகளில் வாழ்கின்ற மியான்மார் கத்தோலிக்க அருள்பணியாளர்கள் மற்றும், அருள்சகோதரிகள் தங்களின் ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.

பிப்ரவரி 16, இச்செவ்வாயன்று மிலான், வரேசே உள்ளிட்ட நகரங்களில், மியான்மார் நாட்டு அருள்பணியாளர்களும், அருள்சகோதரிகளும், பொதுநிலையினரும் கூடி, மியான்மாரில் இடம்பெற்றுள்ள ஆட்சிக்கவிழ்ப்புக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததோடு, அந்நாட்டில் அமைதியும் நீதியும் நிலைநாட்டப்படவும் செபித்தனர்.

மேலும், மியான்மாரின் Myitkyina நகரில் போராட்டதாரர்கள் கலைந்துசெல்வதற்கென, பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிசூட்டைப் பயன்படுத்தியதை முன்னிட்டு, இந்த எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொள்ளும் கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என, யூக்கா செய்தி கூறுகிறது.

இம்மாதம் முதல் தேதி நடைபெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்த்து, பிப்ரவரி 14, இஞ்ஞாயிறன்று, யாங்கூன் நகரின் தெருக்களில், கத்தோலிக்க அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் உட்பட, நூற்றுக்கணக்கான கத்தோலிக்கர், செபமாலை, மற்றும், ஏனைய செபங்களைச் சொல்லிக்கொண்டு, பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

உரோம் நகரில் வாழ்கின்ற மியான்மார் அருள்பணியாளர்கள், மற்றும், அருள்சகோதரிகளும், அந்நாட்டு இராணுவ அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அந்நாட்டில், மக்களாட்சித் தலைவர்கள் விடுதலை செய்யப்படவும், மக்களாட்சி நிலைநிறுத்தப்படவும், அமைதி நிலவவும் விண்ணப்பித்தனர். (UCAN)

மியான்மாரில் வன்முறை கைவிடப்பட ஐ.நா.

இதற்கிடையே, மியான்மாரின் முக்கிய நகரங்களின் தெருக்களில் இராணுவ வாகனங்கள் வலம்வருவதையொட்டி, அந்நாட்டு இராணுவத் தலைமை வன்முறையைக் கைவிடவேண்டும் என்றும், மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரம், சட்டம் ஒழுங்கு, ஆகியவற்றை மதிக்கவேண்டும் என்றும், மியான்மார் நாட்டுக்கென சிறப்பு ஐ.நா. தூதராகப் பணியாற்றும், Christine Schraner Burgener அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

மியான்மார் நாட்டின் நிலவரத்தை உலகம் மிகக் கவனமாக கண்காணித்து வருகிறது, எந்தவிதமான கடுமையான வன்முறைகள் பயன்படுத்தப்பட்டால், அதன் எதிர்விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்று, அந்நாட்டு இராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், Burgener. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 February 2021, 15:19