இங்கிலாந்தின் கான்டர்பரி பகுதியில் கூடாரத்தில் வாழும் வீடற்றவரைச் சந்திக்கும் தன்னார்வலர் இங்கிலாந்தின் கான்டர்பரி பகுதியில் கூடாரத்தில் வாழும் வீடற்றவரைச் சந்திக்கும் தன்னார்வலர் 

வீடற்றோரின் பிரச்சனையைத் தீர்க்கும் ஆங்கிலிக்கன் சபை

இங்கிலாந்தில் வீடற்றிருக்கும் மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு, ஆங்கிலிக்கன் சபை, தனக்குச் சொந்தமான நிலங்களைப் பயன்படுத்த முடிவெடுத்திருப்பது, உன்னதமான ஒரு செயல் - கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இங்கிலாந்தில் வீடற்றிருக்கும் மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு, ஆங்கிலிக்கன் சபை, தனக்குச் சொந்தமான நிலங்களைப் பயன்படுத்த முடிவெடுத்திருப்பது, உன்னதமான ஒரு செயல் என்று, இங்கிலாந்து கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் புகழ்ந்துள்ளார்.

கான்டர்பரி மற்றும் யார்க் மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஆங்கிலிக்கன் சபையின் இரு பணிக்குழுவினர், "இல்லத்திற்கு வருவோம் - வீடற்றோரின் நெருக்கடிக்கு இணைந்து தீர்வு காண" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், தங்கள் சபைக்கு உரிய நிலங்களை விற்பதற்கோ, அல்லது, அவற்றில் வீடுகள் கட்டுவதற்கோ தேவையான திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆங்கிலிக்கன் சபைக்கு சொந்தமான நிலங்கள் 81,000 ஹெக்டர் பரப்பளவு கொண்டது என்பதையும், இவற்றில் பெரும்பாலான பகுதிகளில் வீடுகள் கட்டமுடியாது என்றாலும், கட்ட முடிந்த இடங்களில் வீடுகள் அமைப்பதற்கு, இந்த அறிக்கை, திட்டங்களை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் தற்போது, 80 இலட்சம் மக்கள் வீடின்றி, அல்லது, மிக நெருக்கமான, நலமற்றச் சூழலில் வாழ்ந்துவருகின்றனர் என்ற புள்ளிவிவரத்தையும் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், ஆங்கிலிக்கன் சபைக்கு சொந்தமான நிலங்களை விற்கவோ, அல்லது, அவற்றில் வீடுகள் கட்டுவதற்கோ சட்டங்களில் ஒரு சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் செல்வம் மிகுந்த நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் பிரித்தானியாவில், 80 இலட்சம் மக்கள் வீடற்ற பிரச்சனையால் துன்புறுவது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ள கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண, ஆங்கிலிக்கன் சபை வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, அவர்களது துணிவையும், வறியோர் மீது அவர்கள் கொண்டுள்ள அக்கறையையும் காட்டுகிறது என்று பாராட்டியுள்ளார்.

மக்களின் குறைகளைத் தீர்க்க அரசு அனைத்தையும் செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தால் மட்டும் போதாது அத்துடன், ஒவ்வொருவரும் என்ன செய்ய முடியும் என்பதையும் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்று, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 February 2021, 15:30