இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பிற்கு மியான்மாரில் எதிர்ப்பு இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பிற்கு மியான்மாரில் எதிர்ப்பு  

மியான்மார் நாட்டில், உரையாடல்களும் மக்களாட்சியுமே உதவும்

மிகவும் சவால் நிறைந்த பயணத்தை மேற்கொண்டுவரும் மியான்மார் நாட்டில், மக்கள் அமைதியுடன் செயல்படுமாறும், வன்முறைக்கு பலியாக வேண்டாம் எனவும் விண்ணப்பம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டில் எக்காரணம் கொண்டும் மீண்டும் இரத்தம் சிந்தல்கள் இடம்பெறவேண்டாம் எனவும், அந்நாட்டைச் சூழ்ந்துள்ள இருளை அகற்ற, கலந்துரையாடல்களும் மக்களாட்சியுமே உதவும் எனவும், அந்நாட்டு கர்தினால் Charles Maung Bo அவர்கள், மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மியான்மார் நாட்டில், இம்மாதம் முதல் தேதி, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு குறித்து, அந்நாட்டு மக்ககளுக்கும், மக்கள் தலைவர்களுக்கும், ஆட்சியை கைப்பற்றியுள்ள இராணுவத் தலைவர்களுக்கும், அனைத்துலக சமுதாயத்திற்கும் என, மடல் ஒன்றை வெளியிட்டுள்ள யாங்கூன் பேராயர், கர்தினால் போ அவர்கள், ஆன்மீகத் தலைவர் என்ற முறையில், பல இலட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளுடன் தானும் பங்கெடுத்து, அம்மடலை எழுதுவதாகத் தெரிவித்துள்ளார்.

மிகவும் சவால் நிறைந்த பயணத்தை மேற்கொண்டுவரும் மியான்மார் நாட்டில், மக்கள் அமைதியுடன் செயல்படுமாறும், வன்முறைக்குப் பலியாகவேண்டாம் எனவும், அந்நாட்டு மக்கள் அனைவருக்கும், விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார், மியான்மார் ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் போ.

2015ம் ஆண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுடன் ஆட்சி மாற்றம் அமைதியான  முறையில் இடம்பெற்று, அனைத்தும் சுமுகமாக நிகழ்ந்துவந்த நிலையில், எங்கு தவறு நடந்தது, இந்த இராணுவ கைப்பற்றல் நடந்திட காரணம் என்ன என்ற கேள்விகளையும் முன்வைத்துள்ளார், யாங்கூன் பேராயர், கர்தினால் போ.

ஏறக்குறைய எழுபது ஆண்டுகளாக இடம்பெற்றுவந்த இரத்தம் சிந்தல்களும் வன்முறைகளும் முடிவுக்கு வந்து, மக்களாட்சி நடைபெற்று வந்த வேளையில், தேர்தல் முறைகேடுகள் என்ற காரணம் காட்டி, இராணுவம், ஆட்சியை கவிழ்த்துள்ளதற்கு பதிலாக, பேச்சுவார்த்தைகள் வழியாக, பிரச்சனைக்கு தீர்வு காண முன்வந்திருக்கலாம் எனவும், தன் கடிதத்தில் கூறியுள்ளார் கர்தினால்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும், சமூகத்தொடர்பாளர்களும், சமுதாய நடவடிக்கையாளர்களும், இளையோரும் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளது குறித்து கவலையை வெளியிட்டுள்ள கர்தினால் போ அவர்கள், அனைவரும் விரைவில் விடுவிக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் விடுத்துள்ளார்.

நாட்டில் மக்களாட்யைக் கொணரும் தொடர் போராட்டத்தில் மிகத் துயர் நிறைந்த நாட்களைச் சந்தித்துவரும் மக்கள் தலைவர்களுக்கு ஆறுதல் வழங்கும் வார்த்தைகளையும் வெளியிட்டுள்ளார் கர்தினால் போ.

இராணுவத்தின் ஆடசி கவிழ்ப்பால் துயருறும் மியான்மார் மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவித்துள்ள அனைத்துலக சமுதாயத்திற்கு தன் நன்றியையும் வெளியிட்டுள்ளார், மியான்மார் நாட்டு கர்தினால் போ

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 February 2021, 14:51