அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார் - திருப்பாடல் 1:3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார் - திருப்பாடல் 1:3 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 1 – நற்பேறு பெற்றோர் 3

நாம், இறைவார்த்தை என்ற நீரோடைக்கருகே நடப்பட்ட மரங்களாக செழித்து வளரும் வரத்தையும், அதன் பயனாக, நீதித் தீர்ப்பின்போது, நிலைத்து நிற்கும் வரத்தையும், இறைவனிடம் வேண்டுவோம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: திருப்பாடல் 1 – நற்பேறு பெற்றோர் 3

"நற்பேறு பெற்றவர் யார்?" (தி.பா. 1:1) என்ற கேள்வியுடன் முதல் திருப்பாடலைத் துவங்கியுள்ள ஆசிரியர், நற்பேறு பெற்றவர் எப்படிப்பட்டவர் என்பதை, முதல் இரு இறைவாக்கியங்களில் குறிப்பிட்டுள்ளார். நற்பேறு பெற்றவரின் செயல்பாடுகளைக் கூறும் இவ்விரு இறைவாக்கியங்களைத் தொடர்ந்து, அவர் வாழ்வில் பெறும் நன்மைகளை, 3ம் இறைவாக்கியத்தில், ஓர் அழகிய உருவகத்துடன் சித்திரித்துள்ளார்:

அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். (தி.பா. 1:3)

விவிலியத்தில், 'இறைவன்', 'மனிதர்கள்' ஆகிய சொற்களுக்கு அடுத்தபடியாக, 'மரம்' அல்லது 'மரங்கள்' என்ற சொல், அதிக இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது, விவிலிய விரிவுரையாளர்களின் கணிப்பு. தொடக்க நூல் முதல் பிரிவில், கடவுள் ஒளியை உண்டாக்கி, பகல்-இரவு என்ற பிரிவை முதல் நாள் உருவாக்கினார். இரண்டாம் நாள், 'விண்ணுலகை' உருவாக்கினார். மூன்றாம் நாள், அவர், 'நிலத்தை'ப் படைத்ததும், அதில் தோன்றிய முதல் உயிர்களாய், புற்பூண்டுகள், செடிகள், மற்றும் பழமரங்களை படைத்தார். இறைவன் படைத்த முதல் உயிரினங்களில் ஒன்றான மரம், முதல் திருப்பாடலில் இடம் பெற்றுள்ளது. இயேசுவின் வாழ்வு, மரத்தால் செய்யப்பட்ட தீவனத் தொட்டியில் ஆரம்பித்து, மரத்தால் செய்யப்பட்ட சிலுவையில் முடிந்தது. விவிலியத்தின் முதல் நூலான, தொடக்க நூலில், ஏதேன் தோட்டத்தில், "ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்" (தொ.நூ. 2:9) என்ற குறிப்பைக் காண்கிறோம். விவிலியத்தின் இறுதி நூலான திருவெளிப்பாடு நூலின் இறுதிப் பகுதியில், மீண்டும், 'வாழ்வு தரும் மரம்' (காண். தி.வெ. 22:19) குறிப்பிடப்பட்டுள்ளது.

மரங்களைக் குறித்து விவிலியத்தில் கூறப்பட்டுள்ள இத்தகைய விவரங்களுடன், முதல் திருப்பாடலில் பதிவாகியுள்ள "நீரோடையோரம் நடப்பட்ட மரம்" என்ற உருவகத்தை நாம் சிந்திக்கும்பொழுது, நற்பேறு பெற்றவரின் பல பண்புகள் வெளிச்சத்திற்கு வருவதை உணர்கிறோம். 'பருவகாலத்தில் கனியும், ஆண்டு முழுவதும் பசுமையும்' (காண்க தி.பா. 1:3) கொண்டிருக்கும் மரமாக, நல்லார் வாழ்வதைக் குறித்து, டேவிட் கால்டுவெல் (David Caldwell) என்ற விவிலிய விரிவுரையாளர் அழகிய விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளார்:

“நல்லாரின் வாழ்வு, இறைவார்த்தையை அடித்தளமாகக் கொண்டு இயங்குவதால், அவர்கள் வாழ்நாளெல்லாம் பசுமையுடன் திகழ்கின்றனர்; தகுந்த நேரத்தில் கனிகளையும் வழங்குகின்றனர். இதைப் புரிந்துகொள்ள மரத்தின் பண்புகள் உதவியாக உள்ளன. ஒரு மரத்தின் வேர்கள் மட்டுமே நீருடன் தொடர்பு கொள்கின்றன. ஆனால், அந்த நீரின் ஈரப்பசை, மரத்தின் வேர், தண்டுப்பகுதி, பெரும் கிளைகள் ஆகிய முக்கியப் பகுதிகளோடு நின்றுவிடாமல், மரத்தின் உச்சியில் இருக்கும் சிறு தளிர்கள் முடிய சென்றடைகிறது. அதேபோல், இறைவார்த்தையின் சுவையால் மகிழ்வும், நிறைவும் அடையும் நல்லார் ஒருவர், தன் வாழ்வின் முக்கியப் பகுதிகளை மட்டும் இறைவார்த்தையால் வாழ்வதில்லை; மாறாக, வாழ்வின் மிகச்சிறியச் சூழல்களிலும் அவர் இறைவார்த்தையால் வழிநடத்தப்படுகிறார். எனவே, பிரச்சனைகள் என்ற புயலில் சிக்கினாலும், வறட்சியால் வாடினாலும், அவருக்குள் பரவியுள்ள இறைவார்த்தை என்ற ஈரப்பசை, அவரது வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் பசுமையாகப் பாதுகாக்கும்" என்று கால்டுவெல் அவர்கள் கூறியுள்ளார்.

மரங்களின் வேர்வழியே உள்ளே நுழையும் ஈரம், மரங்களின் உச்சியில் உள்ள சிறு தளிர்களை அடைவது, அறிவியல் உலகில், வியப்பைத்தரும் ஒரு விதிவிலக்கு. பொதுவாக, எந்த ஒரு பொருளும், புவி ஈர்ப்பு சக்தியால், மேலிருந்து கீழிறங்குவது, இயற்பியல் விதி. அதிலும், நீரைப் பொருத்தவரை, எந்த ஓர் உயரத்தில் இருக்கும் நீரும், மிகத் தாழ்வான இடத்தை நாடிச்செல்லும் என்பதும், அறிவியல் விதி. இந்த இரு விதிகளுக்கும் நேர் மாறாக, ஒரு மரத்தின் வேரிலிருந்து புறப்படும் ஈரம், புவி ஈர்ப்பு சக்திக்கு எதிராகச் செயல்பட்டு, மரத்தின் உச்சியை அடைகிறது. அதேவண்ணம், உலகினர் பலரும், ஊரோடு ஒத்துவாழவேண்டும் என்ற கட்டாயத்தால், தங்கள் உன்னத உயர் நிலையிலிருந்து கீழிறங்கி வரும் வேளை, நல்லார், இறைவார்த்தையின் சக்தியை நம்பி எதிர்நீச்சல் போட்டு, உன்னதத்தை அடைவது, இவ்வுலகில் நிகழும் எதார்த்தம்.

நற்பேறு பெற்றவர், பசுமையான மரம் என்று முதல் திருப்பாடலில் கூறப்பட்டுள்ள இந்த ஒப்புமை, 92வது திருப்பாடலில் இன்னும் அழகாகக் கூறப்பட்டுள்ளது:

திருப்பாடல் 92:12-14

நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்.

நல்லாரை மரங்களுக்கு ஒப்புமைப்படுத்தி திருப்பாடலின் ஆசிரியர் கூறியுள்ள இச்சொற்களின் எதிரொலியை, நாம் இறைவாக்கினர் எரேமியா நூலிலும் காண்கிறோம்:

எரேமியா 17:7-8

ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவரே அவர்களது நம்பிக்கை. அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்; அது நீரோடையை நோக்கி வேர் விடுகின்றது. வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை; அதன் இலைகள் பசுமையாய் இருக்கும்; வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும்.

முதல் திருப்பாடலின் மூன்றாம் இறை வாக்கியத்தில் காணப்படும் இறுதிச் சொற்கள், ஆசீரளிக்கும் சொற்களாக ஒலிக்கின்றன: "அவர், தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்" (தி.பா. 1:3) என்ற இச்சொற்கள், நம் பாரம்பரியங்களில் சொல்லப்படும் ஒருசில ஆசி மொழிகளை நினைவுக்குக் கொணர்கின்றன.

ஒரு சிலரை, குறிப்பாக, மருத்துவர்களை, "அவர், கைராசிக்காரர்" என்று கூறும்போது, அவர் தன் கையால் தொட்டால் குணம்பெறுவோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோம். அதேபோல், வர்த்தக உலகில் ஒரு சிலர் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறுவதைக் குறிப்பிட, அவர் “தொட்டது துலங்கும்; நட்டது தழைக்கும்; ஒன்று நூறாகும்! தொட்டால் பூ மலரும்! தொட்ட இடம் பூ மணக்கும்!” என்றெல்லாம், ஆசி மொழிகளை அடுக்கிவைக்கிறோம்.

நற்பேறு பெற்றவரை, அல்லது, நல்லாரைப்பற்றிய விவரங்களை, முதல் திருப்பாடலின் முதல் 3 இறைவாக்கியங்களில் தெளிவாகக் கூறிய திருப்பாடல் ஆசிரியர், அடுத்துவரும் மூன்று இறைவாக்கியங்களில், பொல்லாரைப்பற்றி முற்றிலும் மாறுபட்டதொரு தொனியில், தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்: ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். (திருப்பாடல் 1:4)

நல்லாரின் வாழ்வில் வெளிப்படும் செயல்பாடுகளை, முதல் இரு இறைவாக்கியங்களில் விளக்கிக்கூறிய ஆசிரியர், பொல்லாரைப்பற்றிக் கூறும்போது, "ஆனால், பொல்லார் அப்படி இல்லை" (தி.பா. 1:4) என்ற நான்கு சொற்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்: ஒருசில விவிலியப் பதிப்புகளில், இந்த இறைவாக்கியம், "அப்படி இல்லை, பொல்லார், அப்படி இல்லை" என்று, இன்னும் சற்று அழுத்தந்திருத்தமாகக் கூறப்பட்டுள்ளது. பொல்லார், நல்லாருக்கு எதிர் துருவமாக உள்ளனர் என்பதை, ஆசிரியர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நீரோடையோரம் நடப்பட்டு, வேரூன்றி, கனிகளை வழங்கும் பசுமை மாறா மரமாக, நல்லாரை உருவகித்துப் பேசிய ஆசிரியர், பொல்லாரை, 'காற்று அடித்துச் செல்லும் பதராக' சித்திரித்துள்ளார். பதர்கள், அடர்த்தியான எதையும் தங்களுக்குள் கொண்டிராதவை.  நற்செயல்கள், நல்லெண்ணங்கள், நற்பண்புகள் என்ற மதிப்புள்ள எதுவும், பொல்லாரின் வாழ்வில் இல்லாததால், அவர்கள், உள்ளுக்குள் எதுவும் இல்லாமல், மேல்தோலை மட்டுமே கொண்டுள்ள பதர்களுக்கு ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளனர். காற்றடிக்கும் திசையெங்கும் பதர்கள் அடித்துச் செல்லப்படுவதுபோல, பொல்லாரும், இவ்வுலகம் காட்டும் தவறான வழிகள் அனைத்திலும் அலைக்கழிக்கப்படுவர் என்பதை, திருப்பாடலின் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

பொல்லாரை பதர்களுக்கு ஒப்புமைப்படுத்தி முதல் திருப்பாடலில் கூறும் தாவீது, 35ம் திருப்பாடலில், தன் எதிரிகளை பதர்களாக உருவகித்து, அவர்களை சிதறடிக்குமாறு இறைவனிடம் வேண்டுதல் எழுப்புகிறார்:

திருப்பாடல் 35:4-5

ஆண்டவரே,... எனக்குத் தீங்கிழைக்க நினைப்போர், புறமுதுகிட்டு ஓடட்டும். ஆண்டவரின் தூதர் அவர்களை விரட்டியடிக்க, காற்றில் பறக்கும் பதர்போல அவர்கள் சிதறட்டும்.

நல்லாரின் வாழ்வு, இறைவார்த்தையில் வேரூன்றி, பசுமையான மரத்தைப்போல் நிலைத்து நிற்கும் என்பதைக் குறிப்பிட்ட திருப்பாடல் ஆசிரியர், பொல்லாரின் இறுதி நிலையை, முதல் திருப்பாடலின் இறுதி சொற்களில் இவ்வாறு கூறியுள்ளார்:

திருப்பாடல் 1:5-6

பொல்லார் நீதித் தீர்ப்பின்போது நிலைநிற்க மாட்டார்; பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார். நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.

பொல்லார், பதர்களைப் போன்றோர் என்றும், அவர்கள் அடையும் நீதித் தீர்ப்பைக் குறித்தும், கேட்கும்போது, மத்தேயு நற்செய்தியில், வரவிருக்கும் நீதித் தீர்ப்பைப்பற்றியும், அந்த நீதித்தீர்ப்பை வழங்கவரும் இயேசுவைப்பற்றியும், திருமுழுக்கு யோவான் கூறியுள்ள சொற்கள், நம் நினைவில் எழுகின்றன:

மத்தேயு 3:7,11-12

பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு திருமுழுக்கு யோவான் அவர்களை நோக்கி, “எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” என்றார்.

முதல் திருப்பாடலில் நம் சிந்தனைகளை நிறைவுசெய்யும் இவ்வேளையில், நாம், இறைவார்த்தை என்ற நீரோடைக்கருகே நடப்பட்ட மரங்களாக செழித்து வளரும் வரத்தையும், அதன் பயனாக, நீதித் தீர்ப்பின்போது, நிலைத்து நிற்கும் வரத்தையும், இறைவனிடம் வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 February 2021, 15:06