குடும்ப வாழ்வுக்குத் தேவையான வழிகாட்டுதல் குடும்ப வாழ்வுக்குத் தேவையான வழிகாட்டுதல் 

மகிழ்வின் மந்திரம் : குடும்பத்தினருக்கு சிறந்த வழிகாட்ட...

அன்பில் வளர்தல், பிரச்சனைகளைத் தீர்த்தல், பிள்ளைகளை வளர்த்தல் ஆகிய விடயங்களில், திருஅவை காட்டும் வழிகாட்டுதல்களை, குடும்பத்தினர் பாராட்டுகின்றனர் - (அன்பின் மகிழ்வு 38)

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

குடும்பவாழ்வை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய "அன்பின் மகிழ்வு" (Amoris Latitia) திருத்தூது அறிவுரை மடலின் இரண்டாவது பிரிவில், 'குடும்பத்தின் இன்றைய உண்மை நிலை' என்ற பகுதியில், குடும்பம், மற்றும், திருஅவையில், இன்று நிலவும், நிறை குறைகளை வெளிச்சமிட்டு காட்டியுள்ளார். திருமண உறவிலும், குடும்பத்திலும் நிலவும் அற்புதமான உண்மை நிலைகளை, திருஅவை, இன்னும் சிறப்பாக புரிந்துகொண்டு, தம்பதியருக்கு வழிகாட்ட வேண்டும் என்ற கருத்தை, திருத்தந்தை, 38ம் பத்தியில், பரிந்துரைத்துள்ளார்:

"நீடிய காலம் இணைந்திருத்தல், ஒருவரையொருவர் மதித்தல் ஆகிய பண்புகளைக் கொண்ட குடும்ப உறவுகளை, பெரும்பாலானவர்கள் இன்னும் போற்றி வளர்த்து வருவதற்காக, நாம் நன்றி சொல்லவேண்டும். அன்பில் வளர்தல், பிரச்சனைகளைத் தீர்த்தல், பிள்ளைகளை வளர்த்தல் ஆகிய விடயங்களில், திருஅவை காட்டும் வழிகாட்டுதல்களை, குடும்பத்தினர் பாராட்டுகின்றனர். ஒப்புரவு அருளடையாளம், திருவிருந்து, ஆகியவற்றின் வழியே, அவர்கள் அடையும் வரங்களால், திருமணத்திலும், குடும்பத்திலும் ஏற்படும் சவால்களைச் சந்திக்கின்றனர்.

ஒரு சில நாடுகளில், குறிப்பாக, ஆப்ரிக்காவின் பல பகுதிகளில், மத உணர்வற்ற நிலை பரவிவந்தாலும், அது, பாரம்பரிய வழக்கங்களையும், திருமண உறவின் பந்தங்களையும் வலுவிழக்கச் செய்யவில்லை. திருமணங்கள் நீடித்து நிலைப்பதுடன், பலன்களையும் வழங்கிவருகின்றன.

இத்தகைய நேர்மறையான அம்சங்கள், திருமணத் தம்பதியருக்கு, இன்னும் சிறந்த வழிகாட்டுதலை வழங்க, திருஅவைக்கு, பெரும் உந்துசக்தியாக அமையக்கூடும். ஆயினும், அடிக்கடி, நாம், இவ்வுலகை, கண்டனம் செய்வதிலும், இவ்வுலகிலிருந்து தம்பதியரைக் காக்கும் வழிகளிலும், சிந்தனைகளை மேற்கொள்கிறோம். இதற்குப் பதிலாக, உண்மையான, நேர்மறையான மகிழ்வை, இவ்வுலகில், தம்பதியர் காண்பதற்கு வழிகாட்டுவதில், நம் திறமைகளைப் பயன்படுத்தவேண்டும்.

இயேசு, மிகச் சவாலான இலக்குகளை மக்கள்முன் வைத்தார். அதே வேளையில், அந்த இலக்குகளை அடைய இயலாதவர்கள் மீது பரிவும் காட்டினார். சமாரியப் பெண்ணிடமும், விபசாரத்தில் பிடிபட்டப் பெண்ணிடமும் அவர் நடந்துகொண்டது, அவரது பரிவுக்குச் சான்றுகள். இயேசுவிடம் விளங்கிய இந்த மனநிலை, திருமணத்தையும், குடும்பத்தையும் குறித்து, திருஅவை வெளியிடும் செய்தியில் பிரதிபலிக்கப்படவில்லை என்று, பலர் உணர்கின்றனர்." (அன்பின் மகிழ்வு 38)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 February 2021, 12:50