நிக்கராகுவாவில் வாலன்டைன் நாளன்று திருமணம் நிக்கராகுவாவில் வாலன்டைன் நாளன்று திருமணம் 

மகிழ்வின் மந்திரம் : எச்சரிக்கைகளை காணத் தவறுதல்

மற்றவர்களைப் பயன்படுத்துபவர்கள், ஒரு நாள் அவர்களே பயன்படுத்தப்படுபவர்களாக மாற்றப்பட்டு, அவர்கள் கொண்டிருக்கும் மனநிலையாலேயே தூக்கியெறியப்படுவர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

"அன்பின் மகிழ்வு" (Amoris Latitia) திருத்தூது அறிவுரை மடலின் 39ம் பத்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவ்வாறு இன்றைய சமுதாயம், உறவுகளின் நிலையான தன்மைக்குரிய அர்ப்பணத்தை மதிக்காமல் நடைபோடுகிறது என்பதையும், அதன் விளைவுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

அன்பு, அல்லது, தன்னையே கையளித்தலை ஊக்குவிக்கும் உண்மை நிலைகளுக்கு ஆதரவளிக்கத் தவறும் கலாச்சார மதிப்பிழத்தல்கள் குறித்த எச்சரிக்கைகளை இன்றைய சமுதாயம் கண்டுகொள்வதில்லை. இன்றைய மக்கள், அன்புநிறைந்த ஓர் உறவிலிருந்து எவ்வளவு விரைவாக இன்னொரு உறவை நோக்கி மாறிச் செல்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். உறவு என்பதை நம் விருப்பம்போல் நினைத்த நேரத்தில் மாற்றிக் கொள்ளலாம், அல்லது, ஒரேயடியாக தடை செய்யலாம் என நம்புகின்றனர். உறவுகளில் நிரந்தர அர்ப்பணம் குறித்த அச்சம், மற்றும், தனிமைக்கு தீர்வுகாண்பது,  பாதுகாப்பு வழங்குதல், சேவை புரிதல், தனக்கென தனி நேரம் வேண்டும் என விரும்புதல், போன்றவைகளோடு உறவு நிலைகளைத் தொடர்புபடுத்தி, இலாப நட்டங்களை கணக்குப் பார்க்கும் மனநிலைகளையும் எண்ணிப் பார்க்கிறேன். நுகர்வுப் பொருட்களையும், சுற்றுச்சுழலையும் நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோமோ, அவ்வாறே, அன்பு நிறைந்ததாக இருக்கவேண்டிய உறவுகளையும் பயன்படுத்துகிறோம். இன்றைய சமுதாயத்தில், அனைத்தையும், பயன்படுத்திவிட்டு  தூக்கியெறியவல்லதாகவும், எடுப்பது உடைப்பது, கடைசி துளி பயன்பாடுவரை உறிஞ்சிவிட்டு சக்கையாக தூக்கியெறிவது, என்பதாக சென்று கொண்டிருக்கிறோம். தேவைப்படும்வரை பயன்படுத்திவிட்டு கடைசியில், போய்வருகிறேன் என கையசைத்து பிரிந்து சென்றுவிடுகிறோம். தன்னை மட்டுமே உயர்வாக நினைக்கும் மனநிலை என்பது, நம் தேவைகளையும், ஆவல்களையும் தாண்டிச் சென்று, மற்றவர்களையும் நோக்கும் மனநிலைக்கு நம்மை இயலாததாக மாற்றுகின்றது. இவ்வாறு, தன்னலப் போக்குடன் நடந்துகொள்பவர்கள், அதாவது, மற்றவர்களைப் பயன்படுத்துபவர்களாக மாறுபவர்கள், ஒரு நாள் அவர்களே பயன்படுத்தப்படுபவர்களாக மாற்றப்பட்டு, அவர்கள் கொண்டிருக்கும் மனநிலையாலேயே தூக்கியெறியப்படுவர். குடும்ப உறவுப் பிரிவுகள் பெரும்பாலும், ஓரளவு முதிர்ந்தவர்களிடையே இடம்பெறுவதைக் காணலாம். ஒருவித சுதந்திரத்தை விரும்பும் மனநிலைக்கு வரும் இவர்கள், இருவரும் ஒன்றிணைந்து முதுமையில் வளர்வதோடு, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்துகொண்டு, ஒருவரையொருவர் கவனித்துக் கொள்வோம் என சிந்தித்துப் பார்த்து, அதனை ஏற்க மறுக்கின்றனர், என்பதே காரணம். (அன்பின் மகிழ்வு 39)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 February 2021, 15:21