இலங்கையில் மரணதண்டனையை எதிர்த்து... இலங்கையில் மரணதண்டனையை எதிர்த்து... 

அமெரிக்க ஐக்கிய நாட்டில், மரணதண்டனை நிறுத்தப்படுமாறு

அமெரிக்க ஐக்கிய நாட்டில், இப்புதனன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள Lisa Montgomery என்ற பெண், மனநிலை பாதிக்கப்பட்டவர், மற்றும், பலமுறை, முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டவர் என்று பேராயர் Coakley அவர்கள் கூறியுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில், பல்வேறு மரணதண்டனை கைதிகளுக்கு, அத்தண்டனை நிறைவேற்றப்படும் நாள்கள் நெருங்கிவரும்வேளை, இத்தகைய நடவடிக்கை நிறுத்தப்படுமாறு, அந்நாட்டுத் தலத்திருஅவை அதிகாரி ஒருவர், அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சனவரி மாதத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் மூன்று மாநிலங்களில், மரணதண்டனைகள் நிறைவேற்றப்படுவது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளதைப் பற்றி, வத்திக்கான் செய்தித் துறைக்குப் பேட்டியளித்த, அந்நாட்டு ஆயர் பேரவையின் உள்நாட்டு நீதி மற்றும், மனித முன்னேற்ற பணிக்குழுவின் தலைவரான Oklahoma City நகரின் பேராயர் Paul Coakley அவர்கள், இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், இம்மாதத்தில், மரணதண்டனைகள் நிறைவேற்றப்படும் கைதிகளின் எண்ணிக்கை, திடீரென அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றது என்று கூறியுள்ள பேராயர் Coakley அவர்கள், கடந்த ஆண்டில், அந்நாட்டின் ஐம்பது மாநிலங்களில், பத்து கைதிகளுக்கு, மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்களின் அரசு, பதவி விலகவிருக்கும் இறுதி நாள்களில், அவ்வரசு, மரணதண்டனைகளை நிறைவேற்றுவதை துரிதப்படுத்தி வருகின்றது என்றுரைத்துள்ள பேராயர் Coakley அவர்கள், கத்தோலிக்கத் திருஅவை, மரணதண்டனைகளுக்கு எதிராக எப்போதுமே குரல் எழுப்பி வருகின்றது என்றும் கூறினார்.

சனவரி 13, இப்புதனன்று, அமெரிக்க மத்திய அரசு Lisa Montgomery என்ற பெண்ணுக்கு, இத்தண்டனையை நிறைவேற்றியுள்ளது. அந்நாட்டில் 1953ம் ஆண்டுக்குப்பின், மரணதண்டனையை நிறைவேற்றப்பட்டுள்ள முதல் பெண், இவர் ஆவார். இதுவே 2021ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட முதல் மரணதண்டனையாகும்.

மேலும், 1992ம் ஆண்டில் ஏழு கொலைகளைச் செய்த Corey Johnson என்பவருக்கு, சனவரி 14, இவ்வியாழனன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது

இவ்வாறு அந்நாட்டில் நிறைவேற்றப்படும் மரணதண்டனைகள் குறித்து கவலை தெரிவித்துள்ள பேராயர் Coakley அவர்கள், மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள Montgomery அவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர் மற்றும், பலமுறை முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டவர் என்றும் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஐம்பது மாநிலங்களில், 28ல் மரணதண்டனைகள் நிறைவேற்றப்படுவது நடைமுறையில் உள்ளன. அந்நாட்டின் அதிபர் டிரம்ப் அவர்களின் அரசு, 2019ம் ஆண்டில் மரணதண்டனைகள் நிறைவேற்றுவதை மீண்டும் நடைமுறைக்குக் கொணர்ந்தது. தற்போது அந்நாட்டில் 51 மரணதண்டனை கைதிகள் உள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2021, 15:19