தென் கொரிய கோவில் ஒன்றில் தென் கொரிய கோவில் ஒன்றில் 

கோவிட்-19ஐ நம்பிக்கை எனும் பண்பால் எதிர்கொள்ள

தென் கொரியாவில் நிலவும் சமுதாயப் போராட்டங்கள் மற்றும், அரசியல் பிரச்சனைகளுக்கு, அமைதியான கலந்துரையாடல்கள் வழியாக மட்டுமே, தீர்வுகாண முடியும் - பேராயர் Yong-hoon

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று தொடர்ந்து உருவாக்கிவரும் சவால்களை, நம்பிக்கை எனும் பண்பால் எதிர்கொள்ளவேண்டும் என்று, கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Mathias Lee Yong-hoon அவர்கள் கூறியுள்ளார்.

2020ம் ஆண்டில் உலகினர் சந்தித்த துயர நிகழ்வுகள் பற்றி, யூக்கா செய்திக்குப் பேட்டியளித்துள்ள, Suwon உயர்மறைமாவட்ட பேராயர் Yong-hoon அவர்கள், கொரோனா பெருந்தொற்று உலக அளவில் ஏற்படுத்தியுள்ள பல்வேறு நெருக்கடிகள், உயிரிழப்புகள்,  மற்றும், வாழ்வாதார இழப்புக்களுக்கு மத்தியில், நாம் ஒருவர் ஒருவருக்கு ஆதரவாக வாழவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த பெருந்தொற்று, சுற்றுச்சூழலையும், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியையும், நெறியற்றவழியில் நாம் அழித்துள்ளதன் பாதிப்புக்களில் ஒன்று என, கவலை தெரிவித்துள்ள பேராயர் Yong-hoon அவர்கள், இந்நோய், விரைவில் ஒழிவதற்காக, கடவுளின் இரக்கத்தை தான் மன்றாடுவதாகக் கூறியுள்ளார்.   

‘ஆண்டவர் ஆதாமை நோக்கி, நீ எங்கே இருக்கிறாய்?’ (தொ.நூ.3,9) என்று கேட்ட கேள்வியை, இன்றைய மனிதருக்கும் அவர் கேட்கின்றார் என்றும், நம் வாழ்வில் முக்கியமானது எது என்பதை தெளிந்து தேர்வுசெய்வோம் என்றும், துன்புறும் மனிதர்கள் மீது அன்புகூர்ந்து அவர்களுக்கு உதவுவோம் என்றும், பேராயர் Yong-hoon அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

தென் கொரியாவில் நிலவும் சமுதாயப் போராட்டங்கள் மற்றும், அரசியல் தலைமைத்துவம் பற்றிய சிந்தனைகளையும் வழங்கியுள்ள பேராயர் Yong-hoon அவர்கள், ஒருவர் மற்றவரின் கருத்தியல்களையும், அவர்களின் பங்கையும் மதிக்கும் முறையில் இடம்பெறும் அமைதியான கலந்துரையாடல்கள் வழியாக மட்டுமே, கருத்துவேறுபாடுகளுக்குத் தீர்வுகாண முடியும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 January 2021, 15:07