ஆர்த்தடாக்ஸ் அருள்பணிErzpriester Radu Constantin Miron ஆர்த்தடாக்ஸ் அருள்பணிErzpriester Radu Constantin Miron 

ஜெர்மனி – 2021, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆண்டு

பிளவுபட்டுள்ள இன்றைய உலகில், ஒன்றிப்புச் செய்தியை வழங்கும் விதமாக, ஜெர்மன் கிறிஸ்தவ சபைகள், 2021ம் ஆண்டை, தேசிய அளவில் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆண்டாகச் சிறப்பித்து வருகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜெர்மனியிலுள்ள கிறிஸ்தவ சபைகள், உரையாடல் மற்றும், பகிர்வு வழியாக, தங்களுக்கு இடையே உறவுகளை உறுதிப்படுத்தும் நோக்கத்தில், 2021ம் ஆண்டை, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆண்டாகச் சிறப்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.

சனவரி 24, இஞ்ஞாயிறன்று, ஹாம்பர்க் நகரில், ஜெர்மனியின் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதன்மைக்குருவும், அந்நாட்டு கிறிஸ்தவ சபைகள் கழகத்தின் தலைவருமான, அருள்பணி Radu Constantin Miron அவர்கள், திருவழிபாடு ஒன்றை தலைமையேற்று நிறைவேற்றி, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆண்டை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.

“என் அன்பில் நிலைத்திருங்கள் மற்றும், நீங்கள் மிகுந்த கனி தருவீர்கள்” (யோவா.15:5-9) என்ற மையக்கருத்துடன், இவ்வாண்டு சிறப்பிக்கப்பட்ட, 54வது கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் தலைப்பையொட்டி மறையுரையாற்றிய அருள்பணி மிரோன் அவர்கள், கிறிஸ்தவ நம்பிக்கையும், செயல்பாடும், ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்க முடியாதவை என்று கூறினார்.

மிகுந்த கனிதருதல் என்பது, நம் அயலவர்களுக்குப் பிறரன்புப் பணிகள் ஆற்றுவதாகும் மற்றும், தூய ஆவியாரில் வளர்வதாகும் என்றும், ஆர்த்தடாக்ஸ் அருள்பணி மிரோன் அவர்கள், உரையாற்றினார்.

இத்திருவழிபாட்டில், கத்தோலிக்கத் திருஅவையின் சார்பாக, ஹாம்பர்க் உயர்மறைமாவட்ட துணை ஆயர் Horst Eberlein அவர்கள் பங்குபெற்றார்.

பிளவுண்ட ஓர் உலகில் ஒன்றிப்புச் செய்தியை வழங்கும் விதமாக, ஜெர்மனியிலுள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளும், தேசிய அளவில், 2021ம் ஆண்டை கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆண்டாகச் சிறப்பித்து வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 January 2021, 15:16