கர்தினால் ஜோசப் கூட்ஸ் கர்தினால் ஜோசப் கூட்ஸ் 

செபிக்க மட்டுமல்ல, அன்புகூரவும் தெரிந்திருக்க வேண்டும்

கர்தினால் கூட்ஸ்: எந்தவொரு மதமும், வன்முறையை போதிப்பதில்லை என்பதை மனதில்கொண்டு, அமைதிக்காக உழைப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒரே மலர்க்கொத்தில் இணைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வண்ண மலர்களைப்போல், பல்வேறு மதங்களின், மொழிகளின் மக்கள், ஒருவர் ஒருவரை மதித்து ஒரே குடும்பமாக, மகிழ்வுடன் வாழவேண்டும் என அழைப்பு விடுத்தார், பாகிஸ்தான் கர்தினால் ஜோசப் கூட்ஸ்.

தான் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி வழங்கப்பட்ட விருந்தில் கலந்துகொன்டு உரையாற்றிய கராச்சி கர்தினால் கூட்ஸ் அவர்கள், செபிக்க தெரிந்திருந்தால் மட்டும் போதாது, தமக்கு அடுத்திருப்பவரை அன்புகூர ஒவ்வொருவரும் அறிந்திருக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

தங்கள் குடும்பங்களை விட்டு வெகுதூரம் விலகிவந்து, பல ஆண்டுகளாக நாட்டுக்குத் திரும்பாமல் பாகிஸ்தானில் பணியாற்றிய பெல்ஜியம் நாட்டு மறைபோதகர்களைப் பார்த்தே, தானும், அருள்பணியாளராக மாற ஆவல் கொண்டதாக உரைத்த கர்தினால் கூட்ஸ் அவர்கள், இன்று பாகிஸ்தான் தலத்திருஅவை பல்வேறு பள்ளிகள் மற்றும் மருத்துவ மையங்கள் வழியாக அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் சிறப்புச் சேவையாற்றிவருவதை பெருமையுடன் குறிப்பிட்டார்.

மனிதாபிமானம் என்ற அடிப்படைச் செய்தியை அனைத்து மதங்களும் கொண்டிருப்பதால், அனைத்து மதங்களும் ஒன்றித்து, பல்வேறு வண்ணங்களைக் கொண்ட ஒரே மலர்க்கொத்தாக சிறக்கமுடியும் என்ற அழைப்பையும் முன்வைத்த கர்தினால், நல்லவர்கள் பலர் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள், அவர்களிடமிருந்து நாம் அதிகம் கற்றுக்கொள்ள முடியும் என மேலும் கூறினார்.

நாமனைவரும் ஏதாவது ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களாகவும், பல்வேறு மதிப்பீடுகளைக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து வருகிறோமேயொழிய, அவைகளை வாழ்வாக்குவதில்லை என்றுரைத்த கர்தினால் கூட்ஸ் அவர்கள், எந்தவொரு மதமும் வன்முறையை போதிப்பதில்லை என்பதை மனதில்கொண்டு, அமைதிக்காக உழைப்போம் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2021, 14:44