கருப்பு நாசரேன் திருநாள் திருப்பலிகள் நிகழும் Quiapo ஆலயம் கருப்பு நாசரேன் திருநாள் திருப்பலிகள் நிகழும் Quiapo ஆலயம் 

கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படும் கருப்பு நாசரேன் திருநாள்

பிலிப்பீன்ஸ் நாட்டில் மிகப்பெரும் அளவில் சிறப்பிக்கப்பட்டு வந்த கருப்பு நாசரேன் திருநாள், இவ்வாண்டு, சனவரி 9ம் தேதி சனிக்கிழமை, மிகக் கண்டிப்பான கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது

ஜெரோம் லூயிஸ்: வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் ஆண்டும், பிலிப்பீன்ஸ் நாட்டில் மிகப்பெரும் அளவில் சிறப்பிக்கப்பட்டு வரும் கருப்பு நாசரேன் திருநாள், இவ்வாண்டு, சனவரி 9ம் தேதி சனிக்கிழமை, மிகக் கண்டிப்பான கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும், மணிலா பெரு நகரின் சாலைகள் வழியே, 7 கி.மீ. தூரத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வந்த 20மணி நேர ஊர்வலம், இவ்வாண்டு நடைபெறாது என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திருநாளை முன்னிட்டு, Quiapo ஆலயத்தில் நாள் முழுவதும் நடைபெறும் திருப்பலிகளில், மக்கள்,  பெரும் எண்ணிக்கையில் கலந்துகொள்வதற்கும், கருப்பு நாசரேன் உருவத்தை தொடுவதற்கும், இவ்வாண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Quiapo ஆலயத்தில், அதிகாலை முதல் இரவு முடிய நடைபெறும் 15 திருப்பலிகளில், ஒவ்வொரு திருப்பலியிலும் 400 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்றும், எனவே, இத்திருநாள் திருப்பலிகளில் நேரடியாகக் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை, அதிகப்படியாக, 6000 பேர் மட்டுமே என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான திரைகளில் இத்திருப்பலிகள் நேரடியாக ஒளிபரப்பப்படுவதை மக்கள் காண்பதற்கு, வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், கருப்பு நாசரேன் உருவம், யாரும் தொடமுடியாத உயரத்தில் வைக்கப்பட்டிருப்பதை மக்கள் கண்டு வணங்கிச் செல்லவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 4.30 மணிக்கு, முதல் திருப்பலி துவங்கி, இரவு 10.15 மணிக்கு இறுதி திருப்பலி நடைபெறும் என்றும், இத்திருப்பலிகளில் 15 வயதுக்கு உட்பட்டவர்களும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் கலந்துகொள்ள இயலாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முள்முடியும், சிவப்புப் போர்வையும் அணிந்து, சிலுவையைச் சுமந்து, முழந்தாள்படியிட்ட வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் இயேசுவின் திரு உருவம், கருப்பு நாசரேன் என்ற பெயருடன், 1606ம் ஆண்டு முதல், பிலிப்பீன்ஸ் மக்களின் மிகப் புகழ்பெற்ற பக்தி முயற்சிகளின் மையமாக அமைந்துவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 January 2021, 14:58