வெனெசுவேலா நாட்டு குடும்பம் வெனெசுவேலா நாட்டு குடும்பம்  

மகிழ்வின் மந்திரம்: நேரம், சூழ்வெளியைவிட பரந்து விரிந்தது

பல்வேறு மரபுகள், கலாச்சாரங்கள், மற்றும், பழக்கவழக்கங்களைக்கொண்ட குடும்பங்களைப் புரிந்துகொண்டு அவற்றுக்கு ஏற்றமுறையில் திருஅவையின் பணிகள் அமைவது வரவேற்கத்தக்கது

மேரி தெரேசா: வத்திக்கான்

“நேரம், சூழ்வெளியைவிட அதாவது, நம்மைச் சூழ்ந்திருக்கும் வெளியைவிட பரந்து விரிந்தது”. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் கூற்று இது. இந்த கூற்று, இறைவா உமக்கே புகழ் (Laudato Si), அன்பின் மகிழ்வு (Amoris Laetitia), நற்செய்தியின் மகிழ்வு (Evangeli Gaudium), நம்பிக்கை ஒளி (Lumen Fidei)  ஆகிய திருத்தந்தையின் முக்கிய திருமடல்களில் பிரதிபலிப்பதை நாம் காணலாம். மேய்ப்புப்பணியில் குடும்பங்கள் மீது காட்டப்படவேண்டிய அக்கறையை வலியுறுத்தும் அன்பின் மகிழ்வு என்ற திருமடலின் மூன்றாவது எண்ணை, இந்த கூற்றை வைத்தே திருத்தந்தை ஆரம்பித்துள்ளார்.

“நேரம், சூழ்வெளியைவிட பரந்து விரிந்தது” என்பதால், மறைப்படிப்பினைகள், நன்னெறி அல்லது மேய்ப்புப்பணி விவகாரங்கள் சார்ந்த அனைத்து கலந்துரையாடல்களும், திருஅவையின் ஆசிரியத் தலையீடுகளால் நிவர்த்திசெய்யப்படவேண்டும் என்ற அவசியமில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று திருத்தந்தை கூறியுள்ளார். திருஅவையில், போதனை மற்றும், நடைமுறை வழக்கத்தில் ஒற்றுமை நிச்சயமாகத் தேவைப்படுகின்றது. ஆயினும், இது, அந்த போதனைகளின் சில கூறுகளுக்கு பல்வேறு வழிகளில் விளக்கமளிப்பதை, அல்லது, அதிலிருந்து சில விளைவுகளை எடுத்துக்கொள்வதை இயலாததாக ஆக்குவதில்லை. தூய ஆவியார் முழு உண்மையை நோக்கி நம்மை வழிநடத்துவதுபோலவும், (யோவா.16,13), அவர், கிறிஸ்துவின்  பேருண்மைக்குள் நம்மை முழுமையாய் இட்டுச்செல்லும்வரையிலும், அவர் ஆற்றுவது போலவே அனைத்தையும் நாம் பார்க்கக் கூடியவர்களாய் ஆக்கும்வரையிலும், இதுவும் எப்போதும் அமைந்துள்ளது. இருந்தபோதிலும், ஒவ்வொரு நாடும், மாநிலமும், தங்கள் கலாச்சாரம், மரபுணர்வுகள், உள்ளூர் தேவைகள் ஆகியவற்றுக்கு ஏற்றால்போல் சிறந்த தீர்வுகளைத் தேடலாம். கலாச்சாரங்கள் பலதரப்பட்டவை. உண்மையில் அவை மதிக்கப்பட்டு பயன்படுத்தப்படவேண்டும் என்றால், ஒவ்வொரு பொதுவான கொள்கையும்,  பண்பாட்டுமயமாக்கப்படவேண்டும். (எண் 3)

பல்வேறு மரபுகள், கலாச்சாரங்கள், மற்றும், பழக்கவழக்கங்களைக்கொண்ட குடும்பங்களைப் புரிந்துகொண்டு அவற்றுக்கு ஏற்றமுறையில் திருஅவையின் பணிகள் அமைவது வரவேற்கத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 January 2021, 13:59