புலம்பெயர்ந்தோரிடையே JRS பணிகள் - இயேசுசபை அருள்பணி Tom Smolichடன் புலம்பெயர்ந்தோரிடையே JRS பணிகள் - இயேசுசபை அருள்பணி Tom Smolichடன்  

நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்ல காரணங்கள் உள்ளன

ஒன்றிணைந்து பல நல்ல விடயங்களை ஆற்ற முடியும் என்பதை, தன் நடவடிக்கைகள் வழியாக கற்பித்து வரும் JRS அமைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த 40 ஆண்டுகளாக புலம்பெயர்ந்தோர், மற்றும், ஏழைகளிடையே சிறப்புப் பணியாற்றி வரும் இயேசு சபையினரின் JRS என்ற புலம்பெயர்ந்தோர் பணி அமைப்பு, தற்போதைய கோவிட்-19 காலத்தில் புதிய திட்டங்களுடன் செயலாற்றி வருவதாக அதன் அனைத்துலக இயக்குனர் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தானின் Bamyan பகுதியில், கோவிட்-19 கொள்ளைநோய் காரணமாக, கல்வி நிலையங்கள் மூடப்பட்டபோது, இயேசு சபையினரின் JRS அமைப்பு, வானொலி, மற்றும் தொலைக்காட்சித் தொடர்புகள் வழியாக, சிறார்களுக்கு கல்வியைத் தொடர உதவியதாகவும், எத்தியோப்பியாவில் வாழ்ந்த, சொமாலி நாட்டுப் புலம்பெயர்ந்தோர், இக்கொள்ளைநோய் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டபோது, அவர்களுக்கு உதவிகளை வழங்குவதில் முன்னணியில் நின்றதாகவும், இவ்வமைப்பின் அனைத்துலக இயக்குனர், இயேசு சபை அருள்பணி Thomas Smolich அவர்கள், தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

லெபனான் நாட்டின் பெய்ரூட் பகுதியில், ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி இடம்பெற்ற வெடி விபத்துகளில் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் தேவையான உதவிகளை, பிறரன்பு அமைப்புக்களுடன் இணைந்து ஆற்றியுள்ளதாக உரைக்கும் இந்த அறிக்கை, ஒன்றிணைந்து பல நல்ல விடயங்களை ஆற்றமுடியும் என்பதை, JRS அமைப்பு, தன் நடவடிக்கைகள் வழியாக கற்பித்து வருவதாக தெரிவிக்கிறது.

தனிமையில் இருப்போர், குடும்பங்களிலிருந்து பிரிந்துவாழ்வோர், கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு கைகொடுத்து அவர்களின் குரலாகச் செயல்படும் JRS அமைப்பின் 40ம் ஆண்டு நிறைவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியையும், தன் அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ள, இவ்வமைப்பின் அனைத்துலக இயக்குனர் அருள்பணி Smolich அவர்கள், இந்த கொள்ளைநோய் காலத்திலும், நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்ல  காரணங்கள் உள்ளன என்பதை மனதில் கொண்டவர்களாக, புதிய ஆண்டை நோக்கி நடைபோடுவோம் என தன் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 December 2020, 15:14