கோவிட்-19 தடுப்பூசி மருந்து கோவிட்-19 தடுப்பூசி மருந்து 

தடுப்பூசி மருந்துகள் குறித்து அமெரிக்க ஆயர்கள் அறிக்கை

கோவிட்-19 தடுப்பூசி மருந்துகள், கருச்சிதைவு செய்யப்பட்ட உயிர்களின் திசுக்களிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளன என்பது, நன்னெறி சார்ந்த ஒரு கேள்வியை நம்முன் வைத்துள்ளது - அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோயிலிருந்து காப்பாற்ற அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள், கருச்சிதைவு செய்யப்பட்ட உயிர்களின் திசுக்களிலிருந்து எடுக்கப்பட்ட உயிரணுக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது, நன்னெறி சார்ந்த ஒரு கேள்வியை நம்முன் வைத்துள்ளது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 14, இத்திங்களன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல நகரங்களில் கோவிட்-19 தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, இந்த ஊசி மருந்து தயாரிக்கப்பட்ட வழிகள் குறித்த மனச்சான்று தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.

இக்கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் சார்பில், அப்பேரவையின் கோட்பாட்டு பணிக்குழு, மற்றும் வாழ்வு சார்ந்த செயல்பாடுகளின் பணிக்குழு ஆகியவற்றின் தலைவர்களான ஆயர் Kevin Rhoades, மற்றும் பேராயர் Joseph Naumann ஆகியோர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

இதுவரை உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள், கருச்சிதைவு செய்யப்பட்ட உயிர்களின் திசுக்களிலிருந்து எடுக்கப்பட்ட உயிரணுக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்தியுள்ள ஆயர்கள், இந்த தடுப்பூசிகளை உருவாக்கியுள்ள நிறுவனங்களின் முடிவுகளில் நாம் நேரடியாகப் பங்கேற்காததால், இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

மேலும், இந்தக் கொள்ளைநோயின் தீவிரம் கருதியும், இவ்வேளையில் மக்களின் நலனைக் காப்பது அனைவரின் கடமை என்பதாலும், தடுப்பூசிகளைப் பெறுவதற்கு தடையேதும் இல்லை என்பதை, ஆயர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த தடுப்பூசிகளை இதுவரை உருவாக்கியுள்ள Pfizer, Moderna, மற்றும் AstraZeneca ஆகிய மூன்று நிறுவனங்களில், AstraZeneca மேற்கொண்டுள்ள வழிமுறைகள் நன்னெறி சார்ந்த கேள்விகளை, இன்னும் கூடுதலாக எழுப்புகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், வேறு இரு நிறுவனங்களின் தடுப்பூசிகள் கிடைக்காத சூழலில், நம் உயிரையும், அடுத்தவர் உயிரையும் காக்கும் நோக்கத்துடன், இந்த நிறுவனத்தின் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்தக் கொள்ளைநோயிலிருந்து நம்மைக் காக்கக்கூடிய தடுப்பூசிகளை, இன்னும் அதிகமான நன்னெறியுடன் உருவாக்க மருத்துவ உலகம் முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளையும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை இந்த அறிக்கையில் விடுத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2020, 15:18