படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். - யோவான் 21:9 படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். - யோவான் 21:9 

விவிலியத்தேடல்: உயிர்ப்புக்குப்பின்னும் தொடரும் புதுமைகள் 3

திபேரியக் கடலில் நிகழ்ந்த ஏராளமான மீன்பிடிப்பு தெளிவான ஒரு புதுமையாகத் தெரிந்தாலும், அதைவிட, இன்னும் சில அழகானப் புதுமைகளும் அங்கு நிகழ்ந்ததை நாம் உணரலாம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

உயிர்ப்புக்குப்பின்னும் தொடரும் புதுமைகள் 3

தன் உயிர்ப்பை, ஓர் உலக அதிசயமாக விளம்பரப்படுத்த இயேசு நினைத்திருந்தால், அவர், கல்லறையிலிருந்து உயிர்த்ததை, எருசலேம் மக்கள் அனைவரும் காணக்கூடிய மாபெரும் ஒரு காட்சியாக மாற்றியிருக்கலாம். அவரது பாடுகளையும், மரணத்தையும் மக்கள் கண்டதுபோலவே, அவரது உயிர்ப்பையும் அவர்கள் கண்டிருந்தால், அது உலக மகாப் புதுமையாக மாறியிருக்கும். அதேவண்ணம், இயேசு, தன் உயிர்ப்பை, ஒரு வெற்றியாகக் கொண்டாட விழைந்திருந்தால், உயிர்த்தெழுந்ததும், தன்னை மரணத்திற்கு உட்படுத்திய பிலாத்து, தலைமைக்குரு மற்றும் ஏனைய மதத்தலைவர்களுக்கு முதலில் தோன்றியிருக்க வேண்டும்.

இவை எதையும் செய்யாமல், இயேசு, அன்னை மரியா, சீடர்கள், தன் நண்பர்கள் ஆகியோரை மட்டுமே சந்தித்தார். அன்னை மரியாவை அவர் சந்தித்தார் என்று நற்செய்திகள் எதுவும் சொல்லவில்லை எனினும், அவர் கட்டாயம் தன் அன்னையை முதலில் சந்தித்து ஆறுதல் வழங்கியிருப்பார் என்பதை நாம் நம்பலாம்.

இந்த நம்பிக்கையை, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 1997ம் ஆண்டு, மே மாதம் வழங்கிய ஒரு புதன் மறைக்கல்வி உரையில் இவ்வாறு கூறியுள்ளார்:

"உயிர்த்த இயேசு, அன்னை மரியாவுக்கு முதன் முதலாகத் தோன்றினார் என்று எண்ணுவது சரியானது. இயேசுவின் கல்லறைக்குச் சென்ற ஏனைய பெண்களுடன் அன்னை மரியா செல்லவில்லை என்பது, (காண்க. மாற். 16:1; மத். 28:1) இந்த எண்ணத்தை உறுதிசெய்கிறது. சிலுவையடியில் இறுதிவரை தன்னுடன் இருந்த பெண்களை, இயேசு, தன் உயிர்ப்பின் தூதர்களாக மாற்றிட தீர்மானித்தார். அந்தத் தூதர்களில், முதன்மையான தூதராக, அவர், தன் அன்னையைத் தெரிவு செய்தார் என்பதை, நாம் உறுதியாக நம்பலாம்."

தன் உயிர்ப்பு, உலகத்திற்கு, குறிப்பாக, தன்னைக் கொன்றவர்களுக்கு, ஒரு பாடமாக, ஓரு வெற்றி விழாவாக, ஒரு மந்திரக்காட்சியாக அமையவேண்டும் என்பது, இயேசுவின் நோக்கம் அல்ல. இவ்வுலக வாழ்வில், தன்னுடன், இன்பத்திலும், துன்பத்திலும் உடன்வந்த சீடர்களையும், தனக்கு நெருங்கியவர்களையும்,  நம்பிக்கையால் நிறைத்து, இனி அவர்கள் தொடரவிருக்கும் போராட்டத்தில் அவர்களுக்கு உறுதியை வழங்குவது ஒன்றே, இயேசுவின் நோக்கமாக அமைந்தது. இந்த நோக்கத்தை நிறைவேற்ற, இயேசு, அவர்களை பலமுறை சந்தித்தார். அச்சந்திப்புகளின் ஓர் உச்சகட்டமாக, திபேரியக் கடல் அருகே நடந்த புதுமையை நாம் எண்ணிப்பார்க்கலாம்.

யோவான் நற்செய்தி 21ம் பிரிவில் பதிவாகியுள்ள இந்நிகழ்வு, சீடர்களின் மனத்தளர்ச்சியை முதலில் பதிவு செய்துள்ளது. இயேசுவின் கல்வாரி மரணத்திற்குப்பின், அவரை நம்பி வாழ்வதைவிட, தங்கள் பழைய வாழ்வுக்கு திரும்புவது மேல் என்ற தீர்மானத்துடன் மீன்பிடிக்கச் சென்றபோது, திபேரியக் கடலருகே இயேசு அவர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பை, யோவான் நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கிறோம்:

யோவான் 21: 3ஆ-7

அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். அவர், “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்” என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.

கரையில் நின்றவண்ணம், பகல் நேரத்தில் தங்களை மீன்பிடிக்கப் பணித்த அந்த மனிதர் யார் என்பது தெரியாதபோதும், ஏதோ ஒரு மந்திரச் சக்தியால் கட்டுண்டு வலை வீசினர், சீடர்கள். இரவெல்லாம் வலையில் விழாத மீன்கள், பகல்நேரத்தில் ஏராளமாய் வந்து விழுந்தன. முன்பு ஒருமுறை, இதேபோல் கெனசரேத்து ஏரியில் நடந்த புதுமை, சீடர்களின் நினைவில் தோன்றியிருக்கும். ஏராளமான மீன்கள் சிக்கியதைக் கண்ட 'இயேசுவின் அன்புச் சீடர்', பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்” என்றார். அதைக் கேட்டவுடன், சீமோன் பேதுரு, ஆண்டவரை நோக்கி விரைந்தார்.

கெனசரேத்து ஏரியிலும், திபேரியக் கடலிலும் நடந்த இரு புதுமைகளையும் இணைத்துச் சிந்திக்கும்போது, சீமோன் பேதுருவுக்கும், இயேசுவுக்கும் இடையே நிலவிய உறவில் ஒரு புதிய ஆழம் உருவானதைப் புரிந்துகொள்கிறோம்.

கெனசரேத்து ஏரியில் கிடைத்த பெருமளவு மீன்பிடிப்பைக் கண்டதும், பேதுரு இயேசுவின் காலில் விழுந்து, "ஆண்டவரே, நான் பாவி, என்னைவிட்டுப் போய்விடும்" (லூக்கா 5:8) என்று வேண்டினார்.

திபேரியக் கடலில் மீன்பிடிக்க வருவதற்கு முன், இயேசுவைத் தனக்குத் தெரியாது என்று மறுதலித்த பாவி தான் என்பதை நன்கு உணர்ந்திருந்த பேதுரு, இம்முறை, பெருமளவு மீன்பிடிப்பைக் கண்டதும், இயேசுவை விட்டு விலகிச்செல்ல எண்ணாமல், இயேசுவை நோக்கிச் செல்கிறார்.

பேதுருவைத் தொடர்ந்து, ஏனையச் சீடர்கள் கரையை அடைந்தபோது, ஆனந்த அதிர்ச்சியொன்று அவர்களுக்குக் காத்திருந்தது. அங்கு அவர்கள் கண்ட கனிவுநிறைந்த ஒரு காட்சியை, யோவான் நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கிறோம்:

யோவான் 21: 8-14

மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள்... படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது... இயேசு அவர்களிடம், “உணவருந்த வாருங்கள்” என்றார். சீடர்களுள் எவரும், “நீர் யார்?” என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள் (யோவான் 21:9) என்று இப்பகுதியில் வாசிக்கிறோம். 'கரியினால் தீ மூட்டப்பட்டிருக்கும்' இந்தக் காட்சி, இயேசு தன் பாடுகளைச் சந்தித்த அந்த இரவை நமக்கு நினைவுறுத்துகிறது. அங்கு, தலைமைக்குருவின் வீட்டு முற்றத்தில் பணியாளர்களும் காவலர்களும் கரியினால் தீ மூட்டி அங்கே நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள் (யோவான் 18:18) என்று யோவான் குறிப்பிட்டுள்ளார். அவர்களோடு நின்று குளிர் காய்ந்துகொண்டிருந்த பேதுருவிடம், "நீயும் இம்மனிதனுடைய சீடர்களில் ஒருவன்தானே?" என்ற கேள்வி எழுந்தபோது, தனக்கு இயேசுவைத் தெரியாது என்று பேதுரு மறுதலித்தார். தலைமைக்குருவின் வீட்டு முற்றத்தில் மூட்டப்பட்டிருந்த நெருப்பு, பேதுருவின் மறுதலிப்புக்கு ஓர் அடையாளமாக இருந்ததுபோல், திபேரியக் கடலருகே மூட்டப்பட்ட நெருப்பு, பேதுரு இயேசுவை முழுமையாக ஏற்றுக்கொண்டதற்கு ஓர் அடையாளமாக மாறுகிறது.

காலை உணவு முடிந்ததும், இயேசுவுக்கும், பேதுருவுக்கும் இடையே நிகழ்ந்த ஒரு சந்திப்பு விவரிக்கப்பட்டுள்ளது (யோவான் 21:15-24). இச்சந்திப்பில், பேதுருவின் அன்பு பறைசாற்றப்பட்டது; பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தான் நிறுவ வந்த இறையரசின் பணியை முன்னின்று நடத்த, பேதுருவை அழுத்தந்திருத்தமாய் கேட்டுக்கொண்டார் இயேசு. அந்தப் பணியைச் செய்வதற்கு, பேதுரு, தன் உயிரையே பலியாகத் தரவேண்டும் என்பதையும் தெளிவாகக் கூறினார். அந்தப் பணியில், அவர் தன் வாழ்வுப்பயணத்தில் தடுமாறி வீழ்ந்தாலும், இயேசு அவருடன் என்றும் உடனிருப்பார் என்ற உறுதியை, பேதுரு இச்சந்திப்பில் பெற்றார்.

1992ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் பார்சலோனா நகரில் நிகழ்ந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களில், 400 மீட்டர் ஓட்டம் துவங்கியது. உலக அளவில் தங்கப்பதக்கம் பெற்றிருந்த பிரித்தானிய வீரர், டெரெக் ரெட்மண்ட் (Derek Redmond) அவர்கள், பதக்கம் வெல்லும் கனவுடன், தன் ஓட்டத்தைத் துவக்கினார். 150 மீட்டர் தூரம் ஓடியபோது, அவரது வலதுகால் தசைநாரில் உருவான பிரச்சனையால், அவர் தடக்களத்தில் விழுந்தார். ஒரு சில நொடிகளில், மீண்டும் எழுந்து, வலதுகாலை நொண்டியபடியே, ஓட்டத்தைத் தொடர்ந்தார்.

அவ்வேளையில், பார்வையாளர்கள் பகுதியிலிருந்து, டெரெக்கின் தந்தை, ஜிம் ரெட்மண்ட் அவர்கள், பாதுகாப்பு வீரர்களைத் தாண்டி ஓடிவந்து, மகனைத் தாங்கியபடியே உடன் ஓடினார். "டெரெக், இதை நீ ஓடவேண்டும் என்று கட்டாயமில்லை" என்று தந்தை கூறினார். மகனோ, கண்களில் கண்ணீர் மல்க, "நான் இதை எப்படியாவது ஓடி முடிக்க விரும்புகிறேன்" என்று சொன்னதும், "சரி வா, நாம் சேர்ந்து ஓடுவோம்" என்று கூறி, மகனை, தன் தோள்களில் சாய்த்துக்கொண்டு ஓடினார், தந்தை. இறுதி இலக்கை நெருங்கியபோது, அந்த இறுதி சில மீட்டர் தூரத்தை இளையவர் டெரெக் தனியே ஓடி முடிக்கும்படி தந்தை அனுப்பிவைத்தார். காயமுற்ற மகனை தோளில் தாங்கியவண்ணம் தந்தை ஓடிய அக்காட்சி, ஒலிம்பிக் வரலாற்றில் தனியொரு இடம் வகிக்கிறது.

சீடர்கள் ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கைப் பந்தயத்தில், கல்வாரி காட்சிகளால் காயமுற்று விழுந்தனர். பந்தயத்திலிருந்து விலகி, தங்கள் பழைய வாழ்வைத் தொடர விரும்பினர். பந்தயத்திடலில், காயமுற்றுக் கிடந்த அவர்களைத் தூக்கி நிறுத்தி, அவர்களோடு உடன் பயணிக்கவே, இயேசு உயிர்ப்புக்குப்பின், அவர்களை, பல முறை சந்தித்தார்.

திபேரியக் கடலில் நிகழ்ந்த இப்புதுமையில், ஏராளமான மீன்பிடிப்பு தெளிவான ஒரு புதுமையாகத் தெரிந்தாலும், அதைவிட, இன்னும் சில அழகானப் புதுமைகளும் அங்கு நிகழ்ந்ததை நாம் உணரலாம். தங்கள் பழைய மீன்பிடிக்கும் வாழ்வுக்குத் திரும்பிச்செல்ல விழைந்த சீடர்களை மீண்டும், மனிதர்களைப் பிடிக்கும் பணிக்கு இயேசு அழைத்தது, ஓர் அன்னைக்குரிய பாசத்தோடு கரையில் அவர்களுக்காக காலை உணவை ஏற்பாடு செய்தது, பேதுருவை மீண்டும் தன்னுடன் முழு ஒப்புரவைப் பெறவைத்தது, அவருக்கு தலைமைப்பணியை ஒப்படைத்தது என்ற அனைத்தும் புதுமைகளே!

வாழ்வெனும் ஓட்டத்தில், பிரச்சனைகளால் காயமுற்று, நாம் வீழும்போது, குறிப்பாக, இந்தக் கொள்ளைநோய் காலத்தில் மனத்தளர்ச்சியால் நாம் வீழும் நேரங்களில், நம்மைத் தூக்கி நிறுத்தி, நமது ஓட்டத்தைத் தொடரவும், அதனை நிறைவு செய்யவும் உயிர்த்த இயேசு உதவுகிறார் என்பதை, நம் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் உணர, இறையருளை இறைஞ்சுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2020, 13:13