திருத்தந்தை, புனித சில்வேரியுஸ் திருத்தந்தை, புனித சில்வேரியுஸ்  

திருத்தந்தையர் வரலாறு ---- துன்பம் தொடர்கதையானது

திருத்தந்தை இரண்டாம் யோவான்தான் முதன்முதலில் தன் இயற்பெயரை கைவிட்டு, திருத்தந்தையானவுடன் வேறுபெயரை எடுத்துக்கொண்டார் என நம்பப்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

533ம் வருடம் பதவியேற்று இரண்டாண்டுகளே திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை இரண்டாம் யோவான் பற்றி குறிப்பிடுவதற்கு பெரிதாக எதுவும் இல்லையெனவே கூறலாம். திருத்தந்தை இரண்டாம் போனிபாஸ், 532ம் வருடம் இறந்தபின் நிலவிய சில குழப்பங்களால், திருத்தந்தைக்கான தேர்தல் என்பது 2 மாதங்களாக இழுபறியானது. இந்த இடைவெளியில் திருஅவையின் பல புனித பொருட்கள் விற்பனைக்கு வந்த இழிநிலையும் ஏற்பட்டது. இறுதியாக, திருத்தந்தையாக இரண்டாம் யோவான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கீழைநாடுகளில் நிலவிவந்த சில இறையியல் சிந்தனை முரண்பாடுகளும் ஓரளவுக்கு முடிவுக்கு வந்திருந்தன. இத்திருத்தந்தைதான் முதன்முதலில் தன் இயற்பெயரை கைவிட்டு, திருத்தந்தையானவுடன் வேறுபெயரை எடுத்துக்கொண்டார் என நம்பப்படுகிறது. இவரின் இயற்பெயர் மெர்கூரியஸ், அதாவது மெர்குரி எனும் பிறமதக் கடவுளின் பெயராக இருந்ததால், இவர் இரண்டாம் யோவான் என புதிய பெயரை எடுத்துக்கொண்டார். இவரின் இறுதிக் காலத்தில் ஒரு முக்கியப் பிரச்சனை, தீர்வுக்கென இவர் முன் கொணரப்பட்டது. அதாவது, கடவுள் மூவர் அல்லர், ஒரு முழுமுதற் பரம்பொருளே என்ற ஏரியஸ் கொள்கையை ஏற்று, பின்னர் மனம் திரும்பி திருஅவைக்குள் வந்த ஆயர்களை, ஆயராகத் தொடரவிடுவதா, அல்லது, பொது நிலையினர் பட்டியலில் சேர்ப்பதா என்பதே அந்த கேள்வி. 535ம்ஆண்டு கார்த்தேஜ் நகர் அவையில் கூடிய 217 ஆயர்களின் இக்கேள்விக்கான பதிலை வழங்குமுன்னரே 535ம் ஆண்டு மே 8ந்தேதி காலமானார் திருத்தந்தை இரண்டாம் யோவான்.

திருஅவையில் தலைமை அருள்பணியாளராக வருவதற்கு முன்னால் திருமணம் புரிந்தவராக இருந்தார் திருத்தந்தை ஹொர்மிஸ்தாஸ் என்பதனை கடந்த வாரத் தொடரில் கண்டோம். 523ம் ஆண்டு திருத்தந்தை ஹொர்மிஸ்தாஸ் இறந்தபின் அவருக்குப்பின் 6வது திருத்தந்தையாக வந்தார், அவர் மகன் சில்வேரியுஸ் (Silverius). இவர் திருஅவையின் 58வது திருத்தந்தை. இவருக்கு முன் இருந்த திருத்தந்தை Agapetus, கான்ஸ்தாந்திநோபிளில் பேரரசர் ஜஸ்டினியனை சந்திக்கச் சேன்ற வேளையில் இறந்ததைத் தொடர்ந்து, Vigilius என்பவரை திருத்தந்தையாக்க முயன்றார் கான்ஸ்தாந்திநோபிள் பேரரசி Theodora. ஆனால் இதனை முன்னரே அறிந்த Ostrogoths (உரோமைய பேரரசு காலத்தைய ஜெர்மன் இன அரசு) மன்னர் Theodatus, துணை திருத்தொண்டராக இருந்த சில்வேரியுஸை திருத்தந்தையாகப் பரிந்துரைத்து அதில் வெற்றியும் கண்டார். உரோமைய அருள்பணியாளர்கள் முதலில் இத்தேர்தலை ஏற்கவில்லை. ஆனால் மன்னர் Theodatus அனைவரின்  இசைவையும் பின்னர் பெற்று திருஅவைக்குள் மனக்கசப்பை அகற்ற உதவினார்.

ஆனால், பேரரசி Theodora எதையும் விடுவதாக இல்லை. அதற்குரிய நல்ல வாய்ப்பும் அவருக்கு கிட்டியது. Ostrogoths மன்னர் Vitiges 536ம் ஆண்டு உரோம் நகரைக் கைப்பற்றி, கிறிஸ்தவ மறைசாட்சிகளின் கல்லறைகளை உடைத்தெறிந்து அவமானப்படுத்தியபோது, இன்னொரு பக்கம் இருந்து Byzantine இராணுவத்தலைமை தளபதி Belisariusம் உரோமுக்குள் நுழைந்தார். மன்னர் Vitigesன் அத்துமீறல் நடவடிக்கைகளால் கவலைகொண்டிருந்த  திருத்தந்தை சில்வேரியுஸ், இராணுவத்தளபதி Belisariusஐ மகிழ்வுடன் வரவேற்றார். இதனை சரியாக பயன்படுத்த விரும்பிய கான்ஸ்தாந்திநோபிள் பேரரசி Theodora> Belisarius வழியாக  திருத்தந்தை சில்வேரியுஸை பதவியிறக்கம் செய்துவிட்டு, Vigiliusஐ திருத்தந்தையாக நியமிக்க திட்டமிட்டார். தளபதி Belisariusன் மனைவி Antoninaவும் இதற்கு ஆதரவு அளிக்க, ஒரு பொய்க் கடிதம் தயாரிக்கப்பட்டு, அவர்களின் திட்டம் நிறைவேறியது. அதாவது, Ostrogoths மன்னர் உரோமை ஆக்கிரமிக்க, திருத்தந்தை சில்வேரியுஸ் உதவிசெய்ய முன்வந்து எழுதியதாக போலி கடிதம் ஒன்று தயாரிக்கப்பட்டு அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

பதவிநீக்கம் செய்யப்படுவதற்கு முன் 537ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கைது செய்யப்பட்டு,  திருத்தந்தை சில்வேரியுஸின் ஆயருக்குரிய ஆடைகள் கிழித்தெறியப்பட்டன. ஒரு துறவிக்குரிய ஆடையை அவருக்கு கொடுத்து, கிழக்குப் பகுதிக்கு(துருக்கி) அவரை நாடு கடத்தினர். அதேவேளை, Vigiliusஐ உரோமை ஆயராக திருநிலைப்படுத்தினர். சில காலத்தில் உண்மையை அறியவந்த கான்ஸ்தாந்திநோபிள் பேரரசர், திருத்தந்தை சில்வேரியுஸ் எழுதியதாக குற்றஞ்சாட்டப்பட்ட மடல் குறித்து விசாரிக்க ஒரு குழுவை நியமித்தார். திருத்தந்தை சில்வேரியுஸ் இத்தாலிக்கு திரும்பவும் அனுமதித்தார். அவரும் Naples வழியாக இத்தாலிக்கு வந்தார். ஆனால் உரோமை ஆயராக இருந்த Vigilius,  பேரரசரின் ஆணையை மதிக்காமல், பேரரசி Theodora, மற்றும், இராணுவத்தலைமை தளபதி Belisariusன் மனைவி Antonina ஆகியோருடன் இணைந்து, திருத்தந்தை சில்வேரியுஸை சிறைப்பிடித்து Palmaria என்ற தீவில் கொண்டு போய் வைத்தார். அங்கேயே பல துன்பங்களை அனுபவித்து இறந்தார் புனிதரான சில்வேரியுஸ். அவர் உடல் அங்கிருந்து உரோமைக்கு கொண்டுவரப்படவில்லை. 

திருத்தந்தை Vigilius 537ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். திருத்தந்தை இரண்டாம் போனிபாஸ் அவர்கள், தனக்குப்பின் ஒருவரை திருத்தந்தையாக நியமித்தார், ஆனால் அருள்பணியாளர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாததால், தன் ஆணையை அவர்கள் முன்னிலையில் தானே எரித்தார் என முந்தைய நிகழ்ச்சியில் கேட்டது நினைவிருக்கலாம். அவ்வாறு தனக்குப் பின்னான திருத்தந்தையாக இரண்டாம் போனிபாஸால் பரிந்துரைக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டவரே இந்த திருத்தந்தை Vigilius. இவர் திருத்தந்தை Agapetusன் காலத்தில் கான்ஸ்தாந்திநோபிளுக்கான திருத்தந்தையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அங்குதான் பேரரசருடன் நெருங்கிய பழக்கமேற்பட்டு பேரரசி Theodoraவினால் திருத்தந்தை பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். அதிலும் தோல்வி கண்டார். ஆனால், இராணுவத் தளபதி Belisariusன் குறுக்கு வழிகளின் துணைகொண்டு பதவிக்கு வந்த  திருத்தந்தை Vigilius, திருத்தந்தை சில்வேரியுஸ் இறந்த பின்னரே உரோமைய அருள்பணியாளர்களால் திருத்தந்தையாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

தன் மனம்போல் திருத்தந்தையை ஆட்டிவைக்கலாம் என்ற எண்ணத்தோடு பேரரசி Theodora திருத்தந்தை Vigiliusஐ பதவியிலமர்த்த, அவரோ, அப்பதவிக்குரிய மதிப்பை சிறிதும் விட்டுக்கொடுக்காமல் நீதியான ஆட்சியை நடத்தியது, பேரரசிக்கே அதிர்ச்சியாக இருந்தது. முந்தைய திருத்தந்தையர்கள் போலவே இவரும், கான்ஸ்தாந்திநோபிளின் தப்பான திருமறைக் கொள்கைகளை எதிர்த்தார். ஆன்மீக விடயங்களில் பேரரசரின் தலையீட்டை எதிர்த்தார். இதனால் கோபமுற்ற பேரரசர், இவர் Trastevereயிலுள்ள புனித செசிலியா கோவிலில் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, இவரை பலவந்தமாக கப்பலில் வைத்து அழைத்து வரச்செய்தார். கான்ஸ்தாந்திநோபிளுக்கு சென்ற திருத்தந்தை Vigilius> பேரரசரின் தப்பான திருமறை படிப்பினைகளை அங்கீகரிக்க மறுத்தார். இந்த நேரத்தில் உரோமையில் பெரும் பஞ்சமும் நிலவியது. உரோம் மக்களுக்கு உணவு அனுப்பும்படி திருத்தந்தை கெஞ்சியதையும் பொருட்படுத்தாமல், பேரரசர் ஜஸ்டினியன், திருத்தந்தை, தப்பான படிப்பினைகளை உள்ளடக்கிய ஏட்டில் கையெழுத்திட வேண்டும் என கட்டளையிட்டார்.

திருத்தந்தை Vigilius, எட்டு ஆண்டுகள் கான்ஸ்தாந்திநோபிளில் இப்போராட்டக் கவலையுடன் வாழவேண்டியதாயிற்று. பேரரசருடன் ஓரளவு உடன்பாடு கண்டு 555ம் ஆண்டு இத்தாலிக்குத் திரும்பினார் திருத்தந்தை. ஆனால், வழியில் Syracusல் திருத்தந்தை மரணமடைந்ததையொட்டி, அவர் உடல் உரோமுக்கு கொணரப்பட்டு, Pricilla கல்லறைத் தோட்டத்திற்கு மேல் இருக்கும் சில்வெஸ்டர் பசிலிக்கா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

நேயர்களே! வரும் வாரம் திருத்தந்தை Pelagius டன் நம் பயணம் தொடரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 December 2020, 13:30