இலாகூர் பேராயர் செபஸ்தியான் ஷா இலாகூர் பேராயர் செபஸ்தியான் ஷா  

கோவிட்-19 காலத்தில் நம்பிக்கையை தூதுரையுங்கள்

கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு, ஆன்மீகத் தயாரிப்பாக, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், ஆன்மீக பலத்தையும் நம்பிக்கையையும் ஊக்கப்படுத்தும் நாளாகக் கடைப்பிடியுங்கள் - இலாகூர் பேராயர் ஷா

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், கிறிஸ்மஸ் பெருவிழாக் கொண்டாட்டங்களை எளிமையான முறையில் நிறைவேற்றி, நம்பிக்கையைப் பறைசாற்றுங்கள் என்று, பாகிஸ்தானின் இலாகூர் பேராயர் செபஸ்தியான் ஷா அவர்கள், மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு, செய்தி வெளியிட்டுள்ள பேராயர் ஷா அவர்கள், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றுவதன் வழியாக, கோவிட்-19 கொள்ளைநோயின் இரண்டாம் அலையிலிருந்து, தங்களையும் மற்றவரையும், காப்பாற்றிக்கொள்ளுமாறு விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  

கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு, ஆன்மீகத் தயாரிப்பாக, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையையும், ஆன்மீக பலத்தையும் நம்பிக்கையையும் ஊக்கப்படுத்தும் நாளாகக் கடைப்பிடிக்குமாறும், டிசம்பர் 8ம் தேதி இறைவேண்டல் நாளாக அர்ப்பணித்த நாம், டிசம்பர் 15ம் தேதியன்று, தவநாளாக கடைப்பிடிக்குமாறும், பேராயர் ஷா அவர்கள் கூறியுள்ளார்.

டிசம்பர் 22ம் தேதி செவ்வாய்க்கிழமையை தர்மம் செய்யும் நாளாக அனுசரிக்குமாறும் கத்தோலிக்கரிடம் கூறியுள்ள பேராயர் ஷா அவர்கள், இந்நாளில், தேவையில் இருப்போருக்கு, குறிப்பாக, கொள்ளைநோயால் துன்புறுவோருக்கு உதவுமாறும் இம்மக்கள், வேலைகளை இழந்தும், பொருளாதார நெருக்கடியிலும் வாழ்வதால், கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாட இயலாமல் உள்ளனர் என்றும், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கொரோனா கொள்ளைநோய் காலத்தில், மனித சமுதாயத்தைக் காப்பாற்றுதல், கிறிஸ்தவ நம்பிக்கையைக் காப்பாற்றுதல் ஆகிய இரு முக்கிய இலக்குகளில் கவனம் செலுத்துமாறு பேராயர் ஷா அவர்கள் வலியுறுத்தியுள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2020, 14:58