நைஜீரியா நாட்டில் கடத்தப்பட்ட துணை ஆயர் Moses Chikwe நைஜீரியா நாட்டில் கடத்தப்பட்ட துணை ஆயர் Moses Chikwe 

நைஜீரியா நாட்டில் கடத்தப்பட்ட துணை ஆயர் Moses Chikwe

நைஜீரியா நாட்டின் Owerri உயர் மறைமாவட்டத்தில் துணை ஆயராகப் பணியாற்றிவரும் ஆயர் Moses Chikwe அவர்களையும், அவரது காரோட்டியையும் ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினர், கடத்திச் சென்றுள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நைஜீரியா நாட்டின் Owerri உயர் மறைமாவட்டத்தில் துணை ஆயராகப் பணியாற்றிவரும் ஆயர் Moses Chikwe அவர்களையும், அவரது காரோட்டியையும் ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினர், டிசம்பர் 27 இஞ்ஞாயிறன்று கடத்திச் சென்றுள்ளனர்.

இந்த துயரச் செய்தியை வெளியிட்ட Owerri உயர் மறைமாவட்டத்தின் பேராயர் Anthony Obinna அவர்கள், நைஜீரியா நாட்டில் நிலவி வரும் பாதுகாப்பற்ற நிலையையும், அங்கு மக்கள் அடைந்து வரும் துன்பங்களில் தற்போது திருஅவை இணைந்துள்ளது என்பதையும் இந்த கடத்தல் நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது என்று கூறினார்.

ஆயர் Chikwe அவர்கள் பயணித்த காரும், ஆயருக்குரிய அவரது உடைகளும், Owerri உயர் மறைமாவட்டத்தின் விண்ணேற்பு அன்னை மரியா பேராலயத்திற்கருகே இருந்தன என்று அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

Owerri உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக 2019ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 53 வயது நிறைந்த ஆயர் Chikwe அவர்களையும், அவரது காரோட்டியையும் கண்டுபிடிக்கும் பணியில், காவல்துறை பல பிரிவுகளாகப் பிரிந்து பணியாற்றிவருவதாக, அரசு தெரிவிக்கிறது.

டிசம்பர் 15ம் தேதி, நைஜீரியாவில் அருள்பணி Valentine Oluchukwu Ezeagu அவர்கள், தன் தந்தையின் அடக்கச் சடங்கை நிறைவேற்ற சென்ற வேளையில் கடத்தப்பட்டு, டிசம்பர் 16ம் தேதி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, டிசம்பர் 27ம் தேதி ஆயர் Chikwe அவர்கள் கடத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், நைஜீரியாவின் பல அரசியல்வாதிகளும், செல்வந்தர்களும் தங்களைச்சுற்றி காவல் படையை அதிகரித்துள்ளதும், தங்கள் வாகனங்களில் கறுப்புக் கண்ணாடிகளைப் பொருத்துவதும் நிகழ்ந்துவருகின்றன என்றும், இந்த வசதிகள் இல்லாத திருஅவை பணியாளர்களும், சாதாரண மக்களும் கடத்தல் காரர்களின் இலக்காக மாறுகின்றனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 December 2020, 14:56