திருத்தந்தை புனித அனஸ்தாசியுஸ் திருத்தந்தை புனித அனஸ்தாசியுஸ் 

திருத்தந்தையர் வரலாறு - எதிர்ப்புகளும் ஒன்றிப்பும்

திருஅவை படிப்பினைகளுக்கு எதிராக பல்முனைத் தாக்குதல்கள் இருந்தவேளையில், நம்பிக்கை காக்கப்பட பெருமளவில் உழைத்தவர் திருத்தந்தை தமாசுஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

நீதிக்காகப் போராடி, வெற்றி கண்ட திருத்தந்தை லிபேரியுசின்(Liberius) மரணத்திற்குப்பின் திருஅவையின் தலைமைப் பதவியை வகித்தவர் திருத்தந்தை முதலாம் தமாசுஸ் (Damasus, 366 –384). கி.பி. 304ம் ஆண்டு உரோம் நகரில் இஸ்பானிய பெற்றோருக்குப் பிறந்த இவர், 366ம் ஆண்டு, திருஅவையின் தலைமைப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இவரைப் பிடிக்காதவர்கள், அதாவது, முந்தைய திருத்தந்தை லிபேரியுசையும் எதிர்த்தவர்கள், Ursinus என்பவரை, போட்டி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்திருந்தனர். Ursinusஐ திருப்பீடத்தில் அமர்த்துவதற்காக இரத்தம் சிந்தும் மோதல்களும் இடம்பெற்றன. அதிலும் வெற்றி பெற முடியாததால், திருத்தந்தை தமாசுஸின் பெயரை களங்கப்படுத்த முனைந்து, அவர், கற்புக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என, அரசு நீதிமன்றத்திலேயே புகார் கொடுத்தனர். திருத்தந்தையை நன்கு அறிந்திருந்த பேரரசர் Flavius Gratianus அவர்களே, இதில் நேரடியாகத் தலையிட்டு, திருத்தந்தை களங்கமற்றவர் என அறிவித்தார். மேலும், 44 ஆயர்களைக் கொண்டு, கூடிய உரோமைய ஆயர் பேரவையும் திருத்தந்தையின் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என அறிவித்ததுடன், பொய்க் குற்றம் சாட்டியவர்களையும் திருஅவையிலிருந்து வெளியேற்றியது.

திருஅவை படிப்பினைகளுக்கு எதிராக பல்முனைத் தாக்குதல்கள் இருந்தவேளையில், நம்பிக்கை காக்கப்பட பெருமளவில் உழைத்தார் திருத்தந்தை தமாசுஸ். 381ம் ஆண்டு கான்ஸ்தாந்திநோபிலில் நடந்த ஆயர் மாநாட்டிற்கு தன் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தார் இத்திருத்தந்தை. விவிலியத்தின் இலத்தீன் மொழிபெயர்ப்பை கவனிக்கும்படி புனித ஜெரோமை (எரோணிமுசு) பணித்ததும் இத்திருத்தந்தைதான். இவர் காலத்தில்தான் மிலான் புனித அம்புரோஸும், துருக்கியின் Caesarea ஆயர்,  புனித பெரிய பேசிலும்  வாழ்ந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 384ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி உயிர் நீத்தார் திருத்தந்தை தமாசுஸ்.

திருத்தந்தை தமாசுஸின் மறைவுக்குப்பின் பதவிக்கு வந்தார் திருத்தந்தை Siricius(384 -399). இவர், தன் அறுபதாம் வயதில் உரோமை ஆயராக, அதாவது, திருத்தந்தையாக திருநிலைப்படுத்தப்பட்டார். 14 ஆண்டுகள் 344 நாட்கள் திருஅவையை வழிநடத்திச் சென்றார் இத்திருத்தந்தை. இவர் பதவியேற்ற சில காலத்திலேயே, இஸ்பெயின் நாட்டின் Tarragona ஆயர் Himerius, திருமுழுக்கு, பாவப்பரிகாரம், திருஅவை ஒழுங்கு, மற்றும், அருள்பணியார்களின் மணத்துறவு, ஆகியவை குறித்த 15 கேள்விகள் அடங்கிய ஏடு ஒன்றை திருத்தந்தைக்கு அனுப்பிவைக்க, திருத்தந்தை Siriciusம் அவைகளுக்கு தெளிவான விளக்கம் கொடுத்து திருஅவை ஏடாக அதனை வெளியிட்டார். அது பிரபலமானது மட்டுமல்ல, வரலாற்றிலும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. 386ம் ஆண்டு உரோமை ஆயர் பேரவையைக் கூட்டி அங்கு வந்திருந்த 80 ஆயர்களுடன் திருஅவையின் அறநெறி விதிகள் குறித்து விவாதித்து, அவைகள் திருஅவைக்குள் கடைப்பிடிக்கப்பட, சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டார். மிலான் ஆயராக இருந்த புனித அம்புரோஸ் இதில் திருத்தந்தைக்கு பக்கபலமாக நின்றார். இத்திருத்தந்தை இறந்தபோது இவரின் உடல், உரோம் நகரின் Pricilla கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டது.

திருத்தந்தை Siriciusஐத் தொடர்ந்து திருஅவையை வழிநடத்த வந்தார் திருத்தந்தை புனித முதலாம் அனஸ்தாசியுஸ் (Anastasius, 399 –401). இவர் புனிதர்கள் அகுஸ்தீன், ஜெரோம், பவுலினுஸ் ஆகியோரின் நண்பராக இருந்தார். திருத்தந்தை முதலாம் அனஸ்தாசியுஸ், ஏழ்மை நிலையை விரும்பி ஏற்று, ஒரு புனிதத்துவ வாழ்வை மேற்கொண்டிருந்தார் என புனித ஜெரோம் தன் எழுத்துக்களில் குறிப்பட்டுள்ளார். திருத்தந்தை முதலாம் அனஸ்தாசியுஸுக்குப்பின் 401ம் ஆண்டு, அனைத்து ஆயர்களாலும், மக்களாலும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் திருத்தந்தை முதலாம் இன்னோசென்ட் (Innocent, 401 –417). இவர், புனிதர்கள் Gervasius,  மற்றும், Protasiusக்கு அர்ப்பணிக்கப்பட்டு கட்டிய கோவில், இன்றும் புனித Vitaleயின் பெயரால் உரோம் நகரில் உள்ளது. இவர் காலத்தில்தான், அதாவது 408 முதல், 410ம் ஆண்டு வரை, Alaric தலைமையிலான அக்கால ஜெர்மானிய கோத் இனத்தவரின் உரோமைய ஆக்கிரமிப்பு இடம் பெற்றது. இவ்வினத்தவருடன் அமைதியை மேற்கொள்ளவும், உரோம் நகரை ஆக்ரமிப்பிலிருந்து காப்பாற்றவும் என்ற நோக்குடன், உரோமைப் பிரதிநிதிகள் அவையுடன் திருத்தந்தை முதலாம் இன்னோசென்ட்டும், இத்தாலியின் ரவென்னாவில் (Ravenna) இருந்த மேற்கத்திய பேரரசர் Honoriusஐ சந்திக்கச் சென்றார். பேரரசர் Honorius, கோத் இனத்தவருடன் அமைதி உடன்படிக்கை செய்துகொள்ள முன்வராததால், உரோம் நகரம் முழுவதும் கோத் இனத்தவரின் ஆட்சியின் கீழ் வந்து, திருத்தந்தை உரோமுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளே இந்நிலை தொடர்ந்தது.

திருத்தந்தை இன்னோசென்ட் உரோம் நகருக்குத் திரும்ப முடியாத நிலை இருந்தபோது அவரின் உதவிக்கு ஓடி வந்தவர் புனிதர் ஜான் கிறிஸோஸ்தம். இவர் ஏற்கனவே  கான்ஸ்தாந்திநோபிளின் முதுபெரும்தந்தையாக இருந்து, பேரரசி Aelia Eudoxiaவாலும்  அலெக்சாந்திரியாவின் முதுபெரும்தந்தை தியோபிலஸாலும் அநியாயமாக பதவி நீக்கம் செய்யப்பட்டவர். இப்பிரச்சனைக்கு தீர்வு காண, தெசலோனிக்காவில் ஆயர் பேரவையைக் கூட்ட, திருத்தந்தை  முதலாம் இன்னோசென்ட் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியடையவில்லை. இதில் தலையிட்டு தீர்வுகாண உதவுமாறு, தன் சகோதரர், கிழக்கு பகுதி பேரரசர் Arcadiusக்கு, மேற்குலக பேரரசர் Honorius எழுதிய மடலும் பலனளிக்கவில்லை. ஆனால், புனித ஜான் கிறிஸோஸ்தமும், முதுபெரும்தந்தை தியோபிலஸும் உயிரிழந்த பின், கிழக்கு ஐரோப்பிய ஆயர்கள் தங்கள் தவறை திருத்தந்தையிடம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். இறுதியில், அந்தியோக்கியாவின் பிரிவினை முயற்சிகள் ஒடுக்கப்பட்டு, திருத்தந்தையின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்தனர்.

பல்வேறு கரடுமுரடான பாதைகளைக் கடந்துவந்தாலும், அவ்வப்போது நம்பிக்கை தரும் வழிகளும் பிறந்து, திருஅவை தன் பயணத்தை இயேசுவின் துணையுடன் தொடர்ந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2020, 14:15