கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள ஆயர் கொர்னேலியுஸ் சிம் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள ஆயர் கொர்னேலியுஸ் சிம்  

சிறிய நாடுகளில்தான் இன்று விசுவாசம் உயிர்த்துடிப்புடன் உள்ளது

கிறிஸ்துவின் படிப்பினைகளுக்கு விசுவாசமாக இருந்து, எளிமையான ஒரு வாழ்வை ஏற்று நடத்துவதே, இயேசுவிற்கு சான்று பகரும் வாழ்வாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிறிய நாடுகளில்தான் இன்று கத்தோலிக்க விசுவாசம் அதிக உயிர்த்துடிப்புடன் உள்ளது என்பதை திருத்தந்தை உணர்ந்து அங்கீகரித்துள்ளதன் அடையாளமே, தான் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டது என்றார், அண்மையில் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள புருனே ஆயர் கொர்னேலியஸ் சிம்

தன்னைப் போன்று உலகின் கடைக்கோடியில், அதுவும், மிகச் சிறிய நாடுகளில் வாழ்வோரையும் கர்தினாலாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ளது, திருஅவையை உலகின் கடை எல்லை வரை கொண்டு செல்லும் அவரின் ஆவலை வெளிப்படுத்துவதாக உள்ளது, என மேலும் கூறினார், புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள ஆயர் சிம்.

புதிய கர்தினால்களாக அண்மையில் திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ள 13 பேருள் ஒருவரான, ஆயர் சிம் அவர்கள் உரைக்கையில், கிறிஸ்துவின் படிப்பினைகளுக்கு விசுவாசமாக இருந்து, எளிமையான ஒரு வாழ்வை ஏற்று நடத்துவதே இயேசுவிற்கு சான்று பகரும் வாழ்வாகும் என்றார்.

புருனே என்ற சிறிய நாட்டில் கத்தோலிக்க திருஅவை நடத்தும் பள்ளிகளில் 60 முதல் 70 விழுக்காட்டு மாணவர்கள் இஸ்லாமியர்கள் என்ற ஆயர் சிம் அவர்கள், இஸ்லாமிய அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, தலத்திருஅவை, கத்தோலிக்கர்கள் விவிலிய அறிவைப் பெற உதவுவது,  விசுவாசத்தை வளர்ப்பது, இளையோரிடையே இறையழைத்தலை ஊக்குவிப்பது, இயேசுவுக்குச் சாட்சியாக இருந்து சமுதாய நலனைக் காப்பது, மற்றும், புலம்பெயர்ந்தோரின் வாழ்வை மேம்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது  என்று கூறினார்.

வெளிநாடுகளில் பயின்று பொறியாளர் பட்டம்பெற்று, அதிக ஊதியத்தில் பணி செய்துவந்தபோது, அருள்பணியாளராகப் பணிபுரிய ஆர்வம்கொண்டு குருத்துவ இல்லத்தில் சேர்ந்து அருள்பணியாளரான சிம் அவர்கள், 2005ம் ஆண்டில் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

புருனே நாட்டின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக செயல்பட்டுவரும் ஆயர் சிம் அவர்களின் கீழ் 3 மறைமாவட்ட அருள்பணியாளர்கள், 3 பங்குத்தளங்களில் பணியாற்றி வருகின்றனர். ஏறக்குறைய 21,000 கத்தோலிக்கர் உள்ள புருனேயில், 3 பள்ளிக்கூடங்களை நடத்திவரும் தலத்திருஅவை, குடியேற்றதாரர்களிடையே தன் கவனத்தை அதிகம் அதிகமாக செலுத்தி வருகிறது.(UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2020, 15:57