மியான்மார் தடுப்பு மையங்களில் பணியாற்றுவதற்கு தயாராகும் தன்னார்வல இளைஞர்கள் மியான்மார் தடுப்பு மையங்களில் பணியாற்றுவதற்கு தயாராகும் தன்னார்வல இளைஞர்கள் 

மியான்மாரில் கோவிட்-19 ஒழிப்பதற்கு மதங்கள்

மியான்மாரில் கொள்ளைநோயின் எதிர்விளைவுகளால் துன்புறும் வறியோருக்கு உதவுவதற்கென்று உருவாக்கப்பட்டுள்ள தேசிய நிதிக்கு, கத்தோலிக்க மறைமாவட்டங்கள் ஒவ்வொன்றும், 3,800 டாலர் நிதியுதவியை வழங்கியுள்ளன.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டில் கொரோனா கொள்ளைநோய் பரவல் மீண்டும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளவேளை, அந்நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கு, அந்நாட்டின் கிறிஸ்தவ, புத்த, இஸ்லாம் மற்றும், இந்து ஆகிய மதங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.

அரசு மருத்துமனைகள் மற்றும், இந்நோய் தடுப்பு மையங்களில் பணியாற்றுவதற்கு, தன்னார்வல இளைஞர்களை ஊக்குவித்து வருவதோடு, இந்நோய் தடுப்பு மையங்களில் மக்கள் தங்கவைக்கப்படுவதற்கு, மதங்கள் சார்ந்த கட்டடங்களையும், அந்நாட்டின் பல்சமயத் தலைவர்கள் வழங்கியுள்ளனர் என்று, யூக்கா செய்தி கூறுகிறது.

வறியோர் மற்றும் நலிந்த குடும்பங்களுக்கு உணவு, உணவுப் பொருள்கள் மற்றும், மருத்துவமனைகளுக்கு கொள்ளைநோய் சிகிச்சைக் கருவிகள் ஆகியவற்றையும், சமய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

யாங்கூன் நகரிலுள்ள மசூதி ஒன்றில், ஒவ்வொரு நாளும் உணவுப்பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு, நோய் தடுப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், முஸ்லிம் உதவி நிறுவனங்களும், தேவையில் இருப்போருக்கு தொடர்ந்து உதவிகளை ஆற்றி வருகின்றன.

யாங்கூன் நகரிலுள்ள இந்து மத சமுதாயமும், அரிசி மற்றும், ஏனைய உணவுப் பொருள்களை வழங்கி வருகின்றது. புத்த மத தன்னார்வலர்கள், இறந்தோரை அடக்கம் செய்வது, இந்நோயால் தாக்கப்பட்டவர்களை நோய் தடுப்பு மையங்களுக்கு அனுப்பி உதவுவது போன்ற உதவிகளை ஆற்றி வருகின்றனர்.

மியான்மாரில் கொள்ளைநோயின் எதிர்விளைவுகளால் துன்புறும் வறியோருக்கு உதவுவதற்கென்று உருவாக்கப்பட்டுள்ள தேசிய நிதி அமைப்பிற்கு, அந்நாட்டின்  16 கத்தோலிக்க மறைமாவட்டங்கள் ஒவ்வொன்றும், 3,800 டாலர் நிதியுதவியை வழங்கியுள்ளன. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2020, 14:47