இலங்கை கத்தோலிக்கர் இலங்கை கத்தோலிக்கர் 

இலங்கை அரசின் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு

இலங்கை அரசின் சட்டங்களில் 20வது திருத்தத்தை அந்நாட்டு அரசு கொணர விழைவதற்கு, இலங்கையின் கத்தோலிக்க ஆயர்களும், புத்த மதத் தலைவர்களும் தங்கள் வன்மையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இலங்கை அரசின் சட்டங்களில் 20வது திருத்தத்தை அந்நாட்டு அரசு கொணர விழைவதற்கு, இலங்கையின் கத்தோலிக்க ஆயர்களும், புத்த மதத் தலைவர்களும் தங்கள் வன்மையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர் என்று UCA செய்தி கூறுகிறது.

இலங்கை அரசுத்தலைவருக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும்வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்த சட்டத் திருத்தம், மக்களை மையப்படுத்திய, சோசலிச குடியரசு என்ற கொள்கைக்கு பாதிப்புக்களை உருவாக்கும் என்று கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் Winston Fernando அவர்கள் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான பிரதிநிதிகள் இத்தகைய சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதால்மட்டும், அது, பெரும்பான்மையான மக்களின் கருத்தாக மாறஇயலாது என்று, ஆயர்கள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

மக்களாட்சி என்ற உன்னத குறிக்கோளுக்கு சாவுமணி அடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்தம், இலங்கையை முன்னேற்றம் நோக்கி அழைத்து செல்லாது என்று புத்த மதத் தலைவர்கள் சார்பில் வணக்கத்திற்குரிய Aththanage Sasana Rathana அவர்கள் கூறியுள்ளார்.

அதேவண்ணம், இலங்கையில் பணியாற்றும் மெத்தடிஸ்ட் சபை, தென்னிந்திய கிறிஸ்தவ சபை, அசெம்பிளி ஆப் காட் சபை என்று பல்வேறு கிறிஸ்தவ சபைகளும், இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர் என்று UCA செய்தி கூறுகிறது. (UCAN)   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2020, 15:00