யாங்கூனில் கொரோனா பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள் யாங்கூனில் கொரோனா பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள் 

கோவிட்-19 காலத்தில் மியான்மார் திருஅவையின் பணி

ஆகஸ்ட் மாதம் 16ம் தேதிக்குப் பின்னர் மியான்மாரில் கொரோனாவால் தாக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,000த்தை தாண்டி, 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டில் ஆகஸ்ட் மாதம் மத்தியிலிருந்து கோவிட்-19 கொள்ளைநோய் வேகமாகப் பரவிவருவதைத் தொடர்ந்து, தலத்திருஅவையின் சமுதாயப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் முடிய, மியான்மாரில், 400 பேரே இந்நோயால் பாதிக்கப்பட்டு, 10 பேர் உயிரிழந்திருந்த நிலைமாறி, ஆகஸ்ட் 16க்குப் பின்னர் இந்நோயால் தாக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,000த்தை தாண்டி, 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறும் கர்தினால் போ அவர்களின் அறிக்கை, தலத்திருஅவையின் பணிகள், பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் ஒன்றிணைத்து மேற்கொள்ளப்பட்டன என உரைக்கிறது.

இந்நோய் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில், பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினிகளை தெளித்துள்ளதாகவும், பசியால் துன்புறும் மக்களுக்கு உணவு உதவிகளை வழங்கி வருவதாகவும், மியான்மாரின் அருள்பணித்துவ பயிற்சி கல்லூரியை, இந்நோயால் பாதிக்கப்பட்டோர் நலம்பெறுவதற்குத் தங்க வைப்பதற்கென திறந்துவிட்டுள்ளதாகவும், எவ்விதப் பாகுபாடுமின்றி அனைவருக்கும் உதவிகள் சென்றடைவதை உறுதி செய்துள்ளதாகவும், திருஅவையின் பணிகள் பற்றி குறிப்பிடும் மியான்மார் கர்தினால், மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில், போர்நிறுத்தம் இடம்பெற வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்துள்ளார்.

மியான்மார் நாட்டில் கொரோனா கிருமிகள் வேகமாகப் பரவிவரும் நிலையில், நாட்டின் ஒவ்வொரு பங்குத்தளமும் குறைந்தபட்சம் 50 ஏழைக் குடும்பங்களுக்கு உணவு உதவிகளை வழங்குவது, நோய்த்தடுப்பு உபகரணங்களை வழங்குவது, நோய் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கும் நோக்கத்தில், அவர்கள் தங்குவதற்கு குருத்துவ பயிற்சி இல்லங்களையும், தேவையெனில் ஆலயங்களையும் திறந்துவிடுவது, இந்நோயை எதிர்த்து போரிடுவதில் அரசோடு இணைந்து செயலாற்றுவது, என பல்வேறு திட்டங்களைத் தீட்டி, தலத்திருஅவை செயல்பட்டு வருவதாக அறிவித்தார், கர்தினால் போ.

இந்நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும்வண்ணம், தலத்திருஅவையின் பணிகளுக்கென கணனி வலைத்தொடர்புகளை உருவாக்கியுள்ளதாகவும், ஆலோசனைகளை வழங்க இம்மையங்கள் உதவும் எனவும் கூறினார் கர்தினால் போ. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 October 2020, 13:57