இயேசு பேதுருவிடம் கூறியது; "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்." மத்தேயு 18:22 இயேசு பேதுருவிடம் கூறியது; "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்." மத்தேயு 18:22 

பொதுக்காலம் 24ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

உலகில் பிறக்கும் ஒவ்வொருவரையும், மனிதராகவும், புனிதராகவும் மாற்றும் அற்புதப் பண்பான மன்னிப்பைப்பற்றி சிந்திக்க, இன்றைய வழிபாட்டு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 24ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த Laura Walters Hinson என்ற பெண்மணி, ஆப்ரிக்காவின் ருவாண்டா நாட்டை மையப்படுத்தி உருவாக்கிய ஓர் ஆவணப்படம், நம் ஞாயிறு சிந்தனைகளைத் துவக்க உதவியாக உள்ளது. 2008ம் ஆண்டு வெளியான அந்தப் படத்தின் தலைப்பு: As We Forgive - நாங்கள் மன்னிப்பதுபோல்.

இந்த ஆவணப்படத்தின் ஆரம்பத்தில், திரையில் திரையில் ஒலிக்கும் குரல் இவ்வாறு கூறுகிறது.: "உங்கள் குடும்பத்தாரைக் கொலை செய்து, சிறையில் இருக்கும் ஒரு கொலைகாரனை, நீங்கள் வாழும் பகுதியில் விடுதலை செய்யப்போகிறார்கள் என்றால், உங்களுக்கு எப்படி இருக்கும்? நாளை, இந்த அரசு, ஒருவரை அல்ல, 40,000 கொலையாளிகளை விடுதலை செய்கிறார்கள். இவர்கள் நம் மத்தியில் வாழப்போகிறார்கள்." மனதை அச்சுறுத்தும் இக்கூற்றுடன் இந்த ஆவணப்படம் ஆரம்பமாகிறது.

1990களில், ருவாண்டா நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரம் ஒன்றில், ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களில், 10 இலட்சம் பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இவர்களில், 3 லட்சத்திற்கும் அதிகமானோர், குழந்தைகள். அந்நாட்டில் உள்ள மற்றோர் இனத்தைச் சேர்ந்த 70,000க்கும் அதிகமானோர், அந்தக் கொடூரக் கொலைகளைச் செய்ததாக ஒத்துக்கொண்டனர், அவர்கள் கைது செய்யப்பட்டனர். 2005ம் ஆண்டு இவர்களை ருவாண்டா அரசு விடுவித்தது. தாங்கள் கொலை செய்தது போக எஞ்சியிருந்த அதே மக்கள் மத்தியில் இவர்கள் மீண்டும் வாழவந்தனர். கொலையாளிகளுக்கும், கொலை செய்யப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்புரவை, ‘நாங்கள் மன்னிப்பது போல்’ என்ற இந்த ஆவணப்படம் காட்டுகிறது.

மனதைத் தொடும் காட்சிகள், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. கொலையாளிகளை மன்னிக்கவே முடியாது என்று, இந்தப் படத்தின் ஆரம்பத்தில் கூறும் மக்கள், முடிவில், அவர்களை மன்னிக்கும் காட்சிகள் மனதைத் தொடுகின்றன. நம்பிக்கையைத் தருகின்றன. அதேபோல், அந்தக் கொலையாளிகளும், உண்மையிலேயே மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவது, மனதில் ஆழமாய் பதியும் காட்சிகள். இவர்கள் யாரும் நடிகர்கள் அல்ல, மன்னிப்பை உண்மையாக வாழ்ந்தவர்கள்.

நாங்கள் மன்னிப்பதுபோல் என்ற ஆவணப்படத்தின் தலைப்பு, நாம் ஒவ்வொருநாளும், சொல்லும் "விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே" என்ற செபத்திலிருந்து எடுக்கப்பட்ட சொற்கள். "எங்களுக்குத் எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பதுபோல், எங்கள் குற்றங்களை மன்னியும்" என்ற சொற்களை அடிக்கடி பயன்படுத்தியுள்ளோம். இதே எண்ணம், இன்றைய முதல் வாசகத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும். (சீராக் 28:2)

உலகில் பிறக்கும் ஒவ்வொருவரையும், மனிதராகவும், புனிதராகவும் மாற்றும் அற்புதப் பண்பான மன்னிப்பைப்பற்றி சிந்திக்க, இன்றைய வழிபாட்டு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. மன்னிப்பு பெறுவதும், வழங்குவதும், வாழ்வு என்ற நாணயத்தின் இருபக்கங்கள். அவற்றை தனித்தனியே பிரித்துப்பார்க்க முடியாது. நாம் எப்போதெல்லாம் பிறருக்கு மன்னிப்பை வழங்குகிறோமோ, அப்போதெல்லாம் மன்னிப்பைப் பெறுகிறோம். மன்னிப்புடன் வரும் ஆழ்ந்த அமைதியை, நிறைவைப் பெறுகிறோம். இதைத்தான், அசிசி நகர் புனித பிரான்சிஸ், அமைதிக்கென உருவாக்கிய அந்த அழகிய செபத்தில், "மன்னிப்பதாலேயே, நாம் மன்னிப்பு பெறுகிறோம்" என்று சொல்லியிருக்கிறார்.

மன்னிப்பை, தன் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த இயேசு, இன்றைய நற்செய்தியில், மன்னிப்பைப்பற்றி கூறியுள்ள இரு கருத்துக்களை, சிறிது ஆழமாகச் சிந்திப்போம்.

முதல் கருத்து, ஒருவர் தவறு செய்யும்போது, எத்தனை முறை மன்னிப்பது? என்ற கேள்வியின் பதிலாகக் கூறப்பட்டுள்ளது. நம் எல்லாருக்கும் எழும் இந்தக் கேள்வி, பேதுருவுக்கும் எழுந்தது. அந்தக் கேள்வியுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது:

சென்ற ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தியின் துவக்கமும், இந்த வார நற்செய்தியின் துவக்கமும், ஏறத்தாழ, ஒரேவிதமான சொற்களுடன் துவங்குகிறது. "உங்கள் சகோதரர், சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்" என்று சென்றவாரம் இயேசு ஆரம்பித்தார். "என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால்" என்ற சொற்களுடன், இந்தவார நற்செய்தியை, பேதுரு துவக்குகிறார்.

தவறுகளை பிறர் செய்தாலும், ஒப்புரவு முயற்சிகளை நாம் துவக்கவேண்டும் என்பதை, இயேசு, சென்றவாரம், தெளிவாகக் கூறினார். கடினமான அச்சவாலை ஏற்றுக்கொண்ட பேதுருவுக்கு, அடுத்து ஒரு கேள்வி எழுகிறது. என் சகோதரர், அல்லது சகோதரி எனக்கெதிராக பாவம் செய்தால், அவர்களை, எத்தனை முறை நான் மன்னிக்கவேண்டும் என்ற கேள்வியைத் தொடுக்கிறார்.

ஏழு முறை மன்னிக்கலாமா? இது பேதுருவின் கேள்வி. ஏழு முறை அல்ல, எழுபது தடவை ஏழுமுறை... இது இயேசுவின் பதில். 7,70 என்ற எண்களை வைத்து, கூட்டல், பெருக்கல், கணக்குகளை ஆரம்பிக்கவேண்டாம். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்தது கணக்குப் பாடம் அல்ல. கணக்கைக் கடந்த கருத்துக்களை உணர்த்தும் பாடம்.

யூதர்களுக்கு ஏழு என்ற எண், நிறைவைக் குறிக்கும் ஓர் எண். எனவே, பேதுரு, “தவறு செய்யும் என் சகோதரனை அல்லது சகோதரியை ஏழு முறை மன்னிக்கலாமா?” என்ற இந்தக் கேள்வியைக் கேட்டபோது, ஏதோ பெரிய ஒரு சாதனையைப்பற்றி, ஒரு முழுமையான, நிறைவான முயற்சியைப்பற்றி தான் பேசிவிட்டதாக, அவர் எண்ணியிருக்கலாம். இயேசு, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி, எப்போதும் மன்னிக்கவேண்டும் என்ற எண்ணத்தைச் சொன்னார்.

எத்தனை முறை மன்னிப்பது என்ற கேள்விக்கு, அளவற்ற முறை மன்னிப்பு வழங்கவேண்டும் என்பது, இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்லித்தரும் முதல் பாடம். அடுத்து, எத்தனை பெரிய தவறை மன்னிப்பது? என்ற கேள்விக்குப் பதில் சொல்வதுபோல், அவர், ஓர் உவமையைக் கூறுகிறார். மத்தேயு நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ள இந்த உவமை, எல்லைகள் ஏதுமின்றி, மன்னிக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இந்த உவமையில் மூன்று பகுதிகளை நாம் காணலாம். அரசருக்கும், பணியாளருக்கும் இடையே நிகழும் அற்புதமான மன்னிப்பு நிகழ்ச்சி முதல் பகுதியாகவும், மன்னிப்பு பெற்ற பணியாளர், தன் உடன் பணியாளரை மன்னிக்க மறுத்தது, இரண்டாவது பகுதியாகவும், மன்னிப்பு தர மறுத்த பணியாளரை, அரசர், மீண்டும் தண்டித்தது, மூன்றாவது பகுதியாகவும் அமைந்துள்ளன.

எத்தனை பெரிய தவறாக இருப்பினும் மன்னிக்கவேண்டும் என்ற கருத்தைப் புரிந்துகொள்ள, இந்த உவமையில் இயேசு பயன்படுத்தியுள்ள கடன் தொகைகள் உதவியாக உள்ளன. அரசரிடம் பணியாளர் பட்ட கடனை, ஒரு மலையாக உருவகித்தால், மன்னிக்கப்பட்டப் பணியாளரிடம் உடன்பணியாளர் பட்டக் கடன் ஒரு சிறு தூசி என்றுதான் சொல்லவேண்டும். அரசரிடம் பணியாளர் பட்ட கடன், 'பத்தாயிரம் தாலந்து' என்றும் உடன் பணியாளர் பட்டக் கடன் 'நூறு தெனாரியம்' என்றும் இயேசு குறிப்பிடுகிறார். ஒருநாள் கூலி என்ற அளவுகோல் கொண்டு பார்த்தால், 'பத்தாயிரம் தாலந்து' என்ற எண்ணிக்கை, 60,000,000 நாட்கள், அதாவது, ஏறத்தாழ 1,60,000 ஆண்டுகளுக்கு உரிய கூலித்தொகை. இதற்கு மாறாக, உடன் ஊழியர் பட்டக் கடன் 100 நாள் கூலிக்கு இணையானது.

கடன் தொகையைச் செலுத்த வழியில்லாத பணியாளர், ஒரு வர்த்தகப் பொருளாக மாற்றப்படுகிறார். அவர் மட்டுமல்ல, அவரது மனைவி, மக்கள், அனைவருமே வர்த்தகப் பொருளாக மாற்றப்பட்டு, அவரது உடைமைகளுடன் சேர்த்து விற்கப்பட வேண்டும் என்று அரசர் ஆணையிடுகிறார். அரசர் விடுத்த ஆணை, இன்றைய உலகின் அவலங்களை நம் நினைவுக்குக் கொணர்கிறது. நாம் வாழும் காலத்தில், ஒரு வீட்டுத்தலைவர் பட்டக் கடனை அடைக்கமுடியாத நிலையில், குடும்பம் முழுவதும் விற்கப்பட்டு, கொத்தடிமைகளாக வாழவேண்டிய துயரங்கள், நம் உள்ளத்தை கீறுகின்றன.

கடன் தொல்லையால், வர்த்தகப் பொருளாக விற்கப்படுவது, தனி மனிதர்களும், அவர்களது குடும்பங்களும் மட்டுமல்ல. நாடுகளும், கடன்தொல்லையில் சிக்கித்திணறுவதைக் காணலாம். 'மூன்றாம் உலகம்' என்ற முத்திரை குத்தப்பட்ட நாடுகள், தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்ய, வளர்ச்சியடைந்த, செல்வம் மிகுந்த நாடுகளிடமிருந்து கடன் பெறுகின்றன. இவ்வாறு, கடன் கேட்டுக் கையேந்தும் நாடுகள், பெரும்பாலும், ஐரோப்பியக் காலனிய ஆதிக்கத்தில் சிக்கித்தவித்த ஆசிய, ஆப்ரிக்க நாடுகளே!

காலனிய ஆதிக்கத்தில் இந்நாடுகள் தவித்த வேளையில், இந்நாடுகளின் செல்வங்களை, 'ஏற்றுமதி' என்ற பெயரில், ஐரோப்பியர்கள், தங்கள் நாடுகளுக்குக் கடத்தி, இந்நாடுகளை வறுமைப்படுத்தியது வரலாற்று உண்மை. இன்றைய உலகில், மூன்றாம் உலக நாட்டு மக்களின் உழைப்பை, மிகக்குறைந்த ஊதியத்திற்கு உறுஞ்சி வாழ்வதும், செல்வம் மிகுந்த நாடுகளே!

கோவிட் 19 கொள்ளைநோய்க்குப் பின் நாம் வாழப்போகும் உலகில், வறிய நாடுகள் பட்ட கடன்களை, செல்வம் மிகுந்த நாடுகள் மன்னிக்கவேண்டும் என்று, ஐ.நா. நிறுவனத்தின் தலைமைச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இன்னும் சில தலைவர்களும் அழைப்பு விடுத்து வருவதை, இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறோம். இத்தலைவர்கள் விடுத்துள்ள விண்ணப்பத்தை, செல்வம் மிகுந்த நாடுகள் ஏற்று, செயல்படுத்தவேண்டும் என்று, இறைவனிடம் வேண்டுவோம்.

'பத்தாயிரம் தாலந்து', 'நூறு தெனாரியம்' என்ற இவ்விரு கடன் தொகைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 'பத்தாயிரம் தாலந்து', கடலளவு நீர் என்றால், 'நூறு தெனாரியம்' கையளவு நீர்! கடலளவு கடனில் மூழ்கி, மூச்சுவிடப் போராடிக்கொண்டிருந்த பணியாளரை, அரசர் கரம் நீட்டி, வெளியில் கொணர்ந்து, அப்பணியாளரும், அவரது குடும்பத்தாரும் வாழும்வண்ணம், மன்னிப்பு என்ற உயிர் மூச்சை வழங்கினார். அந்தப் பணியாளரோ, தனக்கு அரசர் வழங்கிய உயிர் மூச்சை மறந்துவிட்டு, தன் உடன் பணியாளரின் மூச்சை நிறுத்தும் முயற்சியாக, அவருடைய கழுத்தை நெரித்தார் என்று வாசிக்கும்போது, அதிர்ச்சி அடைகிறோம்.

மன்னிப்பு பெறுவதும், தருவதும் நாம், உள்ளிழுத்து, வெளிவிடும் மூச்சுக்காற்றைப் போல, ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த செயல்பாடுகள். ஒன்று குறைந்தாலும், நோயுறுவோம். பத்தாயிரம் தாலந்து கடனிலிருந்து மன்னிப்பு பெற்ற பணியாளர், தான் பெற்ற மன்னிப்பை, அடுத்தவருக்குத் தர மறுத்தபோது, அவர் பெற்ற மன்னிப்பும், நோயுற்று, விலை மதிப்பற்று போனது. இதையே, இவ்வுவமையின் இறுதியில் இயேசு இவ்விதம் கூறுகிறார்:

மத்தேயு நற்செய்தி 18: 35

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.

இறைவன் நம்மை மன்னிக்கமாட்டார் என்று சொல்வதைவிட, நாம் மற்றவர்களை மன்னிக்க முடியாதபோது, அந்த உணர்வு, நம்மை நாமே மன்னிக்க முடியாதவாறு சிறைப்படுத்தும் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

நாம் வழங்கும் மன்னிப்பினால் மற்றவர்கள் பெறும் நன்மையைவிட, நாம் பெறும் நன்மையே அதிகம் என்பதை, ஓர் அழகிய ஆங்கிலக் கூற்று இவ்வாறு கூறுகிறது: "Forgive others not because they deserve forgiveness; but because you deserve peace" அதாவது, "மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்கு, அவர்களுக்கு மன்னிப்பு தேவை என்பதால் அல்ல; உனக்கு அமைதி தேவை என்பதால், மன்னிப்பு வழங்கு."

மன்னிக்க மறுப்பதைக் குறித்து சொல்லப்பட்டுள்ள மற்றொரு கூற்றும், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றது: “Refusing to forgive someone is like drinking poison, and waiting for the other person to die” அதாவது, "ஒருவரை மன்னிக்க மறுப்பது, நஞ்சை நாம் குடித்துவிட்டு, அடுத்தவர் இறப்பார் என்று எதிர்பார்ப்பதற்குச் சமம்".

கோவிட் 19 கொள்ளைநோய் உட்பட, மனித குடும்பத்தை துன்புறுத்திவரும் பல நோய்களுக்குத் தேவையான ஓர் அற்புத மருந்து, மன்னிப்பு. நம் ஒவ்வொருக்குள்ளும் ஊற்றெடுக்கும் இந்த அற்புத மருந்தை மறந்துவிட்டு, அல்லது நமக்குள்ளேயே மறைத்து, புதைத்துவிட்டு, வெறுப்பு என்ற விஷத்தை நாம் வெளிக் கொணர்கிறோம். மன்னிப்பு என்ற மருந்தால், இவ்வுலகின் பல நோய்கள் குணமாகவேண்டும் என்று மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2020, 12:46