முன்னாள் குடியரசுத்தலைவர், பிரணாப் முகர்ஜி அவர்களின் இறுதி ஊர்வலம் முன்னாள் குடியரசுத்தலைவர், பிரணாப் முகர்ஜி அவர்களின் இறுதி ஊர்வலம் 

முகர்ஜியின் மறைவு, இந்திய அரசியலில் மிகப்பெரும் வெற்றிடம்

இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கும், அவர்களின் பணிகளுக்கும், பிரணாப் முகர்ஜி அவர்கள் அளித்த ஆதரவு மற்றும், ஊக்கத்திற்கு, திருஅவை எப்போதும் நன்றியுடன் இருக்கும் - கர்தினால் கிரேசியஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் மறைவு, நாட்டின் அரசியல் வாழ்வில் மிகப்பெரும் வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளது என்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.

பிரணாப் முகர்ஜி அவர்களின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள, மும்பை பேராயரான கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இந்தியாவில், கிறிஸ்தவர்களுக்கும், அவர்களின் பணிகளுக்கும் முகர்ஜி அவர்கள் அளித்த ஆதரவு மற்றும், ஊக்கத்திற்கு, திருஅவை எப்போதும் நன்றியுடன் இருக்கும் என்றும், அவரின் இழப்பு குறித்து, இந்திய கத்தோலிக்கத் திருஅவை மிகவும் வருந்துகின்றது என்றும் கூறியுள்ளார்.

முகர்ஜி அவர்கள், சிறந்த அரசியல்வாதியாகப் பணியாற்றியவர் என்றும், 2018ம் ஆண்டில், இந்திய ஆயர் பேரவை ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, விவிவிலியத்திலிருந்து, அவர் மேற்கோள்காட்டிப் பேசியது, அவரின் விவிலிய அறிவை வெளிப்படுத்தியது என்றும், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரணாப் முகர்ஜி அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள, சீரோ-மலபார் திருஅவைத் தலைவரான, கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள், தேசிய ஒன்றிப்பிற்கும், மத நல்லிணக்கத்திற்கும், முகர்ஜி அவர்கள், தன்னை அர்ப்பணித்திருந்தார் என்று பாராட்டியுள்ளார்.

பிரணாப் முகர்ஜி – வாழ்க்கை குறிப்புகள்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக, நீண்ட காலம் பணியாற்றிய பிரணாப் முகர்ஜி அவர்கள், 2006ம் ஆண்டு முதல், 2009ம் ஆண்டு வரை, வெளியுறவுத்துறை அமைச்சராகவும், 2009ம் ஆண்டு முதல், 2012ம் ஆண்டு வரை, நிதி அமைச்சராகவும்,  2012ம் ஆண்டு முதல், 2017ம் ஆண்டு வரை, இந்தியாவின் குடியரசுத்தலைவராகவும் பணியாற்றியவர். இவர் 2008ம் ஆண்டில், பத்ம விபூஷன் விருதையும், 2019ம் ஆண்டில், பாரத இரத்னா விருதையும் பெற்றிருப்பவர்.

ஆகஸ்ட் 31, இத்திங்களன்று, தனது 84வது வயதில் மரணமடைந்த முன்னாள் குடியரசுத்தலைவர், பிரணாப் முகர்ஜி அவர்களின் உடல், செப்டம்பர் 01, இச்செவ்வாயன்று, முழு அரசு மரியாதையுடன், டில்லி லோதி மின் மயானத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தகனம் செய்யப்பட்டது.

பிரணாப் முகர்ஜி அவர்களது மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரணாப் முகர்ஜி அவர்களது, மூளையில் ஏற்பட்ட இரத்தக்கட்டை அகற்றும் அறுவை சிகிச்சைக்காக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு, கொரோனா தொற்றுக்கிருமி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, அவருக்கு நுரையீரல் பாதிப்பும், சிறுநீரகக் கோளாறும் ஏற்பட்டன. கடந்த சில நாட்களாக, கோமா நிலையில் இருந்த அவர், ஆகஸ்ட் 31, இத்திங்கள் மாலையில் உயிரிழந்தார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2020, 13:37