திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர் ஜேக்கப் முரிக்கென் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர் ஜேக்கப் முரிக்கென்  

பாகிஸ்தான் ஆள்கடத்தல்களுக்கு எதிராக இந்திய ஆயர்

பாகிஸ்தானில் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ ஆயிரம் கிறிஸ்தவ மற்றும், இந்துமதப் பெண்கள் கடத்தப்பட்டு, முஸ்லிம்களைத் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர் – இந்திய ஆயர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில் ஒவ்வோர் ஆண்டும், ஏறத்தாழ ஆயிரம் கிறிஸ்தவ மற்றும் இந்துமதப் பெண்கள் கடத்தப்பட்டு, திருமணம் செய்துகொள்வதற்காக, அவர்களை இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்யும் நடவடிக்கைக்கு எதிராக, இணையவழி போராட்டம் ஒன்றை, இந்திய ஆயர் ஒருவர் தொடங்கியுள்ளார்.

14 வயது நிரம்பிய Maira Shahbaz என்ற கத்தோலிக்கச் சிறுமி, கடத்தப்பட்டதைத் தொடர்ந்து,  கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இணையவழி போராட்டத்தைத் தொடங்கிய, கேரளாவின் Palai மறைமாவட்டத்தின் துணை ஆயர் ஜேக்கப் முரிக்கென் (Jacob Muricken) அவர்கள், கடத்தப்படும் பெண்களுக்காக நீதிகேட்டு போராடி வருகிறார் என்று, யூக்கா செய்தி கூறுகிறது.

சிறுமி Maira Shahbaz, கடந்த வாரத்தில், தன்னை கடத்தியவர்களிடமிருந்து தப்பித்து, அவரது குடும்பத்துடன் இணைந்துள்ளது, தனக்கு மகிழ்ச்சி தருகின்றது என்றுரைத்த ஆயர் முரிக்கென் அவர்கள், மற்ற பெண்களும் விடுதலைசெய்யப்பட முயற்சித்து வருவதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் கிறிஸ்தவப் பெண்கள் கடத்தப்பட்டு, அவர்கள் முஸ்லிம்களைத் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்படுவதைத் தடுக்க, விழிப்புணர்வை உருவாக்கும் நடவடிக்கையை, தொடர்ந்து நடத்தவிருப்பதாக, ஆயர் முரிக்கென் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், ஆயர் முரிக்கென் அவர்களின் இந்த இணையவழி போராட்டத்தை ஒருங்கிணைக்கும், Palai மறைமாவட்டத்தின் இளைஞர் பணிக்குழுவின் இயக்குனர் அருள்பணி தாமஸ் தாயில் அவர்கள் கூறுகையில், செப்டம்பர் முதல் தேதியிலிருந்து, அன்னை மரியாவின் பிறப்பு விழாவான செப்டம்பர் 8ம் தேதி வரை, எட்டு நாள்கள் சிறப்பு நவநாள் செபங்களை ஆரம்பித்திருப்பதாகக் கூறினார்.

பெண் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு, குடும்பங்கள் மற்றும், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கி வருவதாகவும் அருள்பணி தாயில் அவர்கள் கூறினார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2020, 12:41