ஹாங்காக் கர்தினால் ஜான் டாங் ஹாங்காக் கர்தினால் ஜான் டாங் 

கர்தினால் டாங்: வாழ்வு கலாச்சாரத்தை ஊக்குவியுங்கள்

கோவிட்-19 கொள்ளைநோய், வாழ்வின் மதிப்பு மற்றும், அதன் அர்த்தம் பற்றியும், அதை மேலும் பாதுகாக்கவேண்டியதன் அவசியம் பற்றியும் சிந்திப்பதற்கு அழைக்கின்றது - ஹாங்காக் கர்தினால் டாங்

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

1995ம் ஆண்டில், திருத்தந்தை புனித 2ம் யோவான் பால் அவர்களின், Evangelium Vitae அதாவது வாழ்வின் நற்செய்தி என்ற திருமடல் வெளியிடப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை, கத்தோலிக்கத் திருஅவை, இவ்வாண்டு சிறப்பிக்கும் வேளையில், கிறிஸ்தவர்கள், வாழ்வுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்குமாறு, ஹாங்காக் கர்தினால் ஜான் டாங் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

மனித வாழ்வுக்கு ஆதரவான நாளுக்குச் செய்தி வெளியிட்டுள்ள கர்தினால் டாங் அவர்கள், உலக அளவில், கோவிட்-19 கொள்ளைநோய், கடந்த ஏழு மாதங்களில் 8,10,000த்திற்கும் அதிகமான மக்களைப் பலிவாங்கியுள்ளது, 2 கோடியே 35 இலட்சத்திற்கு அதிகமான மக்களைத் தொற்றியுள்ளது, எனவே, இந்நோய், வாழ்வின் மதிப்பு மற்றும், அதன் அர்த்தம் பற்றியும், அதை மேலும் பாதுகாக்கவேண்டியதன் அவசியம் பற்றியும் சிந்திப்பதற்கு அழைக்கின்றது என்று கூறியுள்ளார். 

2020ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி, அன்னை மரியா எலிசபெத்தம்மாளைச் சந்தித்த விழாவன்று, நான்காவது முறையாக சிறப்பிக்கப்படவிருந்த (இவ்வாண்டு அந்த நாள் பெந்தக்கோஸ்து ஞாயிறு) மனித வாழ்வுக்கு ஆதரவான நாள், அன்னை மரியாவின் பிறப்பு விழாவான, செப்டம்பர் 8ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்பட்டுள்ளதையும், கர்தினால் டாங் அவர்கள், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்-19, மரணக் கலாச்சாரம்

கோவிட்-19 கொள்ளைநோய் பரவத்தொடங்கிய காலக்கட்டத்தில், சில நாடுகள், அது சாதாரண காய்ச்சல் என்று நினைத்து, அந்த நோய்க்குச் சிகிச்சை அளிப்பதில் அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்கவில்லை, இந்தப் போக்கால், நம் வலுவற்ற சகோதரர், சகோதரிகள் புறக்கணிக்கப்பட்டனர் என்றும், கர்தினால் டாங் அவர்கள் கூறியுள்ளார்.

கொலை செய்யாதே என்ற கடவுளின் கட்டளைக்குப் பணிந்து நடப்பதற்கு முக்கியத்துவம் அளித்து, வாழ்வின் புதியதொரு கலாச்சாரத்தைப் பேணி வளர்க்குமாறு ஊக்குவித்துள்ள ஹாங்காக் கர்தினால் டாங் அவர்கள், வாழ்வை, கடவுளிடமிருந்து பெற்ற கொடையாக, அதை மதித்து நடக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2020, 13:28