கர்தினால் சார்லஸ் மாங் போ கர்தினால் சார்லஸ் மாங் போ 

கோவிட்-19 நெருக்கடியில், பசி, நிரந்தர கொள்ளைநோய்

வறிய நாடுகளில் குறைந்தது இருபதாயிரம் சிறார், ஏழ்மையால் இறக்கின்றனர். கோவிட்-19 தொடர்பான இறப்புக்களைவிட, வறுமையால் இடம்பெறும் இறப்புகள் அதிகம் – மியான்மார் கர்தினால் போ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இப்போதைய கோவிட்-19 காலத்தில், உணவின்றி பட்டினியாய் இருத்தல், உயிரைக்கொல்லும் புதிய கிருமியாகவும், பசி, நிரந்தர கொள்ளைநோயாகவும் உள்ளது என்று, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கவலை தெரிவித்தார்.

மியான்மார் நாட்டில் அமைதி, மனித உரிமைகள் மற்றும், பொருளாதார நீதிக்காக, தொடர்ந்து குரல் கொடுத்துவரும், அந்நாட்டின் யாங்கூன் பேராயராகிய கர்தினால் போ அவர்கள், வறிய நாடுகளில் மக்கள் எதிர்கொள்ளும் பட்டினிச் சூழலை, உயிரைக்கொல்லுகின்ற புதிய நுண்கிருமி என்று கூறியுள்ளார்.

இன்றைய உலகில், 82 கோடியே 10 இலட்சம் மக்கள், நலமான வாழ்வு வாழ்வதற்குத் தேவையான உணவின்றி உள்ளனர் என்றும், ஒவ்வொரு நாள் இரவும், ஒன்பது பேருக்கு ஒருவர், பசியோடு உறங்கச் செல்கிறார் என்றும் கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், கோவிட்-19 விதிமுறைகள், ஏழைகள், தங்களின் வாழ்வாதார வாய்ப்புக்களை முற்றிலும் இழக்கச் செய்துள்ளன என்று கூறியுள்ளார்.

உலகில் கொரோனா கொள்ளைநோய் தொடர்ந்து பரவிவந்தால், 12 கோடியே 20 இலட்சத்திற்கு அதிகமான மக்கள், பசிக்கொடுமையால் துன்புறுவார்கள் என்றும், ஒவ்வொரு நாளும், குறைந்தது, 12,000 பேர் பசியினால் இறப்பார்கள் என்றும் ஆக்ஸ்ஃபாம் அமைப்பு கணித்துள்ளதைக் குறிப்பிட்ட மியான்மார் கர்தினால், மனித வயிறுக்கு சமுதாய இடைவெளி என்பது, ஒருபோதும் கிடையாது என்று கூறினார்.

கோவிட்-19 தனித்திருத்தல் விதிமுறையின் எதிர்விளைவால், ஏழைகள் அனுபவிக்கும் பசி குறித்து இவ்வாரத்தில் பேசியுள்ள கர்தினால் போ அவர்கள், மனித உடலில், வயிறே மிகவும் ஆபத்தான உறுப்பு என்றும், பட்டினிக்கொடுமை, மக்களை, அடிமைகளாகவும், தங்களின் மாண்பை இழந்தவர்களாகவும் ஆக்குகின்றது என்றும் எச்சரித்துள்ளார்.

வறிய நாடுகளில் குறைந்தது இருபதாயிரம் சிறார், ஏழ்மையால் இறக்கின்றனர் என்றும், கோவிட்-19 தொடர்பான இறப்புக்களைவிட, வறுமையால் இடம்பெறும் இறப்புகள் அதிகம் என்றும் கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், உலகப்போரில் பலியாகிய எண்ணிக்கைபோன்று, பசியினால், படுகொலைகள், சப்தமின்றி இடம்பெறுகின்றன என்றும் கூறினார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2020, 13:20