அன்னை மரியாவின் விண்ணேற்பு அன்னை மரியாவின் விண்ணேற்பு  

நேர்காணல்: அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழா

அன்னை மரியா, உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பதை, திருத்தந்தை 12ம் பயஸ் (பத்திநாதர்) அவர்கள், 1950ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி Munificentissimus Deus எனப்படும் திருத்தூது கொள்கை விளக்கத்தின் வழியாக, விசுவாசப் பேருண்மையாக அறிவித்தார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

அன்னை மரியா, இறைவனின் தாய், அன்னை மரியா முப்பொழுதும் கன்னி, அன்னை மரியா அமல உற்பவி, அன்னை மரியா, உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் ஆகியவை, திருஅவையால் அங்கீகரிக்கப்பட்ட அன்னை மரியா பற்றிய நான்கு விசுவாசப் பேருண்மைகளாகும். அன்னை மரியா, உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பதை, திருத்தந்தை 12ம் பயஸ் (பத்திநாதர்) அவர்கள், 1950ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி Munificentissimus Deus எனப்படும் திருத்தூது கொள்கை விளக்கத்தின் வழியாக,  விசுவாசப் பேருண்மையாக அறிவித்தார். மரியாவின் இந்த விண்ணேற்பை ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி பெருவிழாவாக திருஅவை சிறப்பிக்கிறது. அருள்பணி எஸ்.ரீகன் ஜெயக்குமார் அவர்கள், அன்னை மரியாவின் விண்ணேற்பு குறித்த தன் எண்ணங்களை இன்று பகிர்ந்துகொள்கிறார். தஞ்சாவூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர், அருள்பணி எஸ்.ரீகன் ஜெயக்குமார் அவர்கள், பள்ளங்கோவில், புனித ஜான் டி பிரிட்டோ உயர்நிலைப்பள்ளியின் நிர்வாகி ஆவார்.

நேர்காணல்: அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழா

அருட்பணி.ரீகன் ஜெயக்குமார், தஞ்சாவூர் மறைமாவட்டம்

வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு என்னுடைய அன்பு வணக்கம். இந்த வானொலி நிலையத்தின் வழியாக உங்களை சந்திப்பதிலே மிக்க மகிழ்ச்சியடைகிறேன்!. அன்னை மரியாளுடைய விண்ணேற்பு பெருவிழா நல்வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்து மகிழ்கிறேன்.

நமது திருச்சபையிலே நான்கு முக்கிய விசுவாச கோட்பாடுகள் உண்டு. விசுவாச கோட்பாடுகள் என்று சொன்னால், திருச்சபை நம்முடைய விசுவாசத்தை கட்டிக்காக்க, தெளிவுப்படுத்த வெளியிடுகிற மறை உண்மைகள். அவை என்ன?

ஜனவரி 1- ஆம் தேதி நாம் கொண்டாடுகின்ற அன்னை மரியாள் இறைவனின் தாய் என்ற விழா, ஆகஸ்ட் 15 தேதி நாம் கொண்டாடுகின்ற அன்னை மரியாளுடைய விண்ணேற்பு பெருவிழா, டிசம்பர் 8 –ஆம் தேதி நாம் கொண்டாடுகின்ற அமலோற்பவ அன்னை பெருவிழா மற்றும் மரியாள் முக்காலத்திற்கும் எப்பொழுதும் கன்னியாய் இருக்கிறார் என்ற விழா.

மற்ற மூன்று விசுவாச கோட்பாடுகளுக்கும் இந்த விண்ணேற்பு விசுவாச கோட்பாடுக்கும் சற்று வித்தியாசம் உண்டு. கி.பி 431 –ல் எபேசு திருச்சங்கம் கூடி, மக்களின் நம்பிக்கையை வலுவூட்டும் வகையிலே இயேசு 100% சதவீத கடவுள், 100% மனிதன் என்றும் அன்னைமரியாள் இறைவனின் தாய் என்றும் மக்களுடைய விசுவாசத்தை கட்டிக்காப்பதற்கு இந்த முதல் விசுவாச கோட்பாட்டை வெளியிட்ட்து.

அன்னை மரியாள் லூர்து நகரிலே பெர்னதெத்திற்கு காட்சி கொடுத்தபொழுது, அவருடைய திருவாயினின்று வெளிப்படுத்திய உண்மை, நாமே அமல உற்பவம். திருத்தந்தை 9-ம் பத்திநாதர் 1854-ம் ஆண்டு மக்களுடைய நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான இந்த விசுவாச கோட்பாட்டை அறிவித்தார்.

கி.பி 649–ல் திருத்தந்தை முதலாம் மார்ட்டின் அவர்களால் வலியுறுத்தப்பட்டு, வெளியிடப்பட்டதுதான், கன்னி மரியாள் எப்பொழுதும், முக்காலத்திற்கு கன்னியாக இருக்கிறார் என்ற விசுவாச கோட்பாடு.

அன்னை மரியாளுடைய விண்ணேற்பு பெருவிழா கோட்பாடு மட்டும் சற்று வித்தியாசமான வரலாற்று பின்னனி கொண்டது. அதை இறுதியிலே உங்களுக்கு தெளிவுப்படுத்துகிறேன்.

விவிலியத்திலே அன்னை மரியாளைத் தவிர வேறு யாரும் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்களா? என்ற கேள்வி நம்மிடையே எழலாம்.

தொடக்க நூல் 5-வது அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். ஏனோக் என்ற ஒரு நல்ல மனிதர் இருந்தார். அவர் கடவுளோடு நடந்து கொண்டிருந்தார், பின்பு அவரைக் காணவில்லை. கடவுள் அவரை எடுத்துக்கொண்டார் என்று வாசிக்கிறோம்.

2 அரசர்கள் புத்தகம் 2-வது அதிகாரத்தில் படிக்கிறோம்; எலியாவும், எலிசாவும் உரையாடிக் கொண்டிருந்தபொழுது, நெருப்புத் தேரும், குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களை பிரிக்க, எலியா சுழல் காற்றில் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறார். காரணம் என்ன? விவிலியத்தை சற்று கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால், நாம் கண்டுபிடிக்கலாம் அவர்கள் நீதியுள்ள மனிதர்களாக, கடவுளுக்கு உகர்ந்தவர்களாக இருந்தார்கள். எனவே கடவுள் அவர்களுக்குத் தந்த பரிசு அது.

அப்படியானால் அன்னை மரியாவின் விண்ணேற்பு எப்படி ஒரு விசுவாச கோட்பாடாக மாறியது? அதைத்தான் முன்பு சொன்னேன். மற்ற விசுவாச கோட்பாடுகள் திருஅவையின் முயற்சியால், திருத்தந்தையர்களின் முயற்சியால் மக்களின் நம்பிக்கை வாழ்வை கட்டியெழுப்ப உருவாக்கப்பட்ட்து. ஆனால் அன்னை மரியாளின் விண்ணேற்பு விசுவாசக் கோட்பாடு, மக்களின் நம்பிக்கையிலே இரண்டற கலந்ததாக இருக்கிறது. இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த நேரம், கம்யூனிசம் தலைத்தூக்கி நிற்கிறது, மக்களுடைய வாழ்வாதாரங்கள் மனித மாண்புகள் எல்லாம் சீரழிக்கப்பட்டு, குலைக்கப்பட்டு இருக்கின்றன. மக்கள் தங்கள் மாண்பிற்காக, வாழ்வாதாரத்திற்காக தேடிக்கொண்டிருக்கிறார்கள், ஓடிக்கொண்டிருக்கிறார்கள், இரண்டு விதமான நிலை அங்கு காணப்படுகிறது: ஒரு பக்கம் விரக்தி, மக்களுடைய வாழ்விலே என்ன செய்வது என்று பரியாத நிலை, இன்னொரு பக்கம் மக்களுடைய கடவுள் நம்பிக்கை குறைந்து போய்க்கொண்டிருக்கிற நிலை.

திருத்தந்தை 12-ம் பத்திநாதர் இந்த நிலையை பார்க்கிறார். ஏதோ ஒன்று இந்த மக்களுக்கு தேவைப்படுகிறது. யாரோ ஒருவர் தேவைப்படுகிறார், இவர்களை மீட்பதற்காக உதவி செய்வதற்காக. எனவேதான் அவர் அன்னை மரியாளை நம்பிக்கையின் ஒளியாக மக்களுக்கு தருகிறார். விரக்தியிலும், பயத்திலும், விசுவாசமின்மையிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு, அன்னை மரியாளை ஒரு எடுத்துக்காட்டாக திருத்தந்தை 12ம் பத்திநாதர் தருகிறார். அன்னை மரியாள் ஒரு நம்பிக்கையின் ஒளி, நம்முடைய உடல் இங்கு சிதைந்துக் கொண்டுருக்கிறது, ஆனால் ஆன்மா என்ற ஒன்று உண்டு அது இறைவனுக்கு சொந்தமானது, இறைவனோடு வாழக்கூடியது. அன்னை மரியாள் தனது உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்து செல்லப்படுகிற இந்த நிலை நம்முடைய வாழ்வினுடைய உடல், உயிருக்கு, ஆன்மா வாழ்விற்கும் புத்துயிரைத் தருகிறது என்ற எண்ணத்தை உருவாகுவதற்காக, அன்னை மரியாளை ஒரு நம்பிக்கையின் ஒளியாக, மக்களுக்கு தருகிறார். அன்னை மரியாளும் அந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கை தருகிற ஒரு சக்தியாக மாறுகிறார்.

எனவேதான் மக்கள் திருத்தந்தையினுடைய குரலைக் கேட்டு அன்னையிடத்திலே பக்தியோடு ஜெபிக்கிறார்கள். அன்னையிடத்திலே பரிந்துரை தேடி ஒடி வருகிறார்கள். அன்னை மரியாள் சிறந்த நம்பிக்கை தருகின்ற ஒளியாக அவர்களுக்கு காட்சியளிக்கிறார். ஆகவேதான் திருத்தந்தை அன்னை மரியாளுடைய இந்த விசுவாச கோட்பாட்டை ஒரு நம்பிக்கையின் கோட்பாடாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று விரும்புகிறார். திருத்தந்தை 12-ம் பத்திநாதர் மட்டும் இதை விரும்பவில்லை, ஏறக்குறைய பல ஆண்டுகளாக அன்னை மரியாளுடைய துயில் என்ற ஒரு விழாவை மக்கள் கொண்டாடிவந்திருக்கிறார்கள். இந்த விழாவினுடைய பின்னணியில்தான் திருத்தந்தை 12-ம் பத்திநாதரும்கூட அன்னை மரியாளை ஒரு நம்பிக்கையின் ஒளியாக உடலையும், ஆன்மாவையும் காக்கவல்ல அந்த கடவுளை நம்பினால் போதும், அதற்கு அன்னை மரியாளை ஒரு நம்பிக்கையின் ஒளியாக நமக்கு தந்தார். எனவே தான் மக்களுக்கும் அதை விரும்ப, திருத்தந்தையோடு இணைய, திருத்தந்தையும் அதை ஒரு விசுவாச கோட்பாடாக அறிவிக்கிறார். அன்னை மரியாள் உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு இருக்கிறார் என்று. இந்த விழாவைக் கொண்டாடுகின்ற இந்த வேளையிலே அன்னை மரியாள் இரண்டு செய்திகளை நமக்கு தருகிறார்.

ஒன்று: ஏனோக்கிற்கும், எலியாவிற்கும் கடவுள் விண்ணக பரிசை தந்திருக்கிறார், காரணம் அவர்கள் உகந்த மனிதர்களாக அவருக்கு இருந்தார்கள் என்று. எனக்கும் உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு செல்லக்கூடிய ஒரு மாபெரும் பரிசை கடவுள் கொடுக்கிறார். காரணம், அன்னை மரியாளாகிய நான் கடவுளுக்கு உகந்த ஒரு மகளாக வாழ்ந்திருக்கிறேன் என்பதனால். அப்படியானல் நீங்களும் கடவுளுக்கு உகந்த ஒரு மனிதர்களாக, திட்டத்திற்கு ஏற்றவர்களாக வாழ்ந்தால் உங்களுக்கும் விண்ணகம் உண்டு. உடலை பற்றி கவலைப்படாதீர்கள், ஆன்மாவைப் பற்றி கவலைப்பட்டு வாழுங்கள். கடவுள் உங்களுக்கு விண்ணகப் பரிசை தருவார் என்ற நம்பிக்கையை முதல் செய்தியாக தருகிறார்.

இரண்டாவதாக: இது கொரோனா நேரம், உலகமே முடக்கப்பட்டிருக்கிறது. தனிமை என்கிற வியாதி, தனிமை என்கிற விரக்தி மனிதனை கொன்றுபோட்டுக் கொண்டிருக்கிறது. மனிதன் மற்றவர்களை எதிரியாகப் பார்க்ககூடிய ஒரு சூழ்நிலை. இந்த நிலையிலே அன்னை மரியாள் நம்பிக்கையின் ஒளியாக நமக்கு வருகிறார். விரக்தி தேவையில்லை. பயம் தேவையில்லை இந்த உடலைத் தாக்கக்கூடிய இந்த நோய்க்கு ஏராளமான உயிர்கள் பலியாகலாம், ஆனால் ஆன்மாவை யாராலும் கொல்ல முடியாது. ஆன்மா கடவுளுக்குச் சொந்தம். எனவே நம்பிக்கையின் ஒளியாகவும், அன்னை மரியாள் இன்று நமக்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிறார். எனவே அன்பிற்குரிய வானொலி நேயர்களே உங்களை இந்த விழாவிலே சிறப்பாக வாழ்த்துகிறேன். உங்களுக்காக செபிக்கிறேன்.

      ஒரே ஒரு செய்தி மட்டும் தான் நம்முடைய உள்ளத்திலே பதிய வேண்டும். அன்னை மரியாள் நித்தமும் நம்பிக்கையின் ஒளியாக, நம்மை காக்கிற ஒரு கருவியாக இந்த உடலையும் ஆன்மாவையும் ஆண்டவரிடத்திலே அர்ச்சிக்கப்பட்ட ஒன்றாக சேர்க்கும் ஒரு மாபெரும் தூய பெண்மணியாக இருக்கிறார் என்ற செய்தியை தருகிறார். இந்த விழாவிலே மீண்டும் ஒருமுறை உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன். அன்னை மரியாளுடைய விண்ணேற்பு பெருவிழா நமக்கு மகிழ்ச்சியை தரட்டும், வத்திக்கான் வானொலி நிலையத்திற்கும் என்னுடைய மனமார்ந்த    நன்றி.

அருட்பணி.ரீகன் ஜெயக்குமார்

தஞ்சாவூர் மறைமாவட்டம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2020, 14:13