படைப்பின் காலம் செப்.டம்பர் 1 -அக்டோபர் 04 படைப்பின் காலம் செப்.டம்பர் 1 -அக்டோபர் 04 

செப்டம்பர் 1ம் தேதி முதல் 'படைப்பின் காலம் 2020'

தற்போதையை உலகம், சமுதாயம், பொருளாதாரம், மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய அனைத்து துறைகளிலும் சமநிலையைப் பெறும் கட்டாயத்தில் உள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 1ம் தேதி துவங்கி, அக்டோபர் 4ம் தேதி முடிய சிறப்பிக்கப்படும் 'படைப்பின் காலம் 2020' என்ற சிறப்பு காலத்திற்கென, ஐரோப்பிய சபைகள் கூட்டமைப்பு, மற்றும் ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒன்றியம் என்ற இரு அமைப்புக்களும் இணைந்து, அறிக்கையொன்றை, ஆகஸ்ட் 25, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளன.

'இந்த பூமிக்கோளத்தின் யூபிலி' என்ற மையக்கருத்துடன், இவ்வாண்டுக்குரிய படைப்பின் காலத்தை சிறப்பிக்குமாறு, ஐரோப்பிய சபைகள் கூட்டமைப்பின் தலைவர், Christian Krieger அவர்களும், ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒன்றியத்தின் தலைவர், கர்தினால் Angelo Bagnasco அவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.

விவிலியத்தில் யூபிலி என்பது, நீதியையும், சமநிலையையும் வலியுறுத்தும் ஒரு காலம் என்று கூறும் இவ்வறிக்கை, தற்போதையை உலகம், சமுதாயம், பொருளாதாரம், மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய அனைத்து துறைகளிலும் சமநிலையைப் பெறும் கட்டாயத்தில் உள்ளது என்று வலியுறுத்தியுள்ளது.

நாம் அனைவரும், ஒருவர், ஒருவரோடும், இந்தப் பூமிக்கோளத்தோடும் எவ்வாறு பிரிக்கமுடியாத உறவில் பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதை, நம்மை அச்சுறுத்தி வரும் கொள்ளைநோய் நமக்குச் சொல்லித்தருகிறது என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1ம் தேதி கடைபிடிக்கப்படும் படைப்பின் நாளையும், அக்டோபர் 4ம் தேதி முடிய கடைபிடிக்கப்படும் படைப்பின் காலத்தையும் கிறிஸ்தவ ஒன்றிப்புடன் கூடிய இறைவேண்டல் மற்றும் பிறரன்பு முயற்சிகளில் செலவழிக்குமாறு ஐரோப்பிய சபைகள் கூட்டமைப்பும், ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒன்றியமும் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2020, 15:29