லெபனான் நாட்டில் பிறரன்பு உதவிகள் லெபனான் நாட்டில் பிறரன்பு உதவிகள்  

ACN பிறரன்பு அமைப்பு லெபனானில் நலத் திட்டங்கள்

லெபனான் நாட்டின் Bekaa பள்ளத்தாக்குப் பகுதியில், கொள்ளைநோய் தாக்கத்தை நம்பகத்தன்மையுடன் பரிசோதனை செய்யும் பரிசோதனைக்கூடம் தேவைப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தற்போதைய கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், லெபனான் நாட்டின் வடபகுதியில், தேவையில் இருக்கும் மக்களுக்கு ஆதரவாக, ACN எனப்படும், பன்னாட்டு கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, பல்வேறு பிறரன்பு திட்டங்கள் வழியாக உதவி வருகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் நாட்டின் Bekaa பள்ளத்தாக்குப் பகுதியில், மிகவும் வறியநிலையில் உள்ள குடும்பங்களுக்கும், புலம்பெயர்ந்தவர்களுக்கும் நம்பகத்தன்மைகொண்ட கோவிட்-19 கொள்ளைநோய் பரிசோதனை வசதிகள் மற்றும், ஏனைய உதவிகளை வழங்குவதற்காக, மூன்று அவசரகாலத் திட்டங்களை அறிவித்து உதவி வருவதாக, ACN அமைப்பு அறிவித்துள்ளது.

Bekaa பகுதியில் Zalehவிலுள்ள Tel Chiha மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, கோவிட்-19 பரிசோதனை மையத்திற்கு உதவி வருவதாக அறிவித்த ACN அமைப்பு, அந்தப் பகுதியில் அரசால் நடத்தப்படும், இந்த ஒரேயொரு மருத்துவமனையில்,  கோவிட்-19 தொற்றுக்கிருமி பரிசோதனையை நடத்திய மருத்துவர், நம்பகத்தன்மைகொண்ட சரியான சான்றிதழ் இன்றி பணியாற்றியதையும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலைமை குறித்து விவரித்த, Zahle மற்றும், Forzol  கிரேக்க-மெல்கித்தே வழிபாட்டுமுறை பேராயர் Issam John Darwish அவர்கள், கடந்த இரு வாரங்களில், நாட்டின் எல்லாப் பகுதிகளிலும், குறிப்பாக, Zaleh மற்றும், Bekaa பள்ளத்தாக்குப் பகுதியில், கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க முறையில் அதிகரித்துள்ளது எனவும், மக்களின் நலவாழ்வும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

கொள்ளைநோய் தாக்கத்தை நம்பகத்தன்மையுடன் பரிசோதனை செய்வதற்கு மக்களுக்கு பரிசோதனைக்கூடம் தேவைப்படுகின்றது என்றும், மக்கள், ஒவ்வொரு நாளும் உணவைப் பெறுவதற்கு துன்புறுகின்றனர் என்றும், பேராயர் Darwish அவர்கள் கூறினார்.

மேலும், பேராயர் Darwish அவர்கள், கேட்டுக்கொண்டதன்பேரில், Zaleh மற்றும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், மிகவும் துன்புறும் ஏறத்தாழ இரண்டாயிரம் குடும்பங்களுக்கு, ACN அமைப்பு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறது.

இன்னும், லெபனான் நாட்டின் மாரனைட் வழிபாட்டுமுறை திருஅவை கேட்டுக்கொண்டதன்பேரில், Bekaa பள்ளத்தாக்கில், நூறு குடும்பங்களுக்கும், ACN பிறரன்பு அமைப்பு உதவி வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2020, 13:48