இந்தியாவில் புலம்பெயர்ந்தவர்கள் இந்தியாவில் புலம்பெயர்ந்தவர்கள் 

ஆகஸ்ட் 25, கந்தமால் நாள்

தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பு – கந்தமாலில், 12 ஆண்டுகளுக்குமுன் இடம்பெற்ற வன்முறையில் தப்பிப் பிழைத்தவர்கள், நீதி மற்றும், இழப்பீட்டு நிதிக்காக இன்றும் காத்திருக்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறையில் பலியானவர்கள் மற்றும், அதில் உயிர்பிழைத்தவர்கள் நினைவாக, ஆகஸ்ட் 25, இச்செவ்வாயன்று கந்தமால் நாளை இந்திய திருஅவை சிறப்பித்தது.

இந்நாளை முன்னிட்டு, இரு வார நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ள, NSF எனப்படும், தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பு, 12 ஆண்டுகளுக்குமுன் இடம்பெற்ற வன்முறையில் தப்பிப் பிழைத்தவர்கள், நீதி மற்றும், இழப்பீட்டு நிதிக்காக இன்றும் காத்திருக்கின்றனர் என்று கூறுகின்றது.

எழுபது பொது மக்கள் இயக்கங்கள் மற்றும், மனித உரிமை நிறுவனங்களைக் கொண்ட NSF அமைப்பில், அருள்பணியாளர்கள், துறவியர், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் போன்ற, பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.  

கோவிட்-19 கொள்ளைநோய் காரணமாக, இந்நாள்களில், இணையவழி தொடர்புகளை உருவாக்கி, நீதி, அமைதி மற்றும், நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் அறிக்கைகளை வெளியிடுமாறும், வீடுகளில் மெழுகுதிரிகளை ஏற்றுமாறும், அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

2008ம் ஆண்டில், இந்து தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்திய வன்முறையில், பழங்குடி இன மக்கள் மற்றும், தலித் கிறிஸ்தவர்களின் 395 ஆலயங்கள் மற்றும், வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டன. குறைந்தது நூறு பேர் கொல்லப்பட்டனர். நாற்பது பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டனர், பள்ளிகள், சமுதாயநல மையங்கள், நலவாழ்வு மையங்கள் ஆகியவை அழிக்கப்பட்டன மற்றும் சூறையாடப்பட்டன.

75 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் புலம்பெயர்ந்தனர். பலர், இந்து மதத்தை தழுவ கட்டாயப்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக, இதுவரை எந்த குற்றவாளியும் சிறைப்படுத்தப்படவில்லை. அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட 3,300 புகார்களில், மிகக் குறைந்த எண்ணிக்கையே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பல குடும்பங்கள், தங்களின் பூர்வீக இடங்களுக்குத் திரும்ப முடியாமல் உள்ளனர். 

2008ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி, இந்துமதத் தலைவர் Swami ‎Lakshmanananda Saraswati அவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கு, மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் பொறுப்பேற்றதையும் விடுத்து, இந்துமதத் தீவிரவாதிகள், ஆகஸ்ட் 25ம் தேதி, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2020, 14:48