நாட்டிற்காகச் செபிக்கும் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர் நாட்டிற்காகச் செபிக்கும் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர்  

பிலிப்பீன்ஸ் நாட்டு பிரச்சனைகளைத் தீர்க்க 21 நாள் செபம்

கார்மேல் அன்னை மரியா திருநாள் முதல், ஆகஸ்ட் 5, சிறப்பிக்கப்படும் புனித மேரி மேஜர் பெருங்கோவில் திருநாள் முடிய உள்ள 21 நாள்கள், மக்கள் செபத்தில் இணையுமாறு பேராயர் Socrates Villegas அழைப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்னை மரியாவின் துணையிருந்தால் நாம் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை என்ற சொற்களுடன், பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் முன்னாள் தலைவரான பேராயர் Socrates Villegas அவர்கள், நாட்டு மக்களிடம், மூன்று வாரங்கள் இணைந்து செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது உலகமனைத்தையும் வதைத்துவரும் கொள்ளைநோயாலும், பிலிப்பீன்ஸ் நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளாலும் துன்புறும் மக்கள், இத்துன்பங்களிலிருந்து விடுதலை பெறும் நோக்கத்துடன், ஜூலை 16, இவ்வியாழன் சிறப்பிக்கப்பட்ட கார்மேல் அன்னை மரியா திருநாள் முதல், ஆகஸ்ட் 5, சிறப்பிக்கப்படும் புனித மேரி மேஜர் பெருங்கோவில் திருநாள் முடிய உள்ள 21 நாள்கள், செபத்தில் இணையுமாறு பேராயர் Villegas அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

அடுத்து வரும் 21 நாள்கள், பல்வேறு துன்பங்களிலிருந்து நாடு நலம் பெறவேண்டும் என்றும், அன்னை மரியாவின் பாதுகாப்பு அனைவருக்கும் கிடைக்கவேண்டுமென்றும் ஒவ்வொரு நாளும் திருப்பலியின் இறுதியில் சிறப்பு மன்றாட்டு அன்னையிடம் எழுப்பப்படும் என்று பேராயர் Villegas அவர்கள் கூறியுள்ளார்.

அத்துடன், இந்நாள்களில், குடும்பங்கள் இணைந்துவந்து, செபமாலை செபிக்கவும், செபமாலையின் இறுதியில், கொள்ளை நோயிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும் செபத்தை குடும்பமாகக் கூறவும் பேராயர் Villegas அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 5ம் தேதி, புனித மேரி மேஜர் பெருங்கோவில் திருநாளன்று, Manaoag அன்னை மரியா பசிலிக்காவில் நிறைவேற்றப்படும் சிறப்புத் திருப்பலி, ஊடகங்கள் வழியே நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 July 2020, 14:07