பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் பேராயர் ஜோசப் அர்ஷத் பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் பேராயர் ஜோசப் அர்ஷத் 

சிறுபான்மையினர்க்கு எதிரான வன்முறைக்கு கண்டனம்

பாகிஸ்தான் சமுதாயம், சகிப்பற்றத் தன்மையில் வளர்ந்துவருகின்றது. அந்நாட்டில் சிறுபான்மை குழுமங்கள் வாழ்வது மிகக் கடினமாக மாறிவருகின்றது - பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில் கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள கடினவாழ்வு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், அந்நாட்டில் சிறுபான்மையினர்க்கு எதிராக வன்முறைகளும், பாகுபாடுகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்று, அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை கவலை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பேஷ்வார் காலனியில், முஸ்லிம்கள் மட்டுமே வாழ விரும்பும் பகுதியில், Nadeem Joseph என்ற கிறிஸ்தவர், வீடு வாங்கி, அவரது குடும்பம் அங்கு குடியேறியதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி ஜோசப் அவர்கள்,  முஸ்லிம்களால் கடுமையாய்த் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஐந்துமுறை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டும், அவை பலனின்றி, கடந்த ஜூன் 29ம் தேதி உயிரிழந்தார்.

பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் பேராயர் ஜோசப் அர்ஷத் அவர்களும், அந்த அவையின் தேசிய இயக்குனர் இம்மானுவேல் யூசாப் அவர்களும் இணைந்து, இந்த வன்முறையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

குற்றவாளிகள் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும், இந்த வன்முறை செயலுக்கு, சட்டத்தின்படி கட்டாயம் தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும், அவ்வறிக்கை கூறுகிறது.

பாகிஸ்தான் சமுதாயம், சகிப்பற்றதன்மையில் வளர்ந்து வருகின்றது என்றும், அந்நாட்டில் சிறுபான்மை குழுமங்கள் வாழ்வது மிகக் கடினமாக மாறி வருகின்றது என்றும் கூறும் அவ்வறிக்கை, அண்மையில், இஸ்லாமபாத்தில் ஓர் இந்துக்கோவில் கட்டப்படுவதை, சில முஸ்லிம் தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 July 2020, 12:51