கர்தினால் Jean-Claude Hollerich கர்தினால் Jean-Claude Hollerich  

EU ஆயர்கள்: நைஜீரியாவில் நசுக்கப்படும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவு

நைஜீரியாவில் 2015ம் ஆண்டிலிருந்து இதுவரை ஏறத்தாழ ஆறாயிரம் கிறிஸ்தவர்களும், 2020ம் ஆண்டில் மட்டும், 600க்கும் அதிகமான கிறிஸ்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு, EU எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து அதிக ஆதரவு கிடைப்பதற்கு தான் பரிந்துரைக்கவிருப்பதாக, ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் (COMECE) தலைவர் உறுதி அளித்துள்ளார்.

நைஜீரிய ஆயர்களுக்கு மடல் எழுதியுள்ள, ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் Jean-Claude Hollerich அவர்கள், அந்நாட்டில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை மற்றும், அடக்குமுறைகளை ஒழிக்கும் நடவடிக்கையில், நைஜீரிய அரசு அதிகாரிகளுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியும், ஒத்துழைப்பும் கிடைப்பதற்கு, தான் விண்ணப்பிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 

பயங்கரவாதிகள், புரட்சிக்குழுக்கள், உப இராணுவத்தினர் ஆகியோரால், தொடர்ந்து தாக்கப்பட்டுவரும் சூழலில் வாழ்கின்ற நைஜீரிய கிறிஸ்தவ சமுதாயத்துடன் தனது ஒருமைப்பாட்டையும் தெரிவித்துள்ளார், கர்தினால் Hollerich.

மேலும், நைஜீரியாவில் வன்முறைகள் நிறுத்தப்படவும், குற்றவாளிகள் நீதிவிசாரணைக்கு உட்படுத்தப்படவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும், உரையாடல் மற்றும் அமைதி ஊக்குவிக்கப்படவும், EU உறுப்பு நாடுகள், தங்களின் முயற்சிகளை அதிகரிக்குமாறு, கர்தினால் Hollerich அவர்கள், ஜூலை 02, இவ்வியாழனன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நைஜீரியாவில் 2015ம் ஆண்டிலிருந்து இதுவரை ஏறத்தாழ ஆறாயிரம் கிறிஸ்தவர்களும்,  2020ம் ஆண்டில் மட்டும், 600க்கும் அதிகமான கிறிஸ்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 

இதற்கு பெரும்பாலும், Boko Haram இஸ்லாம் தீவிரவாத அமைப்பும், விலங்குகளை மேய்க்கும், Fulani நாடோடி இன புரட்சிக்குழுவினருமே காரணம் என்று, ஐரோப்பிய அவை, தன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, நைஜீரியாவில் வன்முறை முடிவுக்கு வரவும், குற்றவாளிகள் தண்டனை பெறவும், உலகளாவிய சமுதாயம் உதவுமாறு, கடந்த மே மாதத்தில் அந்நாட்டு ஆயர்களும் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 July 2020, 14:24