கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மெக்சிகோ நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மெக்சிகோ நகரில்  

கோவிட்-19 காலத் துன்பங்களில், மக்களை அரவணைப்பதாக....

மெக்சிகோ ஆயர்கள் : நோய்களைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுவரும் இக்காலத்தில், குடும்ப வன்முறைகள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்
இந்த கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், மெக்சிகோ மக்களின் துன்பங்களில் அவர்களை அரவணைப்பதாகவும், நம்பிக்கையோடு செயல்பட அவர்களை ஊக்குவிப்பதாகவும், அந்நாட்டு ஆயர்கள் அனைத்து விசுவாசிகளுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
நாம் அனைவரும் ஒன்றிணைதல், மற்றும், ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுதல் வழியாகவே, இன்றைய உலக, மற்றும், தேசிய சவால்களை எதிர்கொள்ள முடியும் என தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், மனிதர்கள் அனைவரும் மாண்புடனும் ஒன்றிப்பிலும் வாழவேண்டும் என்பதே, இறைவனின் விருப்பம் எனவும் அதில் கூறியுள்ளனர்.
அரசின் பல்வேறு நடவடிக்கைகளையும் தாண்டி, கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மெக்சிகோ நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறும் ஆயர்கள், நோயுற்றோரையும், இந்நோயால் தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் இழந்துள்ளோரையும் அரவணைப்பதாக மேலும் கூறியுள்ளனர்.
வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோர், குழந்தைகளின் கல்வி, மற்றும், உணவுக்கு எவ்வித வருமானமும் இல்லாதோர், என எவரும் தனிமையில் இல்லை, அவர்களோடு நாங்களும் இருக்கிறோம் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம் என தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மெக்சிகோ ஆயர்கள், இந்த கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளது குறித்தும், தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
நோய்களைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுவரும் இக்காலத்தில், குடும்ப வன்முறைகள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன என உரைக்கிறது ஆயர்களின் கடிதம்.
பொது நலனுக்கு உழைப்பவர்களாகவும், ஆழமான சனநாயக கலாச்சாரத்தோடு செயலாற்றுபவர்களாகவும், மக்கள் அனைவரும் தங்களை அர்ப்பணிக்குமாறும் மெக்சிகோ நாட்டின் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.
 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 July 2020, 14:39