அமேசான் பகுதியின் மழைக்காடுகள் அமேசான் பகுதியின் மழைக்காடுகள் 

அமேசான் பகுதி திருஅவையின் பேரவை என்ற புதிய அமைப்பு

அமேசான் பகுதியின் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், இப்பகுதியில் திருஅவை புதிய வழிகளில் தன் மேய்ப்புப்பணிகளை ஆற்றவும், அமேசான் பகுதி திருஅவையின் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பான CELAM அமைப்பும், அனைத்து அமேசான் திருஅவை வலைத்தள அமைப்பான REPAM அமைப்பும் இணைந்து, அமேசான் பகுதி திருஅவையின் பேரவை (Ecclesial Conference of the Amazon Region) என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளன.

ஜூன் 29ம் தேதி சிறப்பிக்கப்பட்ட புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவன்று இந்த புதிய பேரவையை உருவாக்கிய அறிக்கையில், CELAM அமைப்பின் தலைவர், பேராயர் Miguel Cabrejos Vidarte அவர்களும், REPAM அமைப்பின் தலைவர், கர்தினால் Cláudio Hummes அவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெற்ற அமேசான் பகுதி சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தின் ஒரு விளைவாக, இப்பகுதியின் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், இப்பகுதியில் திருஅவை புதிய வழிகளில் தன் மேய்ப்புப்பணிகளை ஆற்றவும், இந்த புதிய அமைப்பு பெரும் உதவியாக இருக்கும் என்று ஆயர்களின் இவ்வறிக்கை கூறுகிறது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமேசான் பகுதி திருஅவையின் பேரவை அமைப்பிற்கு, பிரேசில் நாட்டு கர்தினால் Cláudio Hummes அவர்கள் தலைவராகவும், பெரு நாட்டைச் சேர்ந்த ஆயர் David Martínez de Aguirre அவர்கள் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமேசான் பகுதி மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணிக்கு முக்கியத்துவம் வழங்கும், புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவன்று, அமேசான் பகுதி திருஅவையின் பேரவை உருவாக்கப்பட்டிருப்பது, திருத்தந்தைக்கு வழங்கப்படும் ஒரு மரியாதையாக அமைந்துள்ளது என்று, CELAM மற்றும், REPAM அமைப்புக்களைச் சேர்ந்த ஆயர்கள் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 July 2020, 14:45