திருநற்கருணை மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்த வணக்கத்திற்குரிய Carlo Acutis திருநற்கருணை மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்த வணக்கத்திற்குரிய Carlo Acutis 

வணக்கத்திற்குரிய Carlo Acutisன் திருநற்கருணை பக்தி

ஓருவர் தன் தோல் நிறத்தை வெண்கல நிறத்திற்கு மாற்றுவதற்கு சூரிய ஒளியை தன் மீது விழச்செய்வதுபோல், திருநற்கருணையின் ஒளி தன் மீது விழ அனுமதித்தால், அவர் புனிதராக மாறுவார் - வணக்கத்திற்குரிய Carlo Acutis

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வணக்கத்திற்குரிய Carlo Acutis என்ற இத்தாலிய இளைஞர், திருநற்கருணையை, 'விண்ணகம் அடைவதற்குரிய துரித வழி' என்று கூறியுள்ளார் என்று, Carlo அவர்களின் புனிதர் பட்ட முயற்சிகளை ஒருங்கிணைக்கும் வேண்டுகையாளர், Nicola Gori அவர்கள், CNA கத்தோலிக்கச் செய்தியிடம் கூறியுள்ளார்.

இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படவிருக்கும் கிறிஸ்துவின் தூய்மைமிகு உடல் மற்றும் இரத்தம் பெருவிழாவையொட்டி, CNA செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த Gori அவர்கள், திருநற்கருணை மற்றும், அன்னை மரியா மீது, இளையவர் Carlo அவர்கள் கொண்டிருந்த பக்தி அனைவரும் அறிந்ததே என்று கூறினார்.

திருநற்கருணையின் ஒளியை விழ அனுமதித்தால்...

ஓருவர் தன் தோல் நிறத்தை வெண்கல நிறத்திற்கு மாற்றுவதற்கு, சூரிய ஒளியை தன் மீது விழச்செய்வதுபோல், திருநற்கருணையின் ஒளியை தன் மீது விழ அனுமதித்தால், அவர் புனிதராக மாறுவார் என்று கூறிய இளையவர் Carlo அவர்கள், திருநற்கருணைப் பேழைக்கு முன் அதிக நேரம் செபித்தார் என்று Gori அவர்கள் கூறினார்.

இளையோர் பலர், திருநற்கருணையைக் குறித்து அதிகம் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில், Carlo அவர்கள், உலகின் பல நாடுகளில், திருநற்கருணையை மையப்படுத்தி நிகழ்ந்த புதுமைகளைத் தொகுத்து, வலைத்தளம் ஒன்றை உருவாக்கினார் என்பதையும் Gori அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

நமது ஆலயங்களை நிரப்புவோம்

இந்த வலைத்தளம், இளையோரின் ஆன்மாக்களுக்கு விடுக்கப்படும் ஓர் அழைப்பு; இதன் வழியே நம் கிறிஸ்தவ அடிப்படைகளை உணர்ந்து, நாம் மீண்டும் நமது ஆலயங்களை நிரப்புவோம் என்ற சொற்களை, இந்த வலைத்தளத்தின் அறிமுகத்தில், வணக்கத்திற்குரிய Carlo அவர்கள் பதிவு செய்துள்ளார்.

Carlo Acutis வாழ்க்கை குறிப்புகள்

Carlo Acutis அவர்கள், 1991ம் ஆண்டு, மே 3ம் தேதி, இலண்டன் மாநகரில் பிறந்து, தன் பெற்றோரின் தாய்நாடான இத்தாலிக்கு, குழந்தைப்பருவத்திலேயே திரும்பிவந்து, மிலான் நகரில் வாழ்ந்து வந்தார். இவர், இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2006ம் ஆண்டு, அக்டோபர் 12ம் தேதி, தன் 15வது வயதில் இறையடி சேர்ந்தார்.

Carlo Acutis அவர்களின் பரிந்துரையால் நடைபெற்ற ஒரு புதுமையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டு, அவரை அருளாளராக உயர்த்துவதற்கு, இவ்வாண்டு பிப்ரவரி 21ம் தேதி, ஒப்புதல் அளித்தார்.

வணக்கத்திற்குரிய Carlo Acutis அவர்கள் அருளாளராக உயர்த்தப்படும் நிகழ்வு, இவ்வாண்டின் வசந்த காலத்தில், இத்தாலியின் அசிசி நகரில், நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தாலும், கோவிட் 19 தொற்றுக்கிருமி உருவாக்கிய நெருக்கடியால், இந்நிகழ்வு, பின்னொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 June 2020, 12:06