காவல்துறையில் சீர்திருத்தங்கள்  வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜூன் 26, Minneapolis நகரில் நடந்த போராட்டம் காவல்துறையில் சீர்திருத்தங்கள் வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜூன் 26, Minneapolis நகரில் நடந்த போராட்டம் 

காவல்துறையில் சீர்திருத்தம் அவசியம், அமெரிக்க ஆயர்கள்

குற்றவியல் நீதித்துறையில் சீர்திருத்தங்கள் இடம்பெறவேண்டும் என்பதை வலியுறுத்தும் விண்ணப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் – அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் காவல்துறையினருக்கு வழங்கப்படும் பயிற்சிகள் சீரமைக்கப்பட வேண்டும் என்று, அரசுக்கு எழுப்பப்பட்டுவரும் பரிந்துரைகள் குறித்து அக்கறை காட்டப்படவேண்டும் என்று, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் மூன்று பணிக்குழுக்களின் தலைவர்கள் இணைந்து, அந்நாட்டு சட்ட அமைப்பாளர்களுக்கு எழுதியுள்ள மடலில், குற்றவியல் நீதித்துறையில் சீர்திருத்தங்கள் இடம்பெறவேண்டும் என்பதை வலியுறுத்தும் விண்ணப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளனர்.

அந்நாட்டில், George Floyd, Rayshard Brooks, மற்றும் பலர், இனவெறிக்குப் பலியாகியுள்ளதைத் தொடர்ந்து, வரலாற்றிலும், இப்போதைய சமுதாயத்திலும் நிலவும் இனப்பாகுபாட்டின் தீமை குறித்து மறுபரிசீலனை மேற்கொள்ளப்பட்டுவரும்வேளை, ஆயர்கள் இந்த மடலை சட்டத்துறையினருக்கு அனுப்பியுள்ளனர்.

உள்நாட்டு நீதி மற்றும் மனித முன்னேற்ற பணிக்குழுவின் தலைவர், பேராயர் Paul Coakley, புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Mario Dorsonville, இனப்பாகுபாட்டிற்கு எதிராகச் செயலபடும் பணிக்குழுவின் ஆயர் Shelton J. Fabre ஆகிய மூவரும் இணைந்து எழுதியுள்ள இம்மடலில், குற்றவியல் நீதி அமைப்பில், இனப்பாகுபாடு, இன்றும் ஒரு பிரச்சனையாக இருந்துவருகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் நீதி நிலவ, ஆயர்கள் தொடர்ந்து உழைப்பார்கள் எனவும், குற்றவியல் நீதித்துறை அமைப்பிலும், நாட்டிலும், அநீதியான இனப்பாகுபாடு களையப்படும் என நம்புவதாகவும் அம்மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 June 2020, 13:37